Last Updated : 23 Dec, 2018 02:43 PM

 

Published : 23 Dec 2018 02:43 PM
Last Updated : 23 Dec 2018 02:43 PM

கே.பி எனும் அபூர்வராகம்! 

தமிழ் சினிமாவில், டைரக்டர்களின் படம் எனப் பேர் கிடைத்தது இயக்குநர் ஸ்ரீதர் படங்களைப் பார்த்துத்தான் என்பார்கள். அதையடுத்து டைரக்டர் டச் என்று எல்லோரும் சொல்லிப் புகழ்ந்ததற்குக் காரணம் கே.பி. எனும் கே.பாலசந்தர்தான்!

எம்.ஜி.ஆர். சிவாஜிகளின் புகழில் குளிர்காயவில்லை. தன் கதையையும் நல்ல கதையையும் மட்டுமே நம்பினார். அடுத்த தலைமுறைக்கு

அதாவது எம்.ஜி.ஆர். சிவாஜி இடத்துக்கு இரண்டு பேரை உருவாக்கியவர் அவர்.

எனக்குத் தெரிந்து கட்டுப்பெட்டியாக அடைக்கப்பட்டு வெளியே வந்த பெண்களை, அச்சு அசலாக வார்த்துக் காட்டியது பாலசந்தர் படங்களே!

எல்லோரும் ஒருபக்கம் போய்க்கொண்டிருந்தபோது இவர் யுடர்ன் அடித்து இன்னொரு பக்கமாகச் செல்வார். ஜெமினிகணேசனை வைத்தும் படம் பண்ணுவார். ஜெய்சங்கரைக் கொண்டும் கதை சொல்லுவார். முதல் இயக்கமான நீர்க்குமிழியில் நாகேஷ்தான் நாயகன்.

கமல், ஜெய்கணேஷ், விஜயகுமார் இருந்தாலும் சுஜாதாவைப் பிரதானமாக்கி, அவர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதையையும் அந்தக் கவிதாவையும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது.

எல்லோரும் எம்.எஸ்.வி. கேவி மகாதேவன் என்று அவர்கள் பக்கம் போகும்போது, வி.குமாரை அடையாளம் காட்டினார். ’காதோடுதான்...’ என்ற பாடல் வி.குமார் இசை என்பது பலருக்கும் தெரியாது. எம்.எஸ்.வி. என்றே நினைத்துக் கொண்டிருந்தார்கள். அதேபோல், வி.எஸ்.நரசிம்மன். மரகதமணி.

எனக்குத் தெரிந்து கருப்பு வெள்ளைப் படங்களை கலர் பட காலகட்டத்திலும் அதிகமாய் எடுத்தது பாலசந்தராகத்தான் இருக்கும்.

இன்றைக்கு ரெண்டு மணி நேர சினிமாவில், காமெடி டிராக், புரியாத அஞ்சு பாட்டு, தூக்கிப் பிடிக்கும் ஹீரோயிஸம். ஆனால் ஹீரோ பேர் மறந்து கேரக்டர் பெயர், கதை, உணர்வு, வலிகளைச் சொல்லும் பாடல், படம் முழுவதும் விரவியிருக்கும் காமெடி... என நிரம்பி வழியும் கே.பி.யின் படங்களில்!

தனக்கு என்ன பிடிக்குமோ... அது அரைக்கை சட்டை, கையில் கயிறு, விபூதி, காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல், சோடாபுட்டி கண்ணாடி என தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் இயக்குநர்களுக்கு மத்தியில், அவள் ஒரு தொடர்கதை விகடகவி கோபால், அவர்கள் ராமனாதன், அபூர்வ ராகங்கள் பிரசன்னா, சிந்துபைரவி ஜே.கே.பி. மனதில் உறுதி வேண்டும் நந்தினி, எதிர்நீச்சல் மாது, வறுமையின் நிறம் சிகப்பு திலீப், நினைத்தாலே இனிக்கும் சந்துரு, அவர்கள் அனு, அபூர்வ ராகங்கள் பைரவி... என ஒவ்வொரு கேரக்டர்களிலும் உயிர்ப்பு... ஜீவன்! அதுதான் கே.பி. டச்!

ஊருக்குப் போய்விட்டதைக் காட்ட ரயிலைக் காட்டுவார்கள் சினிமாவில். ஆனால் பத்துப்பையன்கள், ஒருவர்பின் ஒருவராகச் சட்டையைப் பிடித்துக் கொண்டு, ரயில் மாதிரி செல்வதைக் காட்டுவார். ஒரு வாரத்தைக் காட்ட, படபடவெனப் பறக்கும் தினசரிக் காலண்டரைக் காட்டுவார்கள். கல்கி, விகடன் என ஒவ்வொரு நாளும் வருகிற புத்தகங்களைக் கொண்டே ஒருவாரத்தைக் காட்டியிருப்பார்.

பூவா தலையா படம். அத்தைக்கு கட்டுப்படும் மருமகப்பிள்ளை. தலையாட்டி பொம்மை ஆடுவதையும் பீரோவில் தொங்கும் சாவிக்கொத்தையும் காட்டியிருப்பார்.

படத்தில் இருமல் தாத்தா, அவர்கள் பொம்மை, டெலிபோன், அருவி, ஃபடாபட் எனும் சொல், அவள் ஒரு தொடர்கதை வில்லனின் கை மடக்கி விரிக்கும் ஸ்டைல் என கே.பி. விடும் ரகளைக்கும் அவரின் ரசனைக்கும் பஞ்சமே இல்லை.

அழுகாச்சி கேரக்டராகவே செளகார் ஜானகிக்குக் கொடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா என்று எதிர்நீச்சலிலும் தில்லுமுல்லுவிலும் வாய்ப்பை வழங்க, அதைக் கொண்டு அதகளம் பண்ணியிருப்பார் செளகார் ஜானகி.

எதிர்நீச்சல் படத்தில், திருடி விட்டு மாட்டிக் கொள்வார் தேங்காய் சீனிவாசன். அடித்ததில் விழுந்திருப்பார். போலீஸில் சொல்லிவிடலாம் என்று ஒருவர் சொல்ல, ‘வேணாம் சார். விழுந்துட்டாரு. எழுந்திருக்கும் போது, நல்லவனாத்தான் சார் எழுந்திருப்பாரு’ என்று வசனம்.

அவள் ஒரு தொடர்கதையில், ‘என்ன... பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்ளோ கர்வமா இருக்கா’ என்று விஜயகுமாரின் அம்மா கேரக்டர் சொல்ல, ‘கல்யாணத்துக்கு முன்னாடி கர்வமா இருக்கலாம். கர்ப்பமாத்தான் இருக்கக் கூடாது’ என்று சட்டெனச் சொல்லுவார் சுஜாதா.

நினைத்தாலே இனிக்கும் ஜெயப்ரதா, தலையை ஆட்டி ஆமாம் சொல்லிவிட்டு, பிறகு மெல்ல மெல்ல தலையை இப்படியும் அப்படியும் ஆட்டிவிட்டு, இல்லை என்று சைகையில் சொல்வதை, செய்யாத, செய்து பார்க்காத ரசிகர்களே அப்போது இல்லை.

காட்சி கவிதையாய் இருக்கும். பாடலில் கதையே சொல்லப்படும். வசனத்தில் அவ்வளவு ஷார்ப் வைத்திருப்பார். நடிப்பில் அவ்வளவு யதார்த்தம் குடிகொண்டிருக்கும்.

தட் இஸ் கமால் சொல்லும் சொல்லத்தான் நினைக்கிறேன், எவ்ளோ பெட்டு கேட்கும் கவிதாலயா கிருஷ்ணா, முடிச்சுகள் போடும் நட்ராஜ், கையசைப்பில் வாயசைக்கும் ஜூனியர், ஃபடாபட், ரெண்டு கை பத்தலை எஸ்.வி.சேகர், அந்த திலீப் எனும் கேரக்டரே இல்லாத கேரக்டர், விளக்கை அணைத்து எரிய வைத்து அணைக்கும் லவ் சிக்னல்... எல்லாவற்றுக்கும்

மேலாக தண்ணீர் தண்ணீர் வறட்சியும் அச்சமில்லை அச்சமில்லை அருவியும் பொளேர், ஜிலீர்!

தமிழ் சினிமாவில், திருவள்ளுவரையும் பாரதியையும் இவரளவுக்கு எவரும் கொண்டாடியதே இல்லை. அவர்கள் மீதும் அவர்களின் தமிழின் மீதும் அப்படியொரு காதல் அவருக்கு!

இன்றைக்கு இருக்கிற இயக்குநர்களாகட்டும் இனி வரப்போகிற இயக்குநர்களாகட்டும் கே.பாலசந்தரின் ஒவ்வொரு படங்களும் அவர்களுக்கான பாடங்கள்!

இயக்குநர் சிகரத்தின் நினைவு நாள் இன்று. சிகரம்... சினிமாவுக்குச் சூட்டிய மகுடங்களை நினைவுகூர்வோம்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x