Published : 17 Sep 2014 03:42 PM
Last Updated : 17 Sep 2014 03:42 PM

சாம்பியன் மும்பை இந்தியன்சை வெளியேற்றியது நியூசி.யின் நாதர்ன் நைட்ஸ்

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை தகுதிச் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது.

நேற்று நியூசிலாந்தின் நாதர்ன் நைட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மோசமாக ஆடிய மும்பை இந்தியன்ஸ் 132 ரன்களையே எடுக்க நியூசிலாந்தின் நாதர்ன் நைட்ஸ் 133/4 என்று வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 தகுதிச் சுற்று போட்டிகளிலும் வென்று நாதர்ன் நைட்ஸ் பிரதானச் சுற்றுப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றது.

பாகிஸ்தான் அணியான லாகூர் லயன்ஸ் அணியும் தகுதி பெற்றது. இந்த அணி இலங்கையின் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணியை வெளியேற்றியது.

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் மிகவும் சாதாரணமாக, தரமற்ற முறையில் அமைந்தது. நாதர்ன் நைட் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதீ, மிதவேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் ஸ்டைரிஸ் ஆகியோரது பந்து வீச்சில் திணறிய மும்பை இந்தியன்ஸ் 11வது ஓவரில் 46/5 என்று ஆனது.

சிம்மன்ஸ், ஹஸ்ஸி, ஜலஜ் சக்சேனா, தாரே, ராயுடு ஆகியோர் சடுதியில் பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினர். ஸ்டைரிஸ் போன்ற சாதாரண வீச்சாளரிடம் 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது மும்பை.

தொடக்கத்தில் டிரெண்ட் போல்ட் மற்றும் டிம் சவுதீ அசத்தினர். இவர்கள் வீசியதை புரிந்து கொள்ளவே தடுமாறினர் மும்பை இந்தியன்ஸ் தொடக்க வீரர்கள். இதில் ஹஸ்ஸி 7 ரன்களில் சவுதீயிடம் காலியானார்.

பிறகு சக்சேனா, சிம்மன்ஸ், ஆதித்ய தாரே ஆகியோரை ஸ்காட் ஸ்டைரிஸ் வீழ்த்தினார். போல்ட் மீண்டும் பந்து வீச வந்து ராயுடுவை வீழ்த்தினார். பிறகு ஹர்பஜன் 10 ரன்களை எடுக்க 3 பவுண்டரிகளை அடித்த கெய்ரன் பொலார்ட் 31 ரன்களை எடுக்க, மலிங்கா 3 பவுண்டரிகள் ஒரு சிக்சரை தொடர்ச்சியாக அடிக்க ஸ்கோர் 132 ரன்களை எட்டியது.

இந்த இலக்கை எளிதில் தொடக்க வீரர்களே ஊதினர். டேவ்சிச் மற்றும் கேன் வில்லியம்சன் 9.4 ஓவர்களில் 84 ரன்களைச் சேர்த்தனர். வில்லியம்சன் மீண்டும் அபாரமாக விளையாடி 36 பந்துகளில் 7 பவுண்டரி ஒரு சிக்சர் சகிதம் 53 ரன்கள் எடுத்தார். டேவ்சிச் 39 ரன்கள் எடுத்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 17.2 ஓவர்களில் நாதர்ன் நைட்ஸ் வெற்றி பெற்றது. டேரில் மிட்செல் என்ற வீரர் மலிங்காவின் ஒரே ஓவரில் 15 ரன்கள் விளாசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x