Last Updated : 22 Dec, 2018 06:24 PM

 

Published : 22 Dec 2018 06:24 PM
Last Updated : 22 Dec 2018 06:24 PM

முதல் பார்வை: சிலுக்குவார்பட்டி சிங்கம்

காவல் ஆணையரின் என்கவுன்ட்டர் குறியிலிருந்து தப்பிய ரவுடி சாதாரண கான்ஸ்டபிளிடம் சிக்கி அவஸ்தைப்பட்டால் அதுவே 'சிலுக்குவார்பட்டி சிங்கம்'.

காவல்துறைக்குத் தொடர் தொல்லைகள் தரும் சைக்கிள் ஷங்கரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லத் திட்டமிடுகிறார் காவல் ஆணையர் நரேன். ஆனால், அதிலிருந்து தப்பிக்கும் சைக்கிள் ஷங்கர் (ரவிஷங்கர்) அடையாளம் மறைத்து தலைமறைவு ஆகிறார். முன்னாள் அமைச்சரைக் கொல்ல இந்நாள் அமைச்சர் ஒருவர் சைக்கிள் ஷங்கரிடம் அசைன்மென்ட் கொடுக்கிறார். அதை முடிப்பதற்காகச் செல்லும் சைக்கிள் ஷங்கர் ஒரு நாள் இரவு போலீஸ் காவலில் இருக்க நேரிடுகிறது. அதற்குப் பிறகு தன் அடியாட்களால் காவல் நிலையத்திலிருந்து தப்பும் சைக்கிள் ஷங்கர் அதற்குக் காரணமாக இருந்த கான்ஸ்டபிள் சத்தியமூர்த்தியைக் (விஷ்ணு விஷால்) கொல்ல சபதம் எடுக்கிறார்.

சைக்கிள் ஷங்கருக்கும், கான்ஸ்டபிளுக்கும் நடந்த தகராறு என்ன, எப்படி கான்ஸ்டபிள் சைக்கிள் ஷங்கரை காவலில் தள்ளுகிறார், தப்பித்த சைக்கிள் ஷங்கர் என்ன செய்கிறார், கான்ஸ்டபிள் சத்தியமூர்த்தியின் வியூகத்தால் சைக்கிள் ஷங்கரைப் பிடிக்க முடிந்ததா போன்ற கேள்விகளுக்கு சிரிப்புச் சிரிப்பாய் பதில் சொல்கிறது திரைக்கதை.

நகைச்சுவை கலந்த அதிரடிப் படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு. அதில் சிங்கமுத்து, யோகிபாபுவின் நகைச்சுவை மட்டும் சில இடங்களில் எடுபடுகிறது. மற்றபடி சுவாரஸ்யமற்ற திரைக்கதையால் அலுப்பும், சோர்வுமே மிஞ்சுகிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை இயக்குநர் தன் பெஞ்ச் மார்க் படமாக வைத்து அதைப் போலச் செய்ய கஷ்டப்பட்டிருக்கிறார். அந்தக் கஷ்டம் வெளிப்படையாகவே தெரிந்து ரசிகர்களைப் பதம் பார்க்கிறது.

விஷ்ணு விஷால் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான தேர்வு. தொடைநடுங்கியாகவே இருப்பது,  போலீஸ் அதிகாரிகளுக்கு டீ, டிபன் வாங்கித் தருவது, தைரியசாலி என்று உதார் விடுவது, கராத்தே தெரியாமல் பாவ்லா காட்டுவது, பார்க்கிற பெண்களையெல்லாம் சைட் அடிப்பது என்று ஜாலி கேலி இளைஞனாக நடித்திருக்கிறார்.

ஆனால், சைக்கிள் ஷங்கருக்காப் பயந்து ஓடி ஒளியும் காட்சிகளில் கெட்டப் போடுகிறேன் பேர் வழி என்று பல்வேறு தோற்றங்களில் வந்துபோவதெல்லாம் தேவையே இல்லாத ஆணி. ஆப்பாயிலைத் தட்டிவிட்டதற்காகப் பொங்குவதெல்லாம் காமெடிக்குப் பதில் கடுப்பே வருகிறது. கதையே இல்லாத படங்களில் நடிப்பது குறித்து விஷ்ணு விஷால் இனியாவது பரிசீலனை செய்வது நல்லது.

ரெஜினா நாயகிக்கான பங்களிப்பில் குறை வைக்கவில்லை. மாரிமுத்து, நரேன், கருணாகரன், லிவிங்ஸ்டன், மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் ஆகியோர் பாத்திரம் அறிந்து நடித்துள்ளனர். ஓவியா ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டு ஒரு காட்சியில் வந்து தன் பாட்டுக்குப் போகிறார்.

லியோ ஜேம்ஸின் இசையில் டியோ ரியோ தியா பாடல் ரசிக்க வைக்கும் ரகம். பின்னணி இசை படத்துடன் பொருந்திப் போகிறது. ரூபன் இரண்டாம் பாதியில் சில இடங்களில் தயக்கமே இல்லாமல் கத்தரி போட்டிருக்கலாம்.

சிங்கமுத்துவும், யோகி பாபுவும் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, காவல் நிலையக் காட்சிகளில் சிங்கமுத்துவும், ரவுடி போர்ஷனில் யோகி பாபுவும் பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். இவர்கள் இல்லாவிட்டால் சிலுக்குவார்பட்டியில் சிரிப்பு மிஸ் ஆகியிருக்கும். ஆனால், முழு படத்துக்கு இரண்டு நகைச்சுவைக் காட்சிகளில் திருப்தியும், மனநிறைவும் ஏற்பட்டால் போதாதே.

வில்லன் ஹீரோவின் புகழ் பாடுவதும், அவனது பலத்தைப் பற்றிப் பேசுவதுமே தமிழ் சினிமாவில் அரதப் பழசாகிவிட்ட நிலையில், மீண்டும் அதை தூசு தட்டிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு. அந்த புகழ்பாடும் விதத்தில் புதுமை இல்லாததால் சலிப்பை வரவழைக்கிறது. மற்ற காட்சிகளில் போதாமையும் பற்றாக்குறையும் தென்பட, வளைந்து நெளிந்து குனிந்து களைப்புடனும் எப்போது படம் முடியும் என்ற தவிப்புடம் படம் பார்க்க நேரிடுகிறது. செயற்கைத்தனம், நாடகத் தன்மை, சுருங்கச் சொல்லாமல் இழுவையாக நகரும் திரைக்கதை ஆகியவற்றால் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' பலத்தை இழக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x