Published : 20 Dec 2018 01:37 PM
Last Updated : 20 Dec 2018 01:37 PM

தயாரிப்பாளர் சங்கப் பிரச்சினைக்கு தமிழக அரசு காரணமா? - அமைச்சர் விளக்கம்

தயாரிப்பாளர் சங்கப் பிரச்சினைக்கு தமிழக அரசு காரணமா என்ற கேள்விக்கு  அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் அளித்துள்ளார்.

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் நீயா நானா போட்டி வலுத்து வருகிறது. விஷாலுக்கு எதிராக ஒரு அணியினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டுப் போட்டனர். இது இன்னும் பரபரப்பைக் கிளப்பியது.

இதனிடையே இன்று பூட்டை உடைக்க விஷால் தரப்பினர் வந்தார்கள். ஆனால் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து விஷால் தரப்பினரை போலீசார் கைது செய்தார்கள்.

இந்த நிலையில், பாரதிராஜா தலைமையில் ஒரு குழுவினர், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தனர்.

இந்த நிலையில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்பட்ட பிரச்சினைக்கு அரசு காரணமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் அளித்த பதில்:

தயாரிப்பாளர் சங்கப் பிரச்சினைக்கும் தமிழக அரசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. தயாரிப்பாளர் சங்கத்துக்குள் இருக்கிற பிரச்சினைதானே தவிர, அரசு இதில் தலையிடவே இல்லை.

மேலும் இந்தப் பிரச்சினையை கூர்ந்து கவனித்து வருகிறோம். இதுகுறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x