Published : 19 Dec 2018 03:37 PM
Last Updated : 19 Dec 2018 03:37 PM

CIFF-ல் டிசம்பர் 20 அன்று என்ன படம் பார்க்கலாம்? - அரவிந்தன் பரிந்துரைகள்

THE HEIRESSES / LAS HEREDERAS | PARAGUAY | 2018 | தேவி, பிற்பகல் 2.00 மணி

60 வயதைக் கடந்த இரு பெண்கள், தங்களுடைய பணக்கார குடும்பங்களிலிருந்து பிரிந்து 30 ஆண்டுகளாக ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர். ஒரு சந்தர்ப்பத்தில் இருவருக்கும் கடுமையான நிதி நெருக்கடி ஏற்படவே, தங்களுடைய உடைமைகளை இழக்க ஆரம்பிக்கின்றனர். கடன் காரணமாக, இருவரில் ஒரு பெண் மோசடி புகாரில் சிறைக்கு செல்ல நேரிடுகிறது. அதன்பிறகு, மற்றொரு பெண் அங்குள்ள பணக்கார வயதான பெண்களுக்கு டாக்ஸி ஓட்டி வருமானம் ஈட்டுகிறார். பல ஆண்டுகளாக தன் தோழியின் அரவணைப்பிலும் ஆதரவிலும் இருந்த அவர், புதிய மனிதர்களுடன் பழகுவதன் மூலம் தன்னையே கண்டுணர்கிறார். சிறந்த திரைப்படத்திற்கான விருதை உலகெங்கிலும் பல்வேறு திரைவிழாக்களில் அள்ளிக் குவித்த படம். 31 விருதுகள் 25 பரிந்துரைகள் பெற்ற படம்.

HEBBET RAMAKKA  | KANNADA | 2018 | ரஷிய கலாச்சார மையம், பகல் 12.00 மணி

பெண்கள் வீட்டு வேலை மட்டுமே பார்க்க வேண்டுமே என்ற அரதப்பழமையான கொள்கைகளுடன், அதுவே தனது விதி என்று வாழ்ந்து வருகிறாள் ராமக்கா. அந்த எண்ணத்தை முறியடிக்கும் விதமாக அவள் வாழ்க்கையில் ஒரு புதிய பாதை உருவாகிறது. தனது கணவனால் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெறுகிறாள். தனது குறைகள், தன் மனதில் தான் வைத்திருக்கும் நெறிமுறைகள் எல்லாவற்றையும் தாண்டி ராமக்கா செயல்பட வேண்டும். அவளைச் சுற்றி ஊழல் அரசியல்வாதிகள், ஆண் ஆதிக்கம் எனப் பல சக்திகள் ஆட்டுவிக்கின்றன. ராமக்காவாக இப்படத்தில் நடிகை தாரா தனது சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். 65வது தேசிய திரைப்பட விருதுகள் 2018ல் சிறந்த கன்னடப் படத்திற்கான விருதை ஹெப்பெட் ராமக்கா பெற்றது.

CITY OF GOD |BRAZIL | 2002 | தேவிபாலா, பிற்பகல் 3.30 மணி

உலக சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த படம். ரியோவில் உள்ள சேரிப் பகுதியில் இரண்டு சிறுவர்கள் வளர்கிறார்கள். ஒருவனுக்கு புகைப்படக் கலைஞன் ஆக முயற்சிக்கிறான். மற்றொருவன் கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் ஆகிறான். இருவரும் கடைசியில் என்ன ஆவார்கள்? உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்றது.

WHEN YOU NO LONGER LOVE ME | SPAIN | 2018 | அண்ணா, பகல் 12.00 மணி

வெளியூரில் நகரத்தில் பணியாற்றும் அர்ஜெண்டினிய பெண் ஒருத்தி, சொந்த ஊரான பால்கேவில் தனது தந்தை இறந்ததை கேள்விப்படுகிறாள். உடனே ஊருக்குத் திரும்புகிறாள். தந்தையின் மரணம் இயல்பானதல்ல என்ற உண்மையும் அவளுக்கு தெரியவருகிறது. தனது தந்தையைக் கொன்றவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறாள். மர்மம், த்ரில்லர் என விரியும் திரைப்படத்தில் ஒரு அழகான காதல் கதையும் உண்டு.

CLIMAX | FRANCE |  2018 | அண்ணா, பிற்பகல் 2.30 மணி

இளம் நடனக்கலைஞர்கள் சிலர் நகரில் உள்ள ஒதுக்குப்புறமான பள்ளிக்கட்டிடத்தில் இரவு நேரத்தில் நடன ஒத்திகை நடத்துகிறார்கள். இரவு முழுவதும் பனியில் நடன ஒத்திகை மிகவும் பரபரப்பாக, உற்சாகமாக நடக்கிறது. நடன ஒத்திகை முடிந்து காலையில் வீட்டுக்கு புறப்படுகையில், எஸ்எஸ்டி எனும் போதைமருந்து கையில் கிடைக்கிறது. இதைக் குடிக்கும் நடன கலைஞர்கள் சந்திக்கும் சம்பவங்கள்தான் கதையாகும். கேன்ஸ் திரைப்பட விழாவில் 'டைரக்டர்ஸ் பார்ட்நைட்' பிரிவில் திரையிடப்பட்டது. கேன்ஸ் திரைவிழாவில் ''ஆர்ட் சினிமா விருது'' பெற்ற படம்.

SMUGGLING HENDRIX  | CYPRUS | 2018 | கேஸினோ, பகல் 12.15 மணி

காலம் இசையைப் போற்றிக் காப்பாற்றும். ஆனால், சில இசைக் கலைஞர்களை கைவிட்டுவிடும். இயானிஸ் அப்படிப்பட்ட ஓர் இசைக் கலைஞன். கிரேக்கத்துக்கும் துருக்கிக்கும் இருக்கும் எல்லைப் பிரச்சினை, அவனைத் தொல்லைப்படுத்துகிறது. எப்போதும் பிரச்சினையில் இருக்கும் சைப்ரஸ் நாட்டை விட்டு வெளிநாட்டுக்குச் சென்றுவிட முடிவு செய்கிறான். நாயகன் எடுத்த முடிவை அவன் வளர்க்கும் நாய் ஜிம்மி தடுக்கிறது. அவன் நாட்டை விட்டு விலக முயல, ஜிம்மி வீட்டை விட்டு விலகி ஓடி விடுகிறது. தீவின் கிரேக்க எல்லைக்கும் துருக்கி எல்லைக்கும் நடுவே இருக்கும் ஐக்கிய நாடுகள் நிலப்பரப்புக்குள் நுழைந்து விடுகிறது. மனம் மாறத் தயாராக இல்லாத நாடுகளுக்கிடையே, விலங்குகள் இடம் மாறத் தடை இருக்கிறது. அப்படியென்றால் ஜிம்மி? ஜிம்மியின் மீது தீராத அன்பு கொண்ட இயானிஸ் ஜிம்மியை எப்படியும் தன்னோடு எடுத்துச் செல்ல தீர்மானிக்கிறான். அதற்கு அவனுக்கு உதவ வருகிறார் ஒரு துருக்கிய குடியேறி.  சட்டதிட்டங்களை மீறி, தன் உற்ற நண்பன் ஜிம்மியை மீட்க இயானிஸ் செய்யும் தசாவதார சாகசங்கள் பலித்ததா? இத்திரைப்படம் 3 விருதுகள் பெற்றுள்ளது. 6 பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x