Published : 21 Dec 2018 03:26 PM
Last Updated : 21 Dec 2018 03:26 PM

திரும்பிப் பார்க்கிறோம் 2018: சினிமா பிரபலங்களின் திருமணங்கள்

2018-ம் ஆண்டு திருமணமான சினிமா பிரபலங்களைப் பற்றிய தொகுப்பு இது.

ஜனவரி 22 - நடிகை பாவனா & தயாரிப்பாளர் நவீன்

கேரளாவைச் சேர்ந்த நடிகை பாவனா, ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். நான்கு தென்னிந்திய மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். ‘ரோமியோ’ என்ற கன்னடப் படத்தில் நடித்தபோது, அந்தப் படத்தின் தயாரிப்பாளரான நவீனுக்கும் பாவனாவுக்கும் காதல் மலர்ந்தது.

5 வருடங்களுக்கும் மேலாக இருவரும் காதலித்துவந்த நிலையில், கடந்த வருடம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பாவனாவின் தந்தை பாலச்சந்திரன் மறைவினால் தள்ளிப்போன இந்தத் திருமணம், ஜனவரி 22-ம் தேதி திருச்சூரில் உள்ள திருவம்பாடி கோயிலில் நடைபெற்றது.

மார்ச் 4 - நடிகர் கதிர்

‘மதயானைக் கூட்டம்’ மூலம் நடிகராக அறிமுகமானவர் கதிர். தொடர்ந்து, ‘கிருமி’, ‘விக்ரம் வேதா’, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கதிருக்கும், ஈரோட்டைச் சேர்ந்த சஞ்சனாவுக்கும் மார்ச் 4-ம் தேதி ஈரோடு வேலாயுதசாமி கோயிலில் திருமணம் நடைபெற்றது.

மார்ச் 4 - நடிகர் ரமேஷ் திலக்

‘சூது கவ்வும்’, ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ உள்ளிட்ட பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் ரமேஷ் திலக். இவரும், இவருடன் ஆர்.ஜே.வாகப் பணியாற்றிய நவலட்சுமியும் பல வருடங்களாகக் காதலித்து வந்தனர்.

நவலட்சுமி, பிரபல சண்டை இயக்குநர் ராம்போ ராஜ்குமாரின் மகள். இவர்களுடைய திருமணம் மார்ச் 4-ம் தேதி பெசன்ட் நகரில் உள்ள ஆறுபடை முருகன் கோயிலில் நடைபெற்றது.

நடிகர் ரமேஷ் திலக் - நவலட்சுமி திருமண ஆல்பம்

ரமேஷ் திலக் - நவலட்சுமி திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள்

மார்ச் 8 - உதவி இயக்குநர் கீர்த்தனா பார்த்திபன்

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட பார்த்திபனின் மகள் கீர்த்தனா, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பின்னர், மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இவர், தற்போது தந்தையின் கதை ஆக்கப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

கீர்த்தனாவுக்கும், தேசிய விருதுபெற்ற எடிட்டரான அக்‌ஷய்க்கும் மார்ச் 8-ம் தேதி திருமணம் நடைபெற்றது. அக்‌ஷய், இந்தியில் ‘பீட்சா’ படத்தை இயக்கியவர். தற்போது தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் படம் இயக்கும் வேலையில் இறங்கியுள்ளார்.

கீர்த்தனா- அக்‌ஷய் திருமண ஆல்பம்

கீர்த்தனா- அக்‌ஷய் திருமணத்தில் பங்கேற்ற பிரபலங்களின் புகைப்படங்கள் 1

கீர்த்தனா- அக்‌ஷய் திருமணத்தில் பங்கேற்ற பிரபலங்களின் புகைப்படங்கள் 2

மார்ச் 12 - நடிகை ஸ்ரேயா

2001-ம் ஆண்டில் வெளியான இஷ்டம் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆனவர் ஸ்ரேயா. அதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சல்மான் ருஷ்டியின் நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'மிட்நைட் சில்ட்ரன்' என்ற ஆங்கிலப் படத்தில் நடித்திருக்கிறார்.

ஸ்ரேயாவுக்கும், ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ்வுக்கும் சில வருடங்களுக்கு முன்பு காதல் மலர்ந்தது. இதுகுறித்துக் கேட்டபோது வாய் திறக்காமல் மவுனம் சாதித்தார் ஸ்ரேயா. இந்நிலையில், மார்ச் 12-ம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகின.

மார்ச் 11-ம் தேதி நள்ளிரவு தொடங்கி 12-ம் தேதி அதிகாலை வரை நடந்த திருமண நிகழ்ச்சியில், ஸ்ரேயாவுக்கு நெருக்கமான இந்தி நடிகர், நடிகைகள், நெருங்கிய உறவினர்கள், மணமகன் தரப்பில் சிலர் மட்டும் கலந்துகொண்டுள்ளனர்.

மார்ச் 19 - இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ்

இயக்குநர் பாண்டிராஜிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் பிரசாந்த் பாண்டியராஜ். ‘புரூஸ்லீ’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பிரசாந்த் பாண்டியராஜுக்கும், சங்கீதாவுக்கும் மார்ச் 19-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருச்சியில் உள்ள எஸ்.எம்.ஆர். மஹாலில் (பழைய அலங்கார் தியேட்டர்) இந்த திருமணம் நடைபெற்றது.

மார்ச் 26 - நடிகர் முனீஸ்காந்த்

முனீஸ்காந்தின் இயற்பெயர் ராமதாஸ். ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் இவர் கதாபாத்திரத்தின் பெயர்தான் முனீஸ்காந்த். அந்தப் படத்தின் மூலம் புகழ் பெற்றதால், முனீஸ்காந்த் என்று சொன்னால்தான் இவரை எல்லோருக்கும் அடையாளம் தெரியும். முனீஸ்காந்துக்கும் தேன்மொழிக்கும் வடபழனி முருகன் கோயிலில் மார்ச் 26-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

ஏப்ரல் 18 - நடிகை இஷாரா நாயர்

‘வெண்மேகம்’, ‘பப்பாளி’, ‘சதுரங்க வேட்டை’ உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவர் இஷாரா நாயர். இவருக்கும், துபாயில் வசிக்கும் இந்தியத் தொழிலதிபர் சாஹிலுக்கும் ஏப்ரல் 18-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

இஷாரா நாயர் - சாஹில் திருமணம் ஆல்பம்

மே 8 - நடிகை சோனம் கபூர்

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சோனம் கபூர். நடிகர் அனில் கபூரின் மகளான இவருக்கும், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அஹூஜாவுக்கும் மே 8-ம் தேதி திருமணம் நடைபெற்றது. மும்பை, பாந்த்ராவில் உள்ள சோனம் கபூரின் அத்தை வீட்டில் நெருங்கிய சொந்தபந்தங்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்க, திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

மே 25 - நடிகர் செளந்தரராஜா

‘சுந்தர பாண்டியன்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் செளந்தரராஜா. தொடர்ந்து, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ஜிகர்தண்டா’, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். செளந்தரராஜாவுக்கும், க்ரீன் ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ.வான தமன்னாவுக்கும், மே 25-ம் தேதி மதுரை, உசிலம்பட்டியில் நடைபெற்றது.

நடிகர் சவுந்தரராஜா - தமன்னா திருமண புகைப்படங்கள்

நடிகர் சவுந்தரராஜா - தமன்னா திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள்: ஆல்பம் 1

நடிகர் சவுந்தரராஜா - தமன்னா திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்கள்: ஆல்பம் 2

ஜூன் 22 - நடிகர் சத்யா திருமணம்

நடிகர் ஆர்யாவின் தம்பியான சத்யா, ‘புத்தகம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து ‘அமர காவியம்’, ‘எட்டுத்திக்கும் மதயானை’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது அமீர் இயக்கத்தில் ஆர்யாவுடன் இணைந்து ‘சந்தனத்தேவன்’ படத்தில் நடித்து வருகிறார்.

சத்யாவுக்கும், துபாயைச் சேர்ந்த பாவனாவுக்கும் காதல் மலர்ந்த நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் ஜூன் 22-ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற்றது.

ஆகஸ்ட் 30 - நடிகை சுவாதி

‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் சுவாதி. தொடர்ந்து, ‘போராளி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சுவாதியும், மலேசியன் ஏர்லைன்ஸில் பைலட்டாகப் பணிபுரியும் விஷாஸும் காதலித்துவந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் ஆகஸ்ட் 3-ம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது.

செப்டம்பர் 3 - நடிகர் டேனியல்

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் ‘குவார்ட்டர்’ ஜோக் மூலம் பிரபலமானவர் டேனியல். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள இவர், இந்த வருடம் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டார்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட உடனேயே, தன்னுடைய காதலியான டெனிஷாவைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டார். அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, ‘வீட்டில் சில பிரச்சினைகள் இருப்பதால் இந்த சந்தோஷத்தை நேரடியாக உங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியவில்லை’ எனத் தெரிவித்தார் டேனியல்.

அக்டோபர் 22 - பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலட்சுமி

கேரள மாநிலம் வைக்கம் என்ற ஊரில் பிறந்தவர் விஜயலட்சுமி. பிறக்கும்போதே மாற்றுத்திறனாளியாகப் பிறந்த இவர், கர்நாடக இசை பயின்றவர். மேலும், ஒற்றை நரம்பை மட்டுமே கொண்டு வாசிக்கப்படும் காயத்ரி வீணையை வாசிப்பதிலும் வல்லவர். ‘செல்லுலாய்டு’ என்ற மலையாளப் படத்தில் வைக்கம் விஜயலட்சுமி பாடிய ‘காட்டே காட்டே’ பாடல், அவருக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது. இந்தப் பாடலுக்காக கேரள அரசின் விருதையும் (சிறப்புக் கவனம்) பெற்றார். அதன்பிறகு மலையாளம் மற்றும் தமிழில் ஏகப்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.

வைக்கம் விஜயலட்சுமிக்கும், மிமிக்ரி கலைஞரான கேரளாவைச் சேர்ந்த அனூப் என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. விஜயலட்சுமியின் குடும்ப நண்பரான அனூப், இன்டீரியர் டிசைனர். செப்டம்பர் 10-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், அக்டோபர் 22-ம் தேதி திருமணம் நடைபெற்றது. விஜயலட்சுமியின் பிறந்த இடமான வைக்கமில் உள்ள மஹாதேவா கோயிலில், கேரள பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

நவம்பர் 6 - நடிகர் ஹரீஷ் உத்தமன்

விஷாலுடன் ‘பாண்டிய நாடு’, ஜெயம் ரவியுடன் ‘தனி ஒருவன்’, விஜய்யுடன் ‘பைரவா’, விஜய் சேதுபதியுடன் ‘றெக்க’ உள்ளிட்ட பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளவர் ஹரீஷ் உத்தமன்.

ஹரீஷ் உத்தமனும், மும்பையைச் சேர்ந்த செலிபிரிட்டி மேக்கப் ஆர்ட்டிஸ்ட் அம்ரிதாவும் சில வருடங்களாகக் காதலித்துவந்த நிலையில், நவம்பர் 6-ம் தேதி குருவாயூர் கோயிலில் எளிமையாகத் திருமணம் செய்து கொண்டனர்.

நவம்பர் 14 & 15 - நடிகை தீபிகா படுகோனே & நடிகர் ரன்வீர் சிங்

பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் இருவரும் பல வருடங்களாகக் காதலித்து வந்தனர். இவர்களுடைய திருமணம் எப்போது எனப் பலரும் கேள்வி எழுப்பிவந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவரும் ஒருசேர தங்களுடய திருமணச் செய்தியை ட்விட்டரில் அறிவித்தனர்.

இத்தாலியிலுள்ள லேக் கோமா நகரில் இவர்களது திருமணம் நவம்பர் 14 மற்றும் 15-ம் தேதிகளில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. முதல்நாள் கொங்கினி கலாச்சாரப்படியும், அடுத்த நாள் சிந்தி கலாச்சாரப்படியும் நடைபெற்ற இந்த திருமணத்தில், உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர்.

நவம்பர் 19 - நடிகை சுஜா வருணி & நடிகர் சிவகுமார்

‘ப்ளஸ் 2’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சுஜா வருணி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளார். கடந்த வருடம் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டார்.

இவரும், ‘சிங்கக்குட்டி’, ‘புதுமுகங்கள் தேவை’ போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த சிவகுமாரும் காதலித்து வந்தனர். சிவகுமார், நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனும் ஆவார். இவர்கள் இருவருக்கும் சென்னையிலுள்ள க்ரவுன் ப்ளாஸா ஹோட்டலில் நவம்பர் 19-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

டிசம்பர் 1 - நடிகை பிரியங்கா சோப்ரா

விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. பின்னர், இந்தியில் நடிக்கத் தொடங்கி, தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். அத்துடன், ஹாலிவுட் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

பாப் பாடகர் நிக் ஜோன்ஸுக்கும், பிரியங்கா சோப்ராவுக்கும் இடையில் காதல் மலர்ந்த நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் ஜோத்பூர் அரண்மனையில் திருமணம் நடைபெற்றது. டிசம்பர் 1-ம் தேதி கிறிஸ்தவ முறைப்படியும், 3-ம் தேதி இந்து முறைப்படியும் திருமணம் நடைபெற்றது.

டிசம்பர் 12 - நடிகை சாந்தினி & நடன இயக்குநர் நந்தா

கே.பாக்யராஜ் இயக்கிய ‘சித்து +2’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாந்தினி. தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இவரும், நடன இயக்குநரான நந்தாவும் பல வருடங்களாகக் காதலித்து வந்தனர். இருவீட்டார் சம்மதத்துடன் திருப்பதியில் இவர்கள் திருமணம் டிசம்பர் 12-ம் தேதி நடைபெற்றது.

நடிகை சாந்தினி - நடன இயக்குநர் நந்தா திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பிரபலங்களின் புகைப்படங்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x