Published : 04 Dec 2018 06:51 PM
Last Updated : 04 Dec 2018 06:51 PM

சிவகார்த்திகேயனின் ‘கனா’: வருகிற 21-ம் தேதி ரிலீஸ்

சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள முதல் படம் ‘கனா’. அவருடைய கல்லூரித் தோழரும், நடிகர், பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகங்கள் கொண்டவருமான அருண்ராஜா காமராஜ், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டராக ஆக விரும்பும் மகளுக்கும், அதற்கு ஆதரவாக இருக்கும் தந்தைக்கும் இடையிலான சம்பவங்கள்தான் படத்தின் கதை. அப்பாவாக சத்யராஜும், மகளாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்துள்ளனர்.

சிவகார்த்திகேயனின் இன்னொரு கல்லூரித் தோழரான திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். இவர் ஏற்கெனவே ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியான ‘மரகத நாணயம்’ படத்துக்கு இசையமைத்துள்ளார். மோகன்ராஜன், ஜிகேபி, ராபிட் மேக், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இந்தப் படத்தின் இசை உரிமையை சோனி மியூஸிக் நிறுவனம் வாங்கியுள்ளது.

பி.தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்குநராக லால்குடி என்.இளையராஜா பணியாற்றியுள்ளார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து கலையரசு என்பவர் படத்தைத் தயாரித்துள்ளார். ‘கனா’ என்பதற்கு கீழே ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என டேக்லைன் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தப் படம் வருகிற 21-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தேதியில் தனுஷின் ‘மாரி 2’, விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’, ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’ ஆகிய படங்களும் ரிலீஸாக இருக்கின்றன.

4 பெரிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸாவதால், அதிகமான திரையரங்குகளைக் கைப்பற்ற பலத்த போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x