Last Updated : 17 Dec, 2018 01:11 PM

 

Published : 17 Dec 2018 01:11 PM
Last Updated : 17 Dec 2018 01:11 PM

தமிழ்ப் படங்களுக்கு அதிகரிக்கும் மவுசு: இந்தி டப்பிங் உரிமைக்கு கடும் போட்டி

சமீபகாலமாக பல படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விலங்குகள் அல்லது திகில் உணர்வு  ஆகியவை இடம்பெற்றிருக்கும். இதன் பின்னணியில் ஒரு காரணம் இருக்கிறது.

தமிழ்த் திரையுலகில் சில காலங்களுக்கு முன்பாக, படத்தின் நாயகன் - இயக்குநர் ஆகியவற்றை முடிவு செய்வார்கள். அப்போது, முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்தக் கூட்டணிக்கு தொலைக்காட்சி உரிமை இவ்வளவு விலை என்று கூறும். உடனே, யார் அதிகமாக கூறுகிறார்களோ அவர்களுக்கு தொலைக்காட்சி உரிமையைக் கொடுத்துவிடுவார்கள். அதன் மூலம் வரும் பணத்தை வைத்து நாயகி, ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட கூட்டணியை முடிவு செய்து முன்பணத்தை வழங்கி படப்பிடிப்புக்குச் சென்றுவிடுவார்கள். இப்படித்தான் தமிழ்த் திரையுலகம் இயங்கி வந்தது.

ஆனால், தொலைக்காட்சி உரிமம் இப்போது அப்படியல்ல. படம் வெளியாகி ஹிட்டானவுடன் தான் தொலைக்காட்சி உரிமம் குறித்தே பேசத் தொடங்குகிறார்கள். இதிலிருந்து ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு இதிலிருந்து விதிவிலக்கு. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே, தொலைக்காட்சி உரிமம் விற்பனை மூலம் வந்த பணத்தை வைத்து படப்பிடிப்பு நடத்தினார்கள். இப்போது அது இந்தி டப்பிங் உரிமம் விற்பனை என்று மாறிவிட்டது.

சமீபமாக விலங்குகள், திகில் கொண்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களாக வெளியிட்டு வருகிறார்கள். அதற்கு காரணம் இந்தி உரிமம் விற்பனை. ‘கூர்கா’, ‘வாட்ச்மேன்’, ‘ஜிப்ஸி’, 'மான்ஸ்டர்’, ‘மெஹந்தி சர்க்கஸ்’, ‘ஆடை’, ‘கொரில்லா’, ‘தர்மபிரபு’, ‘இருட்டு’, ‘ஜாக்’ உள்ளிட்ட பல படங்கள் ஃபர்ஸ்ட் லுக்கே இதற்கு சாட்சி.

விலங்குகள் சார்ந்த படங்களின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் போது, இந்தி டப்பிங் உரிமத்தை தானாக முன்வந்து வாங்கிவிடுகிறார்கள். இதில், பல படங்களுக்கு இன்னும் படப்பிடிப்பே தொடங்கவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

'கூர்கா’ மற்றும் ‘ஆடை’ ஆகிய படங்களின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான அன்றே, இந்தி டப்பிங் உரிமத்தை கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றியிருக்கிறார்கள். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே போஸ்டர் மூலம் கவன ஈர்ப்பு, கதைக்களம் ஆகியவற்றை வைத்தே இந்தி டப்பிங் உரிமத்தைக் கைப்பற்றி விடுவதால், அதை வைத்து படப்பிடிப்பை எளிதில் முடித்துவிடுகிறார்கள்.

தொலைக்காட்சி உரிமம் போனால் என்ன, இந்தி டப்பிங் உரிமம் இருக்கிறதோ என்ற சந்தோஷத்தில் பல தயாரிப்பாளர்கள் இப்போது விலங்குகள் சார்ந்து ஏதாவது கதை இருக்கிறதா என இறங்கியிருக்கிறார்கள். ஆகவே, இயக்குநர்களே விலங்குகள் சார்ந்து  கதை எழுதி வைத்திருந்தால் இது உங்களுக்கான பொற்காலம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x