Published : 19 Dec 2018 03:35 PM
Last Updated : 19 Dec 2018 03:35 PM

2019-ல் கலந்துரையாடலுக்கு முக்கியத்துவம்!- தங்கராஜ் நேர்காணல்

35 ஆண்டுகாலமாக ரிசர்வ் வங்கி அதிகாரியாக பணியாற்றிய தங்கராஜ், திரைப்படங்கள் மேலிருக்கும் ஆர்வத்தினால் பிலிம் சொசைட்டியில் ஈடுபட்டு 16 ஆண்டுகளாக கடின முயற்சியால் வெற்றிகரமாக சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்தி வருகிறார். சர்வதேச திரைவிழா குறித்து அவருடன் சிறிது நேரம்

16வது CIFF பற்றி உங்கள் கருத்து. சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு புதிதாய் என்ன உள்ளது?

ஐகாஃப் என்பது ஒரு பிலிம் சொசைட்டி. இதில் 400 உறுப்பினர்கள் உள்ளனர். இந்தியாவிலே சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒன்றுதான் ஒரு பிலிம் சொசைட்டியால் நடத்தப்படுகிறது. இதில் அரசாங்கம் எங்களுக்கு ஊக்கத்தொகையாக மானியம் அளித்து உதவுகிறது. எங்களது பட்ஜெட் 2 கோடியாக இருந்தாலும், 1 கோடிக்குள்ளேயே முடிக்க முயற்சி செய்வோம். குறைந்த செலவில் மக்கள் அனைவருக்கும் உலக சினிமாக்களை திரையிட்டு காட்டுவது என்பது எங்களது நோக்கம். இந்த திரைப்பட விழா மூலம் திரைத் துறையினரும், மாணவர்களும் தமது திறமைகளை வளர்த்துக்கொள்ள பாடமாக இருக்க உலக சினிமாக்கள் திரையிடப்படுகின்றன. இந்த ஆண்டு அதிகளவில் ரசிகர்கள் பதிவு செய்துள்ளனர்.

திரைப்பட விழாக்களில், திரைக்குப் பின் உழைக்க கூடியவர்களின் உழைப்பும், அவர்களை பற்றியும் சொல்லமுடியுமா?

இது ஒரு பிலிம் சொசைட்டி. இதில் தலைவர், துணை தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் என்று குழு உறுப்பினர்கள் உள்ளனர். அனைத்து முக்கிய முடிவுகளையும் இவர்கள்தான் எடுப்பார்கள். விழா சமயங்களில் கூடுதல் நிர்வாகத்திற்க்காக சிலர் பொறுப்பெடுத்துக் கொள்வர். அங்கு திரையரங்கில் பதிவுகளை கண்காணித்துக்கொள்ள குழு உறுப்பினர்கள் வேலை செய்வர். பத்திரிகைகளை தொடர்புகொள்ள பொது உறவு அதிகாரி நிகில் முருகன் உள்ளார். திரையரங்குகளை நான் முழு கவனத்துடன் தேர்வு செய்கிறேன். மிக அருகாமையில் என்று கருதினால் தேவி, அண்ணா, கேஸினோ மட்டுமே சாத்தியமாகும். இதில் மட்டும் சுமார் 2000 பேர் உள்ளடங்கும். வணிகவளாக திரையரங்குகளில் பார்வையாளர் அமரும் இருக்கை எண்ணிக்கை குறைவாக உள்ளதால் அங்கு செல்வதில்லை.

உலகத் திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் விதம், சில படங்கள் நல்லதாகவும், சில படங்கள் மக்களால் ரசிக்கப் படாததாகவும் இருக்கின்றன. உங்களுக்கு நிறைவு உண்டா?

படம் தேர்வு செய்வதில் எங்களுக்கு முழு நிறைவு உண்டு. ஒரு படத்தை தேர்வு செய்வதற்க்கு முன், அதை நாங்கள் 3 பேரிடம் பார்க்கச் சொல்லி அனைவரது கருத்தையும் கேட்டு கலந்து ஆலோசித்து தேர்ந்தெடுக்கப்படும். அனைத்துப் படங்களும் ஏதேனும் ஒரு பாணியில் சிறப்பம்சம் கொண்டதால் மட்டுமே திரையிடப்படுகிறது. ஜனவரி மாதம் தொடங்கினால், டிசம்பர் வரை தொடர்ந்து வேலை இருக்கும். பல ஏஜென்ட்டுகளை சந்தித்து, படத்திற்கான விலையைப் பேரம் பேசி வாங்குவதும், இங்குள்ள வெளிநாட்டு தூதரகங்களும் அவர்களது கலாச்சாரத்தை பரப்புவதற்காக அவர்களே முன்வந்து உதவுகின்றன. பிற திரைப்பட விழாக்களில் விருது பெற்ற படங்களும், முக்கியமான படங்களை மட்டும்தான் தேர்ந்தேடுப்போம்.

படங்கள் திரையிடல் தவிர, படக்குழுவினருடன் கலந்துரையாடலோ, பார்வையாளர்களுக்கிடையே கலந்துரையாடலுக்கான வாய்ப்பு குறைவாக இருக்கிறதே.

பார்வையாளர்களுக்கிடையே கலந்துரையாடல் என்று வைத்தால் அனைவரும் அங்கேயே அமர்ந்துவிடுவர். பெரிய டைரக்டரை அழைத்து வருவதில் பல சிக்கல்கள் உள்ளது. கலந்துரையாடலின் பொழுது அடுத்த படத்திற்காக எழுந்து சென்றால் அது ஒரு விதமான அதிருப்தியை வெளிப்படுத்தும். ஒரு டைரக்டரின் பிரத்யேக கலந்துரையாடலுக்கு முயற்சி செய்யலாம், ஆனால் அதற்கு நிறைய செலவாகும். அப்படி கலந்துரையாடல் நிகழ்த்தினால், வேறு எங்கும் படங்கள் திரையிடக்கூடாது. அச்சமயத்தில் அனைவரையும் அமரும் அளவுக்கு இங்கு திரையரங்கு வசதி கிடையாது. இந்த முறை தமிழ் டைரக்டர்கள் வைத்து இரு கலந்துரையாடல் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளோம்.

திரைப்பட விழா நடத்துவதில் ஏற்படும் சிக்கல்கள் என்ன?

என்னைப் பொறுத்த வரை சிக்கல்கள் என்று ஒன்றுமே கிடையாது. நாங்கள் முறையாக செயல்படுகிறோம். என்னிடம் செப்டம்பர் மாதத்தில் 1 கோடி ரூபாய் தந்தால், எந்த தயவுமின்றி தன்னிசையாக அனைத்து வேலைகளையும் முடித்துவிடுவேன். பட ஏஜென்டுகளுக்கு எல்லா திரைப்பட விழாக்களை பற்றி நன்கு அறிவர். அவர்களிடம் படத்திற்கான பணத்தை செலுத்திவிட்டால், நாம் இங்கு திரையிடலாம். அனைத்துத் திரைப்பட விழாக்களுக்கும் நான் செல்வதால், எனக்கு பல ஏஜெண்டுகளிடம் தொடர்பு உண்டு. விழாவை நடத்த 3 சட்ட ரீதியான ஒப்புதல்கள் பெற வேண்டும்.

1. மாநகராட்சியிடமிருந்து பொழுதுபோக்கு விலக்கு பெற வேண்டும்.

2. மத்திய அமைச்சகத்தில் இருந்து தணிக்கைக் குழு விலக்கு பெற வேண்டும்.

3. 5 காட்சிகள் திரையிடுவதற்கு காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.

இதை முன்கூட்டியே செய்து விட்டால் வேறு எந்த சிக்கல்களும் கிடையாது.

16 ஆண்டுகளாக நடக்கும் இந்த திரைப்பட விழா தமிழ் சினிமாவிலோ, தமிழ் ரசிகளுக்கிடையே ஏற்படுத்திய தாக்கம் என்ன?

எங்களுடைய ஒரே நோக்கம் உலகத்தரம் வாய்ந்த சினிமாக்களை இங்கு திரையிட்டு தமிழ் சினிமாவும் அதே போல் பரிணாம வளர்ச்சி அடையவேண்டும் என்பதே. திரைப்படத் துறையினர் கண்டுகளித்து அவர்கள் மென்மேலும் திறமைகளை வளர்த்துக்கொண்டால் எங்களுக்கு முழுதிருப்தி. அதற்காகத்தான் அவர்களுக்கு சலுகை அளிக்கப்படுகிறது. 2003 டிசம்பர் 1-7ம் தேதியில் நாங்கள் முதன்முதலாக 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் 17 நாடுகளில் இருந்து 63 திரைப்படங்கள் பைலட், பிலிம் சேம்பர் திரையரங்கில் நடத்தினோம். அதில் மொத்த செலவு 5 லட்சம் போக, மீதமுள்ள தொகையில் நாங்கள் சொந்தமாக இந்த அலுவலகத்தை அண்ணா சாலையில் வாங்கினோம். பிலிம் சொசைட்டிக்கு சொந்தக் கட்டிடம் இருக்கும் பெருமை எங்களுக்குரியது. 2011ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா எங்களுக்கு மானியம் வழங்கிய பின், அரசு சார்பாக நாங்கள் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்டார்.

கலைவாணர் அரங்கம் இருந்த இடத்தில் நவீன வசதிகொண்ட ஒரு மல்டிப்ளெக்ஸ் திரையரங்கம் அமைத்துத்தருமாறு கோரினேன். அடுத்த ஆண்டு பட்ஜெட்டிலே 63 கோடி ரூபாய் ஒதுக்கிட்டு எங்களது கோரிக்கையை நிறைவேற்றினார்.

விழா நடத்தும் பொழுது நிறைய பாராட்டுகளும், விமர்சனங்களும் உண்டு. விமர்சனங்களை எவ்வாறு கையாளுகிறீர்கள்?

விமர்சனங்கள் வரவேற்கத்தக்கது. அது என்னை மேலும் வளர்த்துக்கொள்ள உதவும். ஏதாவது நான் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் கண்டிப்பாக செய்வேன். இந்த ஆண்டு நான் கேள்விப்பட்டது, திரைத்துறையினர் யாருமின்றி விழா நடத்துகிறார்கள் என்று. நடிகர் சங்கம், இயக்குனர்கள், தயாரிப்பாளர் சங்கம், என திரைத் துறையினர் அனைவரையும் அழைத்தேன். யாரும் விருப்பம் காட்டாததற்காக நான் என்ன செய்ய முடியும். ரெட் கார்பெட் ஷோ என்பது வி.ஐ.பி க்கான தனியாக திரையிடப்படும் காட்சி. பொதுமக்களுக்கு திரையிடப்பட்ட பின் தான் அந்த படங்கள் அவர்களுக்கும் திரையிடப்படும். அவர்களுக்கு என்று எந்த தனிப்பட்ட சிறப்பம்சங்களும் கிடையாது.

வெளியூரிலிருந்து வரும் ரசிகர்களுக்கு ஏதேனும் வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தி தரும் வாய்ப்புகள் உள்ளதா?

முந்தைய ஆண்டுகளில் நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்தது உண்டு. ஆனால் அது அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லாததால், அவர்களே பார்த்துக் கொள்கிறோம் என்றனர். நிறைய நண்பர்கள் அருகாமையில் இருக்கும் இடத்தைக் கேட்டு, அவர்களுக்கு ஏற்ற ஹோட்டலில் தங்குகின்றனர். யாரேனும் உதவி வேண்டி எங்களை அணுகினால், நாங்கள் உதவுவதற்கு தயாராக இருக்கிறோம்.

இனிவரும் சென்னை சர்வதேச திரைப்பட விழாக்களில் என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்?

அடுத்த ஆண்டில், கலந்துரையாடல் நிகழ்த்த ஏற்பாடு செய்கிறோம். ஒரு வெளிநாட்டு இயக்குநருடன் பிரத்யேக கலந்துரையாடல் நடத்த முயற்சி செய்கிறோம். வெளிநாட்டு பிரதிநிதிகளை ஈடுபடுத்த செலவுகள் அதிகம். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். இந்த ஆண்டு ஏற்பட்ட சப்-டைட்டில் பிரச்சனைகளை சரிப்பார்த்துக் கொள்கிறோம்.

சுப்ரமணி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x