

ஒவ்வொரு நாளும் படங்களை ஓடி ஓடிப்பார்க்கிறோமே..இதுபோல உலகத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்கள் நடக்கின்றன. அந்த விழாக்களில் நம் படங்களை வெளிநாட்டவர்கள் ஓடி ஓடிப் பார்க்கிறார்களா? அவர்கள் எடுத்த படங்களை நாம் வரிசையில் நின்று பார்க்கிறோம். அவர்கள் நம் படங்களை அப்படிப் பார்க்கிறார்களா?
இல்லை என்பதுதான் உண்மை. ஏனெனில் உலகப்பட விழாக்களில் இந்திய சினிமாக்களின் பங்களிப்பு என்பதே பெரும்பாலும் இல்லை. மேலும் இந்தியப்படம் என்கிற பெருமையை இந்திப் படங்களும்,கொஞ்சம் வங்காளப்படங்களும், பிறகு மராத்தி,அஸ்ஸாம்,மலையாளப் படங்களும் எடுத்துக் கொள்கின்றன. நம் தமிழ்ப்படங்கள் சில நேரங்களில் இந்திய எல்லையை, பல நேரங்களில் தமிழக எல்லையைக் கூடக் கடப்பதில்லை. ஏன்?
இந்தக் கேள்விக்கான பதில் உங்களிடம் இருக்கிறதா? உலகுக்கே சவால் விடும் தொழில் நுட்பம் நம்மிடம் இருக்கிறது. முதல் தரமான தொழில் நுட்பக்கருவிகள் இருக்கின்றன. பிறகு ஏன் தமிழ்ப் படங்கள் சர்வதேச சந்தையில் பொருட்படுத்தப்படுவதில்லை. வணிக ரீதியாக இந்தியப் படங்களில் சில சீனாவிலும் ஜப்பானிலும் கவனம் பெறத்துவங்கி இருக்கின்றன என்றாலும் தர வரிசைப் பட்டியலில் நம் படங்களின் நிலை என்ன?
தமிழில் பெருமைக்குரிய இலக்கியங்கள் இருக்கின்றன. சிற்பக் கலையிலும் கலாச்சாரத் திலும் புராதனத்திலும் உலகுக்கே வழிகாட்டியதாக பெருமைகொள்ளும் நாம் திரைப்படத் துறையில் எந்த இடத்தில் இருக்கிறோம்?
நாம் மிகச்சிறந்த படங்கள் என்று கருதுவதைக்கூட ‘after all an indian film‘ என்று தான் உலகம் பார்ப்பதாக சத்யஜித்ரே தனது Our films their films நூலில் எழுதுகிறார். அவர் ஒரு இந்தியப் படத்துக்கு என்ன தேவை? ஏன் நம் படங்கள் வெளிநாட்டில் அதிகக் கவனம் பெறுவதில்லை என்பது குறித்து தொடர்ந்து பேசியும் இருக்கிறார்.
நான் இரானிய இயக்குனர் மக்மல்பஃபைச் சந்திக்கும்போது இந்தியப்படங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டேன்.இந்தியப்படங்கள் என்று எதைச் சொல்கிறீர்கள் பாட்டும் சண்டையும் இருக்கிற So called படங்களையா? நான் பதேர் பாஞ்சாலி பார்த்திருக்கிறேன். அதைக் கடந்து நல்ல படங்கள் இப்போது எடுக்கிறீர்களா அப்படி இருந்தால் சொல்லுங்கள் உடனே பார்க்கிறேன்’ என்றார்.
அர்மீனியாவில் ‘டுலெட்’ படம் சர்வதேசப் போட்டியில் இருந்தது. அங்கு நடந்த பத்திரிக்கை யாளர் சந்திப்பில் ஒரு பெண் நிருபர் இந்தியப் படம் என்கிறீர்கள் பாட்டு இல்லாமல் எப்படி படத்தை எடுக்க முன்வந்தீர்கள் என்று கேட்டார். பாட்டு இல்லாமல் நாங்கள் பல வருஷங்க ளாகப் படம் எடுக்கிறோம் என்று சொன்னேன். ‘எங்கள் கலாச்சாரத்தில் உங்கள் நாட்டுக்கு இணையாக இசையும் நடனமும் இருக்கிறது. ஆனால் நாங்கள் அதை சினிமாவுக்குள் நுழைப்பதில்லை.ஆனால் இந்திய சினிமாவில் மட்டும் ஏன் பாட்டையும் நடனத்தையும் சினிமாவுக்குள் இணைக்கிறீர்கள்? என்று கேட்டார்.
அந்த விழாவில்தான் ஆஸ்கார் விருது பெற்ற இரானிய இயக்குனர் அஸ்கர் பர்ஹதியைச் சந்தித்தேன். அவர் நடுவர் குழுவில் இருந்ததால் ‘டுலெட்’ பார்த்திருந்தார். ‘உங்கள் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது இந்தியாவில் இருந்து இப்படிப் படங்கள் எடுக்கத் துவங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டுலெட் மாதிரியான படங்கள் எடுக்க இந்தியாவில் தயாரிப்பு நிறுவனங்கள் முன் வருவது ஆச்சரியமாக இருக்கிறது என்று சொன்னார். ’எந்த நிறுவனமும் வரவில்லை. நாங்களேதான் தயாரித்தோம்..’ என்று சொன்னதும் அதுதானே என்பது போலப் புன்னகைத்தார்.
உலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் தமிழ்ப்படம் என்றால் ஒரு ஆச்சர்யம். ஒரு புன்னகை. ஒரு கேள்வி. பிரான்ஸில் ஒரு திரைப்பட விழாவில் சீனாவின் பெண் இயக்குனர் லூயி டேங் என்பவர் ‘டுலெட்’ பார்த்துவிட்டு ‘ உங்கள் குடும்பங்கள் இவ்வளவு அழகானதா? என்ன மொழி உங்களுடையது?’ ‘தமிழ்’ ’இந்தியாவின் எந்தப் பகுதியில் அது பேசப் படுகிறது?’ என்று கேட்டார்.சொன்னேன்.
கொல்கத்தாவில் ‘டுலெட்’ சிறந்த இந்தியப் படத்துக்கான விருது வாங்கியதும் இதே கேள்வியை ஒரு ஐஸ்லாந்து இயக்குனரும் கேட்டார். ’உங்கள் படம் என்ன மொழி? ‘ ‘தமிழ்’. அடுத்து அவர் கேட்ட கேள்வியை நான் எப்போதும் மறக்கமாட்டேன். ‘‘ அந்த மொழியில் படங்கள் எடுக்கிறீர்களா?’
நேர்காணல்கள்,பத்திரிக்கையாளர் சந்திப்புகள் எல்லாவற்றிலும் கேட்கப்படும் இன்னொரு கேள்வி.’இதுமாதிரி படங்களுக்கு உங்கள் ஊரில் தியேட்டர் கிடைக்கிறதா? ‘ என்பதுதான். நம் ஊர் என்றால் உலகம் எப்படிப் பார்க்கிறது?தமிழ் சினிமா என்றால் உலகம் என்ன நினைக்கிறது? நம்மிடம் திறமையாளர்கள் இல்லையா? படைப்பாளிகள் இல்லையா? எல்லாம் இருந்தும் நாம் ஏன் இன்னும் சர்வதேச முயற்சிகளைச் செய்து பார்க்கவில்லை?
Cold war படம் பார்த்திருப்பீர்கள். அதில் எப்படிக் கதை சொல்கிறார்கள்?அந்தப் படத்தில் இசையை எப்படிப் பயன் படுத்தி இருக்கிறார்கள்? ஒளிப்பதிவு எப்படி இருக்கிறது? கேட்டால் இதுமாதிரிப் படம் எடுத்தால் நம் ஊரில் பார்க்க மாட்டார்கள் என்று சொல்வார் கள். இதுபோல நாம் எத்தனை படம் எடுத்தோம்? அவர்கள் பார்க்காமல் போனார்கள்?
கோவாவில் ‘டுலெட்’ திரையிடல் முடிந்து நின்று கொண்டிருந்தேன். கேரளாவிலிருந்து வந்திருந்த வயதான ஒருவர் அடுத்த படத்துக்குப் போகிற அவசரத்தில் என்னைப் பார்த்துக் கை கொடுத்து ’ரொம்ப தைரியம் சாரே ..’ என்று சொல்லிவிட்டு ‘ப்ரேவோ .’ என்று கட்டைவிரலை உயர்த்திக் காட்டினார்.
தைரியமாக சில முன்னெடுப்புகளை நாம் தொடர்ந்து செய்யவேண்டும்.சர்வதேசம் போற்றும் தமிழ்ப் படங்களை உருவாக்க வேண்டும். திரைப்பட விழாக்கள் என்பவை படம் பார்ப்பதற் காக மட்டுமா? சமகாலத்தில் சினிமாவின் போக்கு எப்படி இருக்கிறது என்று அறிந்து கொள்வதற்கும் இந்தப் படங்களைப் போல நம்மாலும் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைப்பதற்கும் தான்.
திரையில் புது மொழியைக் கண்டுபிடியுங்கள்.
உங்கள் கதையை தனித்துவத்துடன் சொல்லுங்கள்.
தமிழின் பெருமையை உலகமெங்கும் கொண்டு செல்லுங்கள்.
செழியன்
‘டுலெட்’ படத்தின் இயக்குனர்,ஒளிப்பதிவாளர்.
உலக சினிமா நூலின் ஆசிரியர்.