Published : 15 Dec 2018 20:27 pm

Updated : 15 Dec 2018 20:28 pm

 

Published : 15 Dec 2018 08:27 PM
Last Updated : 15 Dec 2018 08:28 PM

துரோகத்தின் வெட்டாட்டம்!

ரஷிய கலாச்சார மையம், மாலை 6:00 மணி

கொலையைத் தவிர்க்க மனிதர் நினைத்த தருணத்தில் கொலைக் கருவி பின்வாங்குவதில்லை. அது குருதியைச் சுவைத்துப் பார்க்க முடிவெடுத்துவிட்டால் மனிதர் கைபிசைந்து நிற்பதைத் தவிர வேறு வழியற்றுப் போகிறது. தனிமனிதர்களைப் பகடைக்காய்களாக்கி அது ஆடும் களம் 'வடசென்னை'.


‘புதுப்பேட்டை’ போன்று நேர் கோட்டுப் பாதையில் வெற்றிமாறன் இப்படத்தின் திரைக்கதையை உருவாக்காமல் வாழ்க்கைபோலவே அதைக் குழப்பிப் போட்டிருக்கிறார். அதுவே திரைக்கதையைச் சுவாரசிய மாக்கி விடுகிறது. சுவரொட்டி, திரைப்பாடல், உடையமைப்பு போன்ற விவரங்களின் பின்னணியில், கதாபாத்திரங்களாக உருமாறிவிட்ட நடிகர்கள் உதவியுடன் 1987-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டுவரையான காலகட்டத்தை அழுத்தமான கதையின்மேல் திருப்தியான திரைக்கதை வழியே மறு உருவாக்கம் செய்திருக்கிறார் இயக்குநர்.

ஒரு மரணமும் தொடர்ச்சியும்

வட சென்னை வாழ் மனிதர்களின் வாழ்வைச் சொல்லும் யதார்த்தப் படைப்பு அல்ல இது. கடற்கரையோர மீனவக் கிராமம் ஒன்றில் வசிக்கும் மனிதர்கள் சிலரது வாழ்வின் வழியே நம் வாழ்வு குறித்த சித்திரத்தைத் துலக்கமாக்க இப்படம் முயன்றிருக்கிறது. அந்தக் கடற்கரையோரத்தில்தான் தன் மக்களுக்காக உயிரையும் கொடுத்த மீனவ நண்பன் ராஜன் வாழ்ந்திருந்தார். எம்.ஜி.ஆர். என்னும் அரசியல் தலைவர் மறைந்த நேரத்தையொட்டியே ராஜனும் வஞ்சகத்துக்குப் பலியாகிறார். ராஜன் எம்.ஜி.ஆரைப் போலவே வருகிறவர்களுக்கெல்லாம் சாப்பாடு போடுகிறார்;

கறுப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறார்; மக்கள் செல்வாக்குப் பெற்றவராக இருக்கிறார். ராஜனின் மரணத் துக்குப் பின்னான சம்பவங்களின் வழியே எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பின்னான சம்பவங்களும் நினைவூட்டப் படுகின்றன. தலைவர்களின் மரணம் சாமானியர்கள் வாழ்வில் செய்யும் குறுக்கீட்டுக்கு உதாரணமாக அமைகிறது படத்தில் ராஜீவ் காந்தியின் மரணம்.

பொருளெடுத்து வந்து ராஜனை ஹோட்டலில் கொல்பவர்கள் எதிரிகள் அல்ல; ராஜனின் நிழலாக அவரைத் தொடர்ந்துவந்த, நால்வர் அணியினரான குணா, செந்தில், வேலு, ஜாவா பழனி ஆகிய தம்பிகள். ராஜனின் மரணத்துக்குப் பின் நிம்மதியாகத் தொழில் செய்யலாம் என்று நம்பியவர்களது வாழ்வை ராஜனின் மரணம் துரத்துகிறது.

ராஜனின் நிழலும் வன்மத்தின் காத்திருப்பும்

ராஜன் மீது சந்திரா கொண்டிருந்த காதல் அவளை மென்மையாக்கவில்லை; வன்மையாக்குகிறது. பழியுணர்வு அவளது குருதியில் கலந்துவிட்டது. அவள் உயிருக்குயிராக நேசித்த ராஜனைக் கொன்றவர்களை அழிக்காமல் அழப் போவதில்லை என்ற முடிவுடன் வாழ்வைத் தொடர்கிறாள். வன்மமும் குரோதமும் அவள் நெஞ்சில் குடியேற, மெல்லிய சிணுங்கல் மொழியில் அவள் சொல்லும் வஞ்சம் தோய்ந்த ஆலோசனைகளை குணா சந்தேகப்பட வழியில்லை.

ராஜன் ஆரம்பித்த ம. சிங்கார வேலர் மன்றத்தின் மூலம் அன்பு கேரம் போர்டு ஆடத் தொடங்கு கிறான். அன்புவின் வாழ்வில் பத்மா எதிர்ப்பட்ட அன்று அவனது வாழ்வை அது மாற்றும் என்பதை அறியாத அன்பு, அவளால் ஈர்க்கப்படுகிறான். பத்மா மீது அன்பு கொண்ட காதல், அவனை ராஜனாக மாற்றிவிடும் என்பதை அப்போது அன்பு உணர்ந்திருக்கவில்லை. போர்டாடும் திறமையால் அரசு வேலையைப் பெற்றுக்கொண்டு கண் நிறைந்த மனைவியுடன் நல்வாழ்வு நடத்த அன்பு விரும்பினான். ஆனால், அவனுக்கு அது விதிக்கப்படவில்லை. கையில் பொருளை எடுத்துக்கொண்டு தன் மக்களுக்காக உழைக்கும் ராஜனாக வாழ்க்கை அவனை மாற்றியது.

எதிர்பாராத வகையிலேயே துல்லியமற்றுத் தான் எல்லாமே நிகழ்கிறது. குணாவைக் கொல்லத் திட்டம் தீட்டியும் சந்திராவால் அதை நிறைவேற்ற இயலவில்லை. எங்கிருந்தோ வந்த அன்புவால் அது தடைப்பட்டுவிடுகிறது. ஆனால், அந்தத் தருணத்தில் அன்பு அங்கே வராமல் இருந்திருந்தால், அன்பு, தான் நினைத்த நிம்மதியான வாழ்க்கையை நடத்தியிருக்கலாம்.

தன் உயிரைக் காப்பாற்றிய குணாவுக்காக அன்பு பொருளெடுக் கிறான். ஆனால், அவனது கேரம்போர்டு ஆட்டத்தை ரசித்து அரவணைத்த செந்திலுக்கு எதிராகவே அதைப் பயன்படுத்த சூழல் நிர்ப்பந்திக்கிறது. செந்திலின் மனைவி மாரியம்மாள் சமாதானத்தின் பொருட்டு, குத்தியவனைக் காவு கேட்கும் தருணத்தில் குணா ஏதும் சொல்லாமல் மௌனம் காக்கும் செயல் அன்புவை மனங்கசக்க வைக்கிறது.

நட்பு கொண்டோரிடம் எப்போது துரோகம் வெளிப்படும் என யாரால் கண்டறிய இயலும்? ஊரிலுள்ளோரை எல்லாம் எதிர்த்து நின்று சண்டையில் வென்ற ராஜன் தன் தம்பிகளுடன் சமாதானம் பேச நிராயுதபாணியாக வரும் தருணத்தில் அவர்கள் விரித்த வலையில் தடுமாறி வீழ்ந்தழிந்தான். ராஜனின் சொந்தத் தம்பியோ அண்ணனைக் காப்பாற்ற முடியாத குற்றவுணர்வில் குமையும்படியான வாழ்க்கையை கொன்றவர்கள் வாழும் இடத்திலேயே நடத்துகிறான். குணாவுடன் ஒரே படுக்கையைப் பகிர்ந்துகொள்ளும் சந்திரா, குணாவை வீழ்த்தும் தருணத்துக்காகவே காத்துக் கிடக்கிறாள்.

துரோக விருட்சம்

பெரிய லேபிள்காரனாகிவிடலாம் என்று ஆசைப்பட்ட குணாவின் தம்பி சங்கர் பொருளெடுத்துப் பிறரை மட்டையாக்கும் சாமர்த்தியம் இல்லாதவன். ஆனால் இறுதிச் சடங்குப் பாடல் அவனை வீரத் தளபதியாக வர்ணிக்கிறது. ஜாவா பழனியைக் கொன்ற பழி ஏற்று கேஸ் எடுத்து சங்கர் சிறைக்கு கெத்தாகச் செல்கிறான். சிறையில் செந்திலால் சங்கர் கொல்லப்பட வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

ராஜனோ சந்திராவோ அன்புவோ குணாவோ செந்திலோ இப்படியான மனிதர்களோ யாருமே தாங்கள் ஆசைப்பட்ட வாழ்வை வாழவில்லை. தீர்மானிக்கப்பட்ட பாதையில் அவர்களது வாழ்வு அமைகிறது. குணாவும் அன்புவும் இரவில் பேசி க்கொள்வது, அன்புவும் பத்மாவும் கடற்கரையோர உயரக் கோபுரத்தில் காதல் கொள்வது, ராஜன் காவல் துறை அதிகாரியை எதிர்கொள்வது போன்ற வெவ்வேறு தருணங்கள் படத்தில் முழுமை பெற்றுள்ளன.

கடலுக்கும் கரைக்குமாக சதா அலை வுறும் அலைகளின் மேலே மிதக்கும் கலங்களைப் போலவே அவர்கள் வாழ்வும் சிறைப்பட்டுக்கிடக்கிறது. காட்சிகளின் வண்ணம், பின்னணியிசை, கேமரா நகர்வுகள் ஆகிய அனைத்தையும் ஒன்றிணைத்து கதாபாத்திரங்களின் மனநிலையைப் பார்வையாளரிடம் நேர்த்தியாகக் கொண்டுவந்து சேர்க்கிறார் இயக்குநர்.

அன்பு, நட்பு, பிரியம், நேசம் போன்றவற்றைப் போல் துரோகமும் வஞ்சகமும் குரோதமும் வன்மமும் பழியுணர்வும் மனித மனங்களில் கசிந்துகொண்டே இருக்கின்றன. சுப்பிரமணியபுரத்தில் விதைக்கப்பட்ட துரோகம் வட சென்னையில் பூரண விருட்சமாகியிருக்கிறது. எனவே, திரைப்படம் பார்த்து முடிந்த பார்வை யாளர் மனத்தில் படம் வாழ்க்கையின் பொருள் பற்றிய கேள்விகளை உருவாக்குகிறது. படம் பார்ப்பதற்கு முந்தைய மனநிலையிலிருந்து ஒரு மாறுபாட்டை உருவாக்குவதாலேயே நல்ல படைப்பாக வட சென்னையை உணர முடிகிறது.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author