

WOMAN AT WAR | ICELAND | 2017 | தேவி, மாலை 4:30 மணி
55 வயதுப் பெண் ஹல்லா, ஒரு சுற்றுச்சூழல் போராளி. உள்ளூர் அலுமினிய தொழிற்சாலையை எதிர்த்து ஒற்றை ஆளாய் களத்தில் இருக்கிறார் ஹல்லா (Halla). அந்த தொழிற்சாலைக்கு எதிராக ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். தான் நேசிக்கும் (ஐஸ்லாந்தில் இருக்கும்) மலைச்சரிவைக் காப்பாற்ற எதற்கும் தயார் எனத் துணிந்து நிற்கும் ஹல்லாவை சற்றே அசைத்துப் பார்க்கிறது ஒரு நிகழ்வு. உக்ரைன் நாட்டின் அனாதைச் சிறுமியை ஹல்லா தத்தெடுக்கிறார். அந்தச் சிறுமியின் வருகை ஹல்லாவின் லட்சியத்தை பலப்படுத்தியதா இல்லை பலவீனப்படுத்தியதா? மலை பெரிதா, தத்தெடுத்த மகள் பெரிதா? தன்னை தாயாய் நேசிக்கும் அனாதைச் சிறுமிக்கு பொறுப்பான தாயாய் இருப்பது முக்கியமா, அல்லது தான் தாயாய் நேசிக்கும் மலைச்சரிவை சுரண்டலிலிருந்து காப்பது முக்கியமா? எப்படி இரண்டையும் ஒருசேர சமன் செய்ய முடியும்? என்ன முடிவெடுக்கிறார் ஹல்லா? கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருது கிடைத்தது. 7 விருதுகளும் 9 பரிந்துரைகளும் பெற்றன.
THE LITTLE MATCH GIRL |ARGENTINA | 2017 | தாகூர் திரைப்பட மையம், மாலை 4:30 மணி
ஒரு ஜெர்மன் போர்வீரனுக்கும் ஓர் அர்ஜென்டினிய பியானிஸ்ட்டுக்குமான நட்போடு ஹெல்மட் லாகென்மேன் எனும் இசையமைப்பாளரும் இணைகிறார். மூவரும் ஓபரா கலைஞர்களைக்கொண்டு இசைக்குழுவினரோடு இணைந்து ஆண்டர்சனின் லிட்டில் மேட்ச் கேர்ள், பிரெஸ்ஸனின் டாங்கி போன்ற கதைகளை மேடையேற்ற முயற்சி செய்கின்றனர். அச்சமயம் பியோனஸ் அயர்ஸில் உள்ள காலன் தியேட்டர் வேலைநிறுத்தத்தில் உள்ளது. இவை எல்லாவற்றுக்கிடையிலும் இத்திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களாக வரும் மேரி மற்றும் வால்டர் இருவரும் தங்கள் பெண் குழந்தையோடு வாழ போராடுகின்றனர். இப்படம் 6 விருதுகளைப் பெற்றுள்ளது.
ANDARKAHINI | BENGALI | 2017 | ரஷிய கலாச்சார மையம், பகல் 12:00 மணி
பெண்மைக்கு முக்கியத்துவம் தரும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட நான்கு சிறுகதைகளை எழுதி ஒரு திரைப்படமாக தந்துள்ளார் இயக்குநர் அர்நாப் மிடியா. ஒரு இந்தியப் பெண் என்பவள் மகளாக, சகோதரியாக, தோழியாக, மனைவியாக தியாகங்கள் பல செய்து ஒவ்வொரு உறவிலும் உயர்ந்து நிற்கிறாள். இதனால் தனக்கான அடையாளத்தையும் அவள் இழக்கிறாள். ஆணாதிக்க சமுதாயத்தில் தங்கள் அடையாளத்திற்காகப் போராடும் இடையறாத போராட்டத்தை வெளிப்படுத்தும்விதமான நான்கு வெவ்வேறு பெண்களின் கதையைச் சொல்லும் படிநிலைகளிலும் நடிகை பிரியங்கா சர்க்கார் தோன்றி நடித்துள்ளார். ஜாப்னா சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த இயக்குநர் விருது கிடைத்தது.
BHAYANAKAM | MALAYALAM | 2018 | தேவிபாலா, பகல் 1:00 மணி
தகழி சிவசங்கரன் பிள்ளையின் 'கயறு' நாவலைத் திரைமொழிக்கு மாற்றியிருக்கிறார் இயக்குநர் ஜெயராஜ். இரண்டாம் உலகப் போர் நிகழும் காலத்தில் பயணிக்கிறது கதை. கேரளத்தின் சிறிய கிராமம் ஒன்றில் தபால்காரராக பணிபுரிகிறார் பணிக்கர். மணியார்டர்களையும், மகன்களின் கடிதங்களையும் தாங்கி வரும் தபால்காரர் பணிக்கரை, கிராமத்தினர் தம்மில் ஒருவராக பழகி வருகின்றனர். மரணமும் துயரமும் போரின் பிள்ளைகளல்லவா? போரில் மடிந்தவர்கள் பற்றிய செய்திகளையும் பணிக்கரே கொண்டு வர வேண்டிய நிலை வருகிறது. சந்தோஷத்தை முகம் முழுக்கப் பரத்தி, வரவேற்ற அதே கிராமத்தினர் இப்போது பணிக்கரை சாவுச் செய்தியைக் கொண்டுவரும் எமனின் தூதனாகப் பார்க்கின்றனர். எங்கோ நடக்கும் போரின் தாக்கம், இந்த சின்னஞ்சிறு கிராமத்தை எப்படி சூறையாடுகிறது என்பதை மெல்ல மெல்ல பார்வையாளன் நெஞ்சில் பாரமேற்றி சொல்லியிருக்கிறார்கள். தகழியின் எழுத்தில் உணர்ந்த பணிக்கரின் மனவோட்டத்தை வெள்ளித்திரைக்கு அப்படியே கடத்தியிருக்கிறார் இயக்குநர். போர் கொடிது; பிரிவு மிகக் கொடிது. உயிரின் மதிப்பையும், உறவின் உயர்வையும் உணர, அவசியம் பார்க்க வேண்டிய படம் இது.
3 DAYS IN QUIBERON | GERMANY | 2018 | அண்ணா, மாலை 7:15 மணி
ரோமி சினிடர், ஐரோப்பாவில் புகழின் உச்சியில் இருக்கும் ஒரு நடிகை. உண்மையில் அவளுக்கு புகழ் வெளிச்சம் கசப்பையே உண்டாக்குகிறது. எல்லோரையும்போலவே இயல்பாக வாழ்வது இனி நடவாத காரியம் என்று எண்ணி வருந்துகிறாள். பிரசித்தி பெற்ற நடிகை ரோமி சச்னிடர், மரணமடைவதற்கு ஒராண்டுக்கு முன்பு ஹோட்டல் ஸ்பா ஒன்றில் இரண்டு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியை அடிப்படையாக கொண்ட படம். பெர்லின் திரைப்பட விழாவில் தங்கக் கரடி விருதுபெற்றது.
SOFIA | FRANCE | 2018 | கேஸினோ, மாலை 7:00 மணி
காஸாபிளாங்காவில், 20 ஆண்டுகளாக பெற்றோருடன் வசித்து வருகிறாள் சோபியா. திருமணத்துக்கு முன்பாகவே கர்ப்பம் தரித்துக்கொள்வதால் நிறைய பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. திருமணம் பந்தத்திற்கு அப்பால் அவள் குழந்தை பெற்றெடுக்க விரும்பியது சட்டவிரோதமாகிறது. அதனால் மருத்துவமனையில் ஆரம்பித்து அவர் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு விறுவிறுப்பாக உருவாக்கப்பட்ட இப் படம், கேன்ஸ் திரைப்பட விழாவில் அன்சர்ட்டெய்ன் ரிக்காட் பிரிவில் சிறந்த திரைக்கதைக்காக விருதுவென்றுள்ளது. 6 விருதுகள் 9 பரிந்துரைகளைப் பெற்ற படம்.