Published : 17 Dec 2018 05:13 PM
Last Updated : 17 Dec 2018 05:13 PM

3 ஃபேஸஸ்: பெரும் தாக்கம் தரும் பயணம்!

- அஃபரோஸ் கான்

|டிசம்பர் 15-ம் தேதி சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தேவி திரையரங்கில் காலை 11 மணிக்கு திரையிடப்பட்ட '3 Faces' படத்தின் விமர்சனம்|

சமூகத்திற்கு பயந்து நடிப்பில் ஆர்வமுள்ள ஒரு பெண்ணை நாடகப் பள்ளியில் சேரவிடாமல் அவரது குடும்பம் தடுக்கிறது. அந்தச் சூழலில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை என்பதால் அந்தப் பெண் தான் தற்கொலை செய்துகொள்ளும் காணொளியை பிரபல நடிகை பெஹன்னாஸ் ஜாஃபரிக்கு அனுப்புகிறாள். 'நான் பலமுறை உங்களைத் தொடர்புகொள்ள முயற்சித்தேன். ஆனால் என்னால் முடியவில்லை' என்று கூறி தூக்கில் தொங்குவது போல் முடிகிறது அந்தக் காணொளி.

அந்தக் காணொளியைக் கண்டு மனதளவில் பாதிக்கப்படும் பிரபல நடிகை தனது இயக்குனர் நண்பருடன் அந்தப் பெண்ணை தேடி அவளது மலை கிராமத்துக்கு செல்கின்றனர். அவர்கள் தங்கள் பயணத்தில் அங்குள்ள மக்கள் நகரத்து மீதும், நடிகைகள் மீதும் வைத்துள்ள பார்வையை அறிகிறார்கள். மேலும் அந்தப் பெண்ணிற்கு என்ன ஆனது என்பதுதான் '3 ஃபேஸஸ்' (3 Faces).

குறைந்த பட்ஜெட்டில் அற்புதமான லைட், கேமரா, நடிப்பு, லொகேஷன் போன்ற துறைகளிள் நன்றாக வேலைகள் நடந்துள்ளன. ஜாஃபார் பனாஹி என்று பெயர் திரையில் வந்தபோது விசில் சத்தமும், கைத்தட்டலும் தொடங்கியது. அது கடைசி வரை அவ்வப்போது நீடித்தது.  மிக எளிமையாக படத்தின் கதையை கொண்டு சென்றதே இத்திரைப்படத்தின் முக்கிய அம்சம்.

ஒரு நடிகை, இயக்குனர் அவரை பற்றிய ஒரு சின்ன அறிமுகம், நடிப்பில் ஆர்வமுள்ள பெண், அவளது மலைக்கிராமம், அதன் மக்கள், நடுவில் வரும் சின்னச் சின்ன கதாபாத்திரங்கள், குட்டிக் குட்டி கதைகள் என்று இப்படத்தின் திரைக்கதை மிக நேர்மையாகவும், நிதானமாகும் உள்ளது. நிதானமாக செல்லும் திரைக்கதையாக இருந்தாலும் ஒருவித படபடப்பை கொடுத்துள்ளார்.

இப்படத்தில் கேமரா ஒரு கதாபாத்திரம் போலவே உணரமுடியும். காரின் கண்களின் மூலமாக படத்தை பார்ப்பதுபோல் பல முறை உணருவீர்கள். அப்படி காரில் வைத்தே பல ஷாட்டுகள் எடுக்கப்பட்டுள்ளன, அது நன்றாக பயன் தந்துள்ளது. ஒரு புதுவித முயற்சி. கேமரா அருமை. நன்றி ஒளிப்பதிவாளர் அமின் ஜாஃபாரி .

இப்படத்தை காட்சிப்படுத்திய விதம் சென்னையில் படம் பார்த்த நமக்கு ஒரு ஈரான் பயணம் மேற்க்கொண்டது போல் இருந்தது. நம்மை அந்த இடத்திற்கு கொண்டு செல்ல திரைக்கதை, ஒளிப்பதிவு, லைட்டிங் முக்கிய பங்கு வகிக்கும்.

ஒரு படத்திற்கு லைட்டிங் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இப்படம் உங்களுக்கு ஒரு பாடமே எடுக்கும். அப்படி ஒரு யதார்த்தமான லைட்டிங். அந்த கிராமங்களில் உள்ள விளக்குகள், போன் ஸ்க்ரீனின் ஓளி, வாகன விளக்குகளின் வெளிச்சம் என்று யதார்த்தமான ஒளி இப்படத்தில் பார்க்கலாம்.

ஒட்டுமொத்தமாக, பல தளங்களில் இப்படம் நமக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x