Published : 17 Dec 2018 05:07 PM
Last Updated : 17 Dec 2018 05:07 PM

தி சவுண்ட் ஸ்டோரி - ரசூல் பூக்குட்டி பகிர்ந்த சிலிர்ப்பனுபவம்!

இனியன்

 'தி சவுண்ட் ஸ்டோரி' படப்பிடிப்பில் தனக்கு நேர்ந்த சிலிர்ப்பனுபவம் ஒன்றை ரசூல் பூக்குட்டி பகிர்ந்துகொண்டார்.

ஆஸ்கர் விருது வென்ற ஒலி வடிவமைப்பாளர் - தொகுப்பாளர் ரசூல் பூக்குட்டியைப் பற்றிய 'தி சவுண்ட் ஸ்டோரி' திரைப்படம் இந்தியாவில் முதல்முறையாக சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

இந்தத் திரையிடலுக்குப் பின்னர் பார்வையாளர்களுடன் கலந்துரையாடிய ரசூல் பூக்குட்டி, ''ஆஸ்கருக்கு பின் என்ன செய்யலாம் என்று யோசித்தபோது 'திரிசூர் புரத்தை' பதிவு செய்யவேண்டும் என்று தோன்றியது. அது என் நீண்டநாள் கனவு. அதேவேளையில் வாஷிங்டனில் வசிக்கும் ராஜீவ் ஒருநாள் அழைத்து தான் இந்த ப்ராஜெக்ட்டை தயாரிக்க விரும்புவதாகத் தெரிவித்தார். நாங்கள் உடனே பணிகளை ஆரம்பித்தோம். பதிவு செய்யத் துவங்கியபோது இப்படத்தின் இயக்குநரான பிரசாத் எங்களிடம் 'நீங்கள் பதிவு செய்யும் இந்தப் பயணத்தை ஓர் ஆவணப் படமாக எடுக்க விரும்புகிறோம் என்றார். உலகின் மிகப் பெரிய ஆவணப்படுத்தும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்று எங்களுக்கு உறுதியிருந்ததனால் அதை அவர்கள் படமெடுக்க அனுமத்திதோம்.

'பூரம்' முடிந்த பின் 'பூரம்' என்றால் என்ன என்று புரிந்துகொள்ள பல இடங்களுக்குச் சென்றோம். 'சண்டமேளம்' 'பூரத்தின்' முக்கிய அங்கம் அதை உருவாக்கும் இடத்திக்கு சென்றோம். பின்பு யானைகள் அதனை தயார்படுத்தும் இடத்திற்கும் சென்றோம். படத்திலும் அது பற்றிய காட்சிகளை வைத்துள்ளோம். பின்பு பூரத்தின் முக்கிய அங்கமான யானைகளை பற்றி அறிய அவை பராமரிக்கும் இடத்திற்குச் சென்றோம். அங்குதான் எனக்கு சொல்லப்பட்டது, அதாவது கடவுளைச் சுமந்து வரக்கூடிய யானைக்கு கண் தெரியாது என்று. 'விபா'விடம் பின் எப்படி இந்த யானை பயணிக்கிறது என்று கேட்டபொழுது ஒலியைக் கொண்டு என்றார்கள். அந்த பார்வையற்ற யானைக்கு பதில் ஒரு பார்வையற்ற மனிதனை யோசித்துப் பார்த்தேன். பூரம் - 'தி சவுண்ட் ஆப் ஸ்டோரி' அங்குதான் பிறந்தது' என்றார். 

படம் உருவாகிய விதம் பற்றி அவர் கூறும்போது "படத்தின் பல காட்சிகள் ஸ்கிரிப்ட் செய்யப்படாதவை. படத்தில் வரும் பார்வையற்றோர் பள்ளி அங்கிருக்கும் மாணவர்களுடனான உரையாடல், பார்வையற்ற இசையமைப்பாளரோடு இருக்கும் உரையாடல் என இவை அனைத்தும் எப்படி நிஜத்தில் நிகழ்ந்ததோ அப்படியே படமாக்கிகியுள்ளோம். 24 கேமராக்கள், 7, 8 ஒலிக்கான குழுக்களோடு பூரத்தை பதிவு செய்தோம். அதன் ஒரு பகுதியை இந்தப் படத்தில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒவ்வொன்றுக்கும் பின்னால் பல கதைகள் உள்ளது' என்று விவரித்தார்.

படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட சிலிர்ப்பனுபவம் ஒன்றை ரசூல் பகிர்ந்தபோது, "பூரத்தின் 'சண்டமேள' இசையை அதன் உண்மையான ஓசையை பதிவு செய்வதற்காக அதேபோல ஓர் இடம் தேடிச் சென்றேன். கைகளைத் தட்டிக்கொண்டு அந்த ஓசையை அதன் அதிர்வை பின்பற்றிச் சென்றேன். ஒரு இடத்திற்கு அந்த அதிர்வொலி என்னைக் கொண்டு சேர்த்தது. பிரசாத்தை அழைத்து அந்த இடத்தில் கலைஞர்களை வரவழைத்து பதிவு செய்ய இயலுமா என்று கேட்டேன்? 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஓர் இடத்திலும் நிழல் கிடையாது. ஒரு முழு நிகழ்வுக்கு 3 மணி நேரம், நாங்கள் 5 நிகழ்வை பதிவு செய்ய வேண்டும். அங்கு குட்டடா வந்தார், இங்கு பதிவு செய்யலாமா என்று கேட்டேன். அவர் என்னைப் பார்த்து ரசூல், இதே இடத்தில் தான் 1132 வருடங்களுக்கு முன் 'பூரம்' தொடங்கியது என்றார். எனக்கு எதோ ஒன்று என்னை அங்கு அழைத்து வந்தது என்றே தோன்றியது. அந்தக் காலத்தில் எப்படி யானைகளும் கலைஞகர்களும் மக்களும் அரசர்களும் இருந்தனரோ அதேபோல பாவித்து பதிவு செய்தோம். இது ஆவணப்படுத்துதலில் துறையில் நடந்த மிகப் பெரிய நிகழ்வாகும். இத்தனை வைத்து ஒரு சினிமா எடுப்பது மிகப்பெரிய விஷயம் அந்தச் சாதனை பிரசாத்தையே சேரும்" என்றார் வியப்பு குறையாமல்.

இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் பிரசாத் பிரபாகர் பேசும்போது "பதற்றத்தோடே இருந்தேன். இந்தப் படம் பார்க்கும் உங்களுக்கு இது பிடிக்குமா இல்லையா என்ற பயம் இருந்துகொண்டே கொண்டே இருந்தது. இந்தப் படம் வெளிவர 'சோனி' பாஸ்கர் தான் உறுதுணையாக இருந்தார். 4 மொழியில் வெளிவர உள்ளது. உலகிலேயே முதல் முறையாக இந்தப் படத்திற்கான திரைக்கதைதான் ப்ரைலியில் வெளி வரவுள்ளது. இதுவரை எந்தத் திரைப்படத்திற்கான திரைக்கதையும் ப்ரைலியில் வெளி வந்ததில்லை' என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இறுதியாக பேசிய ராஜீவ், 'ரசூல்'தான் இதற்கு பின் இருக்கும் முக்கிய நாயகர். நான் இதன் வெறும் ஒரு பகுதி தான்' என்றார்.

நிறைவாக 2.0 உட்பட பல்வேறு அனுபவங்களை பேசிய ரசூல் பூக்குட்டி, "உலகின் எல்லா முக்கிய சிந்தனைகளும் இந்தப் புனித பூமியிலிருந்துதான் விளைந்தது. நம் அரசாங்கத்திடம் நிறைய பணம் உள்ளது. ஆனால் இந்த பழம்பெரும் மரபுகளை காப்பாற்ற அவர்கள் செலவு செய்யத் தயாராக இல்லை. இதை பாதுகாக்க வேண்டியது நம் பொறுப்பு" என்றார்.

மேலும் 'கமர்சியல் சினிமா தான் எடுத்துள்ளோம்; ஆனால் சென்னை சர்வதேச திரைப்பட விழா இதனை தேர்ந்தெடுத்துள்ளது மகிழ்ச்சிகரமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்தத் திரைப்பட விழா மூலமாக முதல் முறை இந்தியாவில் திரையிடுகிறோம். நீங்கள் தான் இந்த படத்திற்கான முதல் பார்வையாளர்கள்" என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x