Published : 06 Dec 2018 11:46 AM
Last Updated : 06 Dec 2018 11:46 AM

இயற்கை உணவை வாங்கி உண்பதே நெல் ஜெயராமனுக்கு நாம் செய்யும் தொண்டு: கார்த்தி

மக்கள் நலமாக இருக்க இயற்கை உணவு சாப்பிட வேண்டும் என்றும், இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்றும்  ஓடி ஓடி வேலை செய்தவர் என்று நடிகர் கார்த்தி நெல் ஜெயராமன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் சிகிச்சை பலனின்றி இன்று ( வியாழக்கிழமை)  அதிகாலையில் மரணம் அடைந்தார்.

கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கடும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார் ஜெயராமன். அவரது நிலையை உணர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், கார்த்தி, சிவகார்த்திகேயன், சூரி உள்ளிட்ட திரைப்படக் கலைஞர்கள்அவரது சிகிச்சைக்கு உதவினர். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

நெல் ஜெயராமனின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நெல் ஜெயராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பத்திரிகையாளர்களிடம் கார்த்தி பேசும்போது,  ”தன்னலம் கருதாமல் மக்கள் நலமாக இருக்க வேண்டும் என்றும்,  இயற்கை உணவு சப்பிட வேண்டும் என்றும், இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என ஓடி ஓடி வேலை செய்தவர் நெல் ஜெயராமன். இம்மாதிரி மக்களின் பொதுநலனுக்காக உழைத்தவர்கள் எந்தத் துறையாக இருந்தாலும், அவர்களுடைய இறுதிச் சடங்கில் கலந்து கொள்வது மிக முக்கியம் என்று கருதுகிறேன்.

 இதைத் தவிர வேறு என்ன மரியாதை கொடுக்க முடியும்.  நாம் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டியது அவர் நம்மிடம் திரும்ப, திரும்ப கூறியது இயற்கை உணவாக சாப்பிடுங்கள் என்பதுதான்.

இயற்கை உணவை அதிக விலைக்கு விற்றாலும் அதை வாங்குங்கள். அதுதான் அவர்களை ஊக்கப்படுத்தும். இதை நாம் ஞாபகம் வைத்துக்கொண்டாலே அவருக்கு செய்ய வேண்டிய மிகப் பெரிய தொண்டாக இருக்கும்” என்று கார்த்தி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x