Published : 15 Dec 2018 05:53 PM
Last Updated : 15 Dec 2018 05:53 PM

ரஜினி பட ஹீரோயினும் ஏமாந்தார்: ரூ.18000 மதிப்புள்ள ஹெட்போனுக்கு பதில் இரும்புத்துண்டு: ஆன்லைனில் ஏமாற்றப்பட்டதாக ட்வீட் பதிவு

ஆன்லைனில் தான் ஆர்டர் செய்த ரூ. 18000 மதிப்புள்ள ஹெட்போனுக்கு பதில் இரும்புத்துண்டை அழகாக பார்சல் செய்து அனுப்பியுள்ளதாக பிரபல நிறுவனத்தைப்பற்றி ரஜினி பட கதாநாயகி ட்விட்டரில் புகார் அளித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தில் நடித்தவர் சோனாக்‌ஷி சின்ஹா. இவர் சமீபத்தில் பிரபல நிறுவனமான போஸ் ஹெட்போன் கம்பெனியின் தயாரிப்பான ரூ. 18000 மதிப்புள்ளகாதுக்குள் பொருத்தும் ஹெட்போனுக்கு ஆர்டர் கொடுத்தார். பிரபல கம்பெனியின் தயாரிப்பு என்பதால் அதற்கான முழுத்தொகையையும் கட்டிவிட்டார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன் அவருக்கு பார்சலில் ஹெட்போன் அழகாக பேக் செய்யப்பட்டு டெலிவரி செய்யப்பட்டது. ஆசையுடன் பிரித்தவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பிரபலமான ஒயர்லெஸ் போஸ் ஹெட்போனுக்கு பதில் இரும்புத்துண்டு ஒன்றை அழகாக பேக் செய்து அனுப்பியிருந்தனர்.

இதைப்பார்த்து அதிர்ந்துப்போன அவர் ஆன்லைனின் பிரபலமான அந்த நிறுவனத்தை தொடர்புக்கொள்ள முயன்றபோது அவரால் தொடர்புக்கொள்ள முடியவில்லை. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தனது மனக்குறையை பதிவிட்டு இரும்புத்துண்டு பார்சல் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

“நண்பர்களே பாருங்கள், போஸ் ஹெட்போனுக்கு பதில் எனக்கு வந்துள்ள பொருளை. அதுவும் சரியாக பேக் செய்து வந்துள்ள ஒரிஜினல் பேக். ஆனால் எல்லாம் வெளியில் மட்டும்தான். உங்கள் வாடிக்கையாளர் சேவை கொஞ்சம்கூட உதவவில்லை. மிக மோசம்.” என முதல் ட்விட்டில் பதிவிட்டு இரும்புத்துண்டை போஸ் ஹெட்போன் பேக் அட்டைப்பெட்டியுடன் போட்டுள்ளார்.

இரண்டாவதாக ஒரு ட்விட்டை பதிவிட்டுள்ளார் அதில், “யாராவது 18000 ரூபாய் கொடுத்து பளபளப்பான குப்பை இரும்புத்துண்டை வாங்க விரும்புகிறீர்களா? கவலைப்படாதீர்கள் நான் உங்களுக்கு விற்பனை செய்கிறேன். அமேசானில் அல்ல, நானே நேரடியாக விற்பனை செய்வதால் நீங்கள் ஆர்டர் செய்தது சரியாக உங்களுக்கு கிடைக்கும்” என இரண்டாவது ட்வீட்டிலும் பதிவிட்டுள்ளார்.

ஆன்லைனில் ஐபோன் புக் செய்தவர்களுக்கு செங்கல்கட்டியும், சோப்புக்கட்டியும் வந்த வரலாறு உண்டு. ஆனால் அது சாதாரண மக்களுக்குத்தான் இதுவரை நடந்துள்ளது. ஆனால் மிகப்பிரபலமான ஒருவர், அதுவும் லிங்கா படத்தில் ரஜினியுடன் கதாநாயகியாக நடித்தவருக்கே இப்படிப்பட்ட அனுபவம் ஏற்பட்டுள்ளது.

சோனாக்‌ஷியின் ட்விட்டருக்கு கீழே நெட்டிசன்கள் அதை கிண்டல் செய்தும், வருத்தப்பட்டும், கண்டித்தும் பதிவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x