Published : 18 Dec 2018 04:47 PM
Last Updated : 18 Dec 2018 04:47 PM

CIFF-ல் டிசம்பர் 19 அன்று என்ன படம் பார்க்கலாம்?- க.சே.ரமணி பிரபா தேவி பரிந்துரைகள்

THE MOVIE OF MY LIFE | BRAZIL | 2017 |  ரஷிய கலாச்சார மையம், பகல் 12.00 மணி

சிலி எழுத்தாளரின் அன்டோனியோ ஸ்கார்மெட்டா எழுதிய நாவலை அடிப்படையாகக்கொண்ட படம். டோனி என்னும் இளைஞன் பிரேசிலில் உள்ள தனது சொந்த கிராமத்துக்கு வருகிறான். தனது நாட்டுக்குத் திரும்பிச் சென்ற ஃப்ரெஞ்சுத் தந்தையைக் கண்டுபிடிக்க முயல்கிறான். பல்வேறு குழப்பங்கள் மோதல்களைக் கடந்த பிறகு தன்னையே அவன் உணரத் தொடங்குகிறான்.

அதன்பிறகு தனது தந்தை ஏன் சென்றார் என்பதையும் புரிந்துகொள்கிறான். இறுதியில் அவன் ஒரு ஆசிரியராக பணியை மேற்கொள்கிறான். இப்படத்தின் காட்சிகள் மிகவும் அழகானவை. பல்வேறு விருதுகளைப் பெற்ற செல்டோன் மெல்லோவின் மிகச்சிறந்த இயக்கத்தில் உருவான படம் இது.

 

A DOG'S WILL | BRAZIL | 2000 | தேவிபாலா, காலை 10.45 மணி

லத்தீன் அமெரிக்காவில் உள்ள ஒரு மாநிலம் எல்டோரடோ. இங்கு அரசியல் அதிகாரத்துக்காக உள்ளுக்குள்ளேயே பெரும் சண்டை நடக்கிறது. இது சமூகத்தில் வெறுப்பை உருவாக்கிய நேரத்தில், உழைத்தே ஓய்ந்துபோன பத்திரிகையாளர் பாலோ மார்ட்டின்ஸ், சம அளவில் ஊழலில் ஊறிப்போன வேட்பாளர்கள் இருவரையும் எதிர்க்கிறார். பணக்காரக் கூட்டத்தின் எதிர்ப்பைச் சம்பாதிக்கும் பாலோவின் நிலை என்னவாகும்..? கேன்ஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் விருது பெற்ற படம்.

THE HARVESTERS | SOUTH AFRICA | 2018 | அண்ணா, பகல் 12.00 மணி

தென் ஆப்பிரிக்காவின் பழமைவாதம் நிறைந்த தனித்துவிடப்பட்ட ஒரு பகுதியில்தான் ஹீரோ ஜானோ வசிக்கிறார். ஜானோ வித்தியாசமானவர். ரகசியங்கள் நிறைந்தவர். உணர்ச்சிவசப்படக் கூடியவர். ஒரு நாள் அவரது தாய் பீட்டர் என்ற ஆதரவற்ற தெருவோரக் குழந்தையை வீட்டுக்கு அழைத்து வருகிறார். அன்றிலிருந்து தொடங்குகிறது ஜானோ - பீட்டருக்கு இடையேயான யுத்தம். ஜானோ பதவிக்காகவும் பாரம்பரியத்துக்காகவும் பெற்றோர் பாசத்துக்காகவும் போராடுகிறார். பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களில் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட படம்.

WHAT WILL PEOPLE SAY / HVA VIL FOLK SI | NORWAY | 2017 | கேஸினோ, பிற்பகல் 2.45 மணி

பூத்துக் குலுங்கும் பதினாறு வயதுப் பெண் நிஷா. பூவின் நிழலாய் அவளது இரட்டை வாழ்க்கை இருக்கிறது. வீட்டில் அவள் சமர்த்தான பாகிஸ்தான் பெண். வெளியே நண்பர்களைப் பொறுத்தவரை சாதாரண நார்வே நாட்டு இளம்பெண். ஒருமுறை நிஷா தனது ஆண் தோழமையுடன் அவளது அறையில் இருக்கையில், நிஷாவின் தந்தை பார்த்துவிடுகிறார். என்னவாகும் நிஷாவின் கதி? என்ன செய்யும் அவளின் விதி? குடும்பம், சமூகம் மற்றும் கலாச்சாரத்தின் உணர்ச்சியுள்ள ஒரு கதை. இத்திரைப்படத்திற்கு 13 விருதுகள் கிடைத்துள்ளன. 11 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

A FAMILY TOUR  | TAIWAN | 2018 | தேவி, மாலை 4.30 மணி

சீனாவின் பெண் திரைப்பட இயக்குநர் ஒருவர் ஹாங்காங்கிற்கு நாடு கடத்தப்படுகிறார். அவர் நாடு கடத்தப்படுவதற்கான காரணம் அவர் மீது சுமத்தப்பட்ட அரசியல் சதியில் ஈடுபட்டதற்கான குற்றச்சாட்டு. அவரது திரைப்படம் தடை செய்யப்படுகிறது.

அந்த பெண் இயக்குநர் தைவான் செல்லும் வழியில் தனது தாயுடன் மீண்டும் இணைகிறாள். இப்பயணம் இயக்குநருக்கு ஒரு குடும்பப் பயணமாக அமைகிறது. இயக்குநர் லியாங் யீங் பெற்ற உண்மை அனுபவமே திரைப்படமாகியுள்ளது.

THE ARTIST / EL ARTISTA  | ARGENTINA | 2008 | தாகூர் திரைப்பட மையம், பிற்பகல் 2.00 மணி

ஜோர்ஜ் ஒரு முதியோர் இல்ல ஊழியன். அவனது ஒரேமாதிரியான வாழ்க்கையில் ஒரு திடீர் மாற்றம். எப்போதும் இறை மனநிலையிலேயே இருக்கும் ஒரு முதியவரை சந்திக்கிறான். அவர் மிகவும் அற்புதமாக ஓவியம் தீட்டும் திறமையைப் பெற்றவர்.

வாய்பேச முடியாத அவரின் ஓவியங்களை  ஒரு ஆர்ட் கேலரியில் வைத்து ஜோர்ஜ் அவ்வோவியங்களுக்கு சொந்தம் கொண்டாடுகிறான்.. திடீரென்று ஒரு எதிர்பாராத பாதை ஒன்று உருவாகிறது. 2 விருதுகள் 7 பரிந்துரைகளைப் பெற்ற படம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x