Published : 17 Dec 2018 05:06 PM
Last Updated : 17 Dec 2018 05:06 PM

சென்னை பட விழா | தேவிபாலா | டிசம்.18 | படக்குறிப்புகள்

காலை 10.45 மணி | AVERNO | DIR: MARCOS LOAYZA  | BOLIVIA | 2018 | 87'

இளைஞன் ஒருவன் தனது உறவினரைத் தேடிச் செல்லும்போது பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறான். நிஜ உலகுக்கு தெரியக் கூடாதென அவன் மறைந்து செயல்படும் ஒவ்வொரு இரவும், அடுத்த நாள் எப்படியாவது உயிர் பிழைத்திட வேண்டும் என்றே தொடர்கிறது. படத்தின் காட்சிகள் பெரும்பாலும் இரவிலே நகர்வதால் கதையின் பதற்றம் பார்வையாளர்களையும் தொற்றிக் கொள்ளும்படி இயக்குநர் கதையை நகர்த்தி இருக்கிறார். கலை நயம், சண்டைக் காட்சிகள் ஆகியவற்றை ரசிக்கும் பார்வையாளர்களுக்கு இப்படம் ஒரு நல்ல விருந்து.

படத்தின் ட்ரெய்லர்

AVERNO

 

பகல் 1.00 மணி | AL ASLEYEEN | DIR: MARWAN HAMED  | EGYPT | 2017 | 125'

கதையின் நாயகன் பெயர் சமீர் எலீவா. சமீர் எலீவாவுக்கு சிறிய குடும்பம் உள்ளது. வங்கியில் பணியாற்றும் சமீருக்கு ஆட்குறைப்பு நடவடிக்கையால் வேலை இழப்பு ஏற்படுகிறது. தனது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வேலை தேடி சமீர் அலைகிறார். அப்போது அவருக்கு ஒரு செல்போன் கிடைக்கிறது. அந்த செல்போனில் கடந்த காலம் குறித்த புதிரான வீடியோவை சமீர் பார்க்கிறார். அதன்பின் அவருக்கு வரும் செல்போன் அழைப்பும், சமீரின் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களும்தான் மீதிக்கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலை ஏற்படுத்தும் மிகவும் சுவரஸ்யமான, த்ரிலிங்கான திரைக்கதை.

சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட 9 விருதுகளை இப்படம் பெற்றுள்ளது.

படத்தின் ட்ரெய்லர்

பிற்பகல் 3.30 மணி | THE SEEN AND THE UNSEEN / SEKALA NISKALA | DIR: KAMILA ANDINI  | INDONESIA / NETHERLANDS / AUSTRALIA | 2017 | 83'

10 வயதான தந்த்ரி என்ற சிறுமி, தன்னுடன் பிறந்த இரட்டைச் சகோதரனான தந்த்ரா நீண்ட நாட்கள் தன்னுடன் இருக்க மாட்டான் என்பதை உணர்கிறாள். தந்த்ராவின் மூளை வலுவிழக்கத் தொடங்கி, அவனுடைய எல்லா உணர்வுகளும் ஒன்றன்பின் ஒன்றாக அழிந்து வருகின்றன. அவன் பெரும்பான்மையான நேரத்தைப் படுக்கையிலேயே கழிக்க, விரைவில் தனியாக இந்த வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து கொள்கிறாள் தந்த்ரி. உண்மைக்கும் கற்பனைக்கும் இடையிலான இழப்பு மற்றும் நம்பிக்கையைத் தன்னுடைய உடல் மொழி மற்றும் தன்னைக் கண்டடைதல் மூலம் மாயப் பயணத்தை அடைகிறாள் தந்த்ரி. பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதைப் பெற்ற படம். 6 விருதுகள் மற்றும் 10 பரிந்துரைகளை இப்படம்பெற்றுள்ளது.

படத்தின் ட்ரெய்லர்

மாலை 5.30 மணி | KILLING JESUS | DIR: LAURA MORA ORTEGA  | COLOMBIA | 2017 | 95'

பல்கலைக்கழகப் பேராசிரியான தனது தந்தை கண் முன்னாலேயே கொல்லப்படுவதைப் பார்க்கிறாள் லிட்டா. மனம் வெதும்பிய லிட்டா, காவல்துறையில் புகார் கொடுக்கிறாள். ஆனால் அவர்களின் செயல்பாடுகள் லிட்டா குடும்பத்தினருக்கு திருப்தி அளிக்கவில்லை. அவளாகவே கொலையாளியைக் கண்டுபிடிக்க முயல்கிறாள். கொலை செய்தவனுடன் நட்பு கொள்கிறாள். நம்பிக்கையானவளாக மாறுகிறாள் லிட்டா. கொலையாளியை லிட்டா பழிவாங்கினாளா?  91வது ஆஸ்கர் அகாடமி விருதுக்காக சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட படம் இது.

படத்தின் ட்ரெய்லர்

KILLING JESUS

 

மாலை 7.30 மணி | SMUGGLING HENDRIX  | DIR: MARIOS PIPERIDES | CYPRUS | 2018 | 93'

காலம் இசையைப் போற்றிக் காப்பாற்றும். ஆனால், சில இசைக் கலைஞர்களை கைவிட்டுவிடும். இயானிஸ் அப்படிப்பட்ட ஓர் இசைக் கலைஞன். கிரேக்கத்துக்கும் துருக்கிக்கும் இருக்கும் எல்லைப் பிரச்சினை, அவனைத் தொல்லைப்படுத்துகிறது. எப்போதும் பிரச்சினையில் இருக்கும் சைப்ரஸ் (Cyprus)-ஐ விட்டு வெளிநாட்டுக்குச் சென்றுவிட முடிவு செய்கிறான். நாயகன் எடுத்த முடிவை அவன் வளர்க்கும் நாய் ஜிம்மி தடுக்கிறது. அவன் நாட்டை விட்டு விலக முயல, ஜிம்மி வீட்டை விட்டு விலகி ஓடி விடுகிறது. தீவின் கிரேக்க எல்லைக்கும் துருக்கி எல்லைக்கும் நடுவே இருக்கும் ஐக்கிய நாடுகள் நிலப்பரப்புக்குள் நுழைந்து விடுகிறது. மனம் மாறத் தயாராக இல்லாத நாடுகளுக்கிடையே, விலங்குகள் இடம் மாறத் தடை இருக்கிறது. அப்படியென்றால் ஜிம்மி? ஜிம்மியின் மீது தீராத அன்பு கொண்ட இயானிஸ் ஜிம்மியை எப்படியும் தன்னோடு எடுத்துச் செல்ல தீர்மானிக்கிறான். அதற்கு அவனுக்கு உதவ வருகிறார் ஒரு துருக்கிய குடியேறி.  சட்டதிட்டங்களை மீறி, தன் உற்ற நண்பன் ஜிம்மியை மீட்க இயானிஸ் செய்யும் தசாவதார சாகசங்கள் பலித்ததா? இத்திரைப்படம் 3 விருதுகள் பெற்றுள்ளது. 6 பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

படத்தின் ட்ரெய்லர்

SMUGGLING HENDRIX

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x