திரைப்பட விழாவில் ஏன் படம் பார்க்க வேண்டும்?

திரைப்பட விழாவில் ஏன் படம் பார்க்க வேண்டும்?
Updated on
3 min read

ஒரு திரைப்பட விழாவில் நாம் ஏன் கலந்துகொள்ள வேண்டும்? தொழில் நுட்பம் வளர்ந்த இந்த நாட்களில் எந்தப் படமும் இணையத்தில் கிடைத்துவிடுமே. இணைய வசதி இல்லாத ஒரு காலத்தில் ஒரு படத்தைப் பார்க்க டெல்லிக்கும் கோவாவுக்கும் திரைப்பட விழாவுக்குப் போனீர்கள் சரி ஹோம் தியேட்டரும் ,5.1 ம் வீட்டுக்கே வந்துவிட்ட காலத்தில் இப்போதும் அது அவசியமா? என்று திரைத் துறையைச் சார்ந்த நண்பர் ஒருவர் கேட்டார். அவருக்கு என்ன பதில் சொன்னேன் என்று பிறகு சொல்கிறேன்.

ஒரு படத்தை திரைப்பட விழாவில் பார்ப்பதற்கும் அதே படத்தை வீட்டில் பார்ப்பதற்குமான வித்தியாசம் என்ன?  ஒரே ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருந்தால் இந்தக் கேள்விக்கான பதில் உங்களுக்கே தெரிந்திருக்கும். நான் சென்னை திரைப்பட விழாவில் தான் மைக்கேல் ஹெனகேயின் அமோர் (Amour) என்கிற படத்தைப் பார்த்தேன்.

அதற்குப் பிறகு அந்தப் படத்தை வீட்டிலும் ஒருமுறை பார்த்தேன். அந்தப் படத்தின் அழகே அதன் மௌனம்தான்.அந்த மௌனத்தை வீட்டில் தனியாக உணர்வதற்கும் ஆயிரம் பேருக்கு நடுவில் அமர்ந்து திரையரங்கில் உணர்வதற்குமான வித்தியாசத்தை  எப்படிச் சொல்ல?

திரைப்பட மாணவனாக நான் தொடர்ந்து திரைப்படங்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். எத்தனை படங்கள்  பார்த்தாலும் திரைப்படத்தின் மீதான ஈர்ப்பு, கூடுகிறதே தவிர குறையவே இல்லை.கதை சொல்வதிலும் காட்சி அமைப்பிலும் ஒவ்வொரு வருடமும் புதிய அணுகு முறை, புதிய தொழில் நுட்பம் என நல்ல திரைப்படங்கள் கற்றுத் தந்து கொண்டே இருக்கின்றன.

ஒரு வருடம் முழுக்க நாம் பலவிதமான படங்களைப் பார்க்கிறோம். அதில் நல்ல படங்கள் இருக்கின்றன. மோசமான படங்களும் இருக்கின்றன. வீட்டை வருடத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்வது போல ஒரு திரைப்பட விழா  நம்மைச் சுத்தம் செய்கிறது. ஒரு வகையில்   Software update போல ரசனை சார்ந்து நம்மை அடுத்த இடத்துக்கு உயர்த்துகிற திரைப்பட விழா ஒரு கலாச்சார நிகழ்வு. அதில் படங்களை மட்டும் நாம் பார்ப்பதில்லை. அதன் மூலம் பல நண்பர்களைச் சந்திக்கிறோம்.பல கலந்துரையாடல்கள் செய்கிறோம். அடுத்த நிலைக்கு நகர்கிறோம்.

சிறுவயதில் ‘இன்னிக்கு சினிமாவுக்கு போகலாமா?’ என்று அப்பா சொன்னால் போதும். அந்த நிமிடத்தில் இருந்து ஒரு பரவசம் தொற்றிக் கொள்ளும். அப்போதும் முன்பதிவு கிடையாது. வரிசையில் நிற்கவேண்டும். உள்ளே போய் இடம் பிடிக்கவேண்டும். அதே  அனுபவத்தை ஒவ்வொரு திரைப்பட விழாவும் தருகிறது.

வரிசையில் நின்று எந்த இருக்கை என்று தேடிப்பிடித்து, படம் முடிந்து அடுத்த படத்துக் கான வரிசையில் நிற்கும்போது பார்த்த படத்தைப் பற்றி விவாதித்து, எல்லாமே அனுபவம். அடுத்த படத்துக்கு கொஞ்சம் இடைவெளி இருந்தால் நண்பருடன்  ‘ஒரு டீ சாப்டலாமா? என்று தேவி தியேட்டரின் பின்னால் நடந்து சென்றால் அங்கு  பருத்திப் பால் அருந்த ஒரு கூட்டம் இருக்கும்.

‘செம படம்’ என்று ஒருவர் நாம் பார்க்காத படத்தின் பெயரைச் சொல்லுவார். ‘ஆஹா தவற விட்டுட்டமே’ என்று பட்டியலில் தேடிப்பார்த்தால் அந்தப் படம் மறு திரையிடல் இருக்காது. ஒருநாளைக்கு ஐந்து படம் பார்த்தாலும் பார்க்காத படம் உறுத்திக்கொண்டே இருக்கும்.

தேனீர்க்கடையில் இருந்து ஒரு கூட்டம் அவசரமாகக் கிளம்பும். ‘சூப்பர் படம் ப்ரோ.. கேசினோவுக்குப் போறோம்..’ என்று ஒரு குரல் கேட்க அந்தப் படத்தின் கதைச்சுருக்கத்தை நின்று கொண்டே படித்து காட்சி நேரம் பார்த்தால் இன்னும் ஐந்து நிமிடங்களே இருக்கும். ஓட்டமும் நடையுமாக அண்ணா சாலையைக் கடந்து கேசினோ போனால் படம் துவங்கி இருக்கும். இருட்டுக்குள் கண் தெரியாமல் நுழைந்து இருக்கையைத் தடவி அமரவேண்டும். அன்று பார்த்ததிலேயே அந்தப் படம் அற்புதமாக இருக்கும்.

பசி வந்தால் பத்தும் பறந்திடும் என்பதுதான் பழமொழி. திரைப்படவிழாக்காலத்தில் பசியும் ஒரு பொருட்டில்லை. சந்துக் கடைகளில் பிரிஞ்சியும், மாலைகளில் பிரெட் ஆம்லெட்டும் கிடைத்தால் சரி கிடைக்காவிட்டால் சினிமாதான் பிரதான உணவு.விரதம் இருப்பதைப் போல ஒவ்வொரு நாள் விடிந்ததும் தயாராகி அன்று பார்க்கவேண்டிய படங்களைக் குறித்துக் கொண்டு, அடையாள அட்டையைக் கழுத்தில் மாட்டினால் இரவு அடையாள அட்டையைக் கழற்றி வைக்கும் கணம் வரை சினிமாதான். உலகத்தில் வேறு என்ன நடக்கிறது என்று தெரியாது. 

ஒவ்வொரு சினிமாவும் ஒவ்வொரு லயத்தில் இருப்பதால் காட்சிகளும் திரைப்படப் பெயர் களும் குழம்பி எந்த நாள் எந்தப்படம் பார்த்தோம் என்பதும் சில சமயம் மறந்து கனவிலும் சினிமாவின் காட்சிகள் ஒடிக்கொண்டிருக்கும். திரைப்பட விழா நிறைவுறுகிற நாளில் ஒரு நிறைவும் வெறுமையும் சேர்ந்துவரும்.

திரைப்பட விழாவில் ஏன் கலந்துகொள்ள வேண்டும் என்று துவக்கத்தில் கேட்ட நண்பரிடம் நான் ஒரு கேள்வியைக் கேட்டேன். ‘உங்க குழந்தை சிங்கத்தைப் பார்க்கணும்னு சொன்னா என்ன செய்வீங்க?  ‘ஜூவுக்கு அழைச்சிட்டுப் போவேன்’ . ‘ஏன்? உங்க ஹோம் தியேட்டர்ல அனிமல ப்ளானெட்ல காட்ட வேண்டியதுதான’ என்று கேட்டேன்.புன்னகைத்தார். ‘நிஜமான சிங்கத்தை ஜூவில கூடப் பாக்கக்கூடாது. காட்டிலதான் பாக்கணும். சவுத் ஆப்ரிக்காவில லயன் சபாஃரி இருக்கு..அதுதான் அனுபவம்’என்றார்.அதுபோலத்தான் திரைப்பட விழா அனுபவமும் என்று நான் சொல்ல இந்த வருடம் சென்னை திரைப்பட விழாவுக்கு வருவ தாகச் சொன்னார்.

இந்தியாவில் அதிகமாக திரைப்படங்கள் தயாரிக்கிற இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு. ஆனால் பிரத்யேகமாக நம் ஊரில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் சினிமாவில் பணிபுரியும் எத்தனை பேர் கலந்து கொள்கிறார்கள்?கோவாவில் நடக்கும் திரைவிழாவிற்கு கேரளாவில் இருந்து ஒரு முழு ரயிலையும் முன்பதிவுசெய்து படம்பார்க்க வருகிறார்கள் என்று நண்பர் ஒருவர் சொன்னார்.

ஆனால் நம் ஊரில்  நடக்கும் விழாவுக்கு சில பிரபலமான முகங்கள்,சில உதவி இயக்குனர் கள் தவிர திரைத்துறையில் இருந்து யாரையும் பார்க்கமுடியாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கும். சினிமாவைத் தொழில்முறையாகக் கொண்டிருக்கிற ஒவ்வொருவரும் இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும். நாம் எடுப்பது கமர்ஷியல் படங்களாக இருந்தாலும் உலகம் முழுக்க சினிமாவை எப்படி எடுக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

நல்ல சினிமாவைப் பார்க்கிற பழக்கம் தான் நல்ல சினிமாவை எடுக்கவும் உதவும். அந்த வகையில் திரைப்படம் குறித்த எனது அணுகுமுறையை மாற்றி அமைத்ததில் சென்னை திரைப்பட விழாவுக்குப் பெரும் பங்கு இருக்கிறது. இந்த வருடம் உலகின் பல திரைப்பட விழாக்களில் நான் கலந்து கொண்டாலும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்வதை பெருமையாகக் கருதுகிறேன். ஏனெனில் மொழி தெரிந்த நம் நண்பர்களுடன் அமர்ந்து நல்ல படங்களைப் பார்ப்பதும், விவாதிப்பதும் அற்புதமான அனுபவம்.

செழியன்
திரைப்பட இயக்குனர்,ஒளிப்பதிவாளர்
‘உலக சினிமா’ நூலின் எழுத்தாளர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in