Last Updated : 20 Dec, 2018 09:13 PM

 

Published : 20 Dec 2018 09:13 PM
Last Updated : 20 Dec 2018 09:13 PM

நல்லது பண்ணுவது முறைகேடு என்றால் நான் முறைகேடு தான் செய்தேன்: விஷால் காட்டம்

நல்லது பண்ணுவது முறைகேடு என்றால், ஆம் நான் முறைகேடு தான் செய்தேன் என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் விஷால் காட்டமாகத் தெரிவித்தார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் எதிரணியைச் சேர்ந்தவர்கள், இந்த நிர்வாகம் சரியாகச் செயல்படவில்லை என்று கடும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு சங்க அலுவலகத்தைப்  பூட்டினார்கள்.

விஷால் இன்று காலை தயாரிப்பாளர் சங்கத்துக்குப் போடப்பட்ட பூட்டை உடைத்து, உள்ளே செல்ல முற்பட்டார். அப்போது அவருக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து விஷால் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டார்.

விடுவிக்கப்பட்ட பிறகு பத்திரிகையாளர்கள் மத்தியில் விஷால் பேசியதாவது:

''நான் காவல்துறையினர் யாரையும் தாக்கிப் பேசவில்லை. ஆகையால், நீதிமன்றத்தை மிகவும் நம்புகிறேன். கண்டிப்பாக, நீதிமன்றத்துக்குச் சென்று முறையீட்டு நீதி கிடைக்கும் என நம்புகிறேன். ஒவ்வொரு முறையும் எனக்கு நீதி கிடைத்திருக்கிறது.

இந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எப்போதுமே நலிந்த சிறு தயாரிப்பாளர்களுக்காக தொடர்ச்சியாக வேலை செய்வோம். இளையராஜா சாரை கவுரவப்படுத்தும் விதமாக பிப்ரவரி மாதம் நடத்தப் போகிறோம். என்ன தடை வந்தாலும், அதை மீறி நடத்தி அதன் மூலம் வரும் நிதியை வைத்து நிலம் வாங்கிக் கொடுப்போம்.

இந்த நிகழ்ச்சி நடக்கக் கூடாது என்று உறுப்பினர்களாக இல்லாத சிலரும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கண்டிப்பாக ஓயமாட்டோம். பொதுக்குழுவைக் கூட்டுவதற்கான தேதியை தேர்வு செய்து வருகிறோம். யார் பொதுக்குழுவில் பிரச்சினை பண்ணினார்களோ, அவர்களே தற்போது பொதுக்குழுவைக் கூட்டச் சொல்லிக் கேட்கிறார்கள். முறைகேடுகள் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு இருக்கிறார். அவரிடம் கேட்கலாம். விதிமுறைகள்படி கேட்டால் காட்டுவோம். அது தெரியாமல் முறையின்றிச் செயல்படுகிறார்கள். எங்கே தயாரிப்பாளர்களுக்கு நல்லது நடந்துவிடப் போகிறதோ என்று நினைத்து செயல்படுகிறார்கள்.  நான் செய்யாத குற்றத்திற்காக காலையிலிருந்து 145 கேஸ் போட்டுள்ளார்கள். தவறு செய்தால் ஜெயிலுக்கு போகக் கூட தயாராக இருக்கிறேன். தப்பே பண்ணவில்லை.

ஜே.கே.ரித்தீஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினரே இல்லை. ஆனால், அவர் உறுப்பினர் என்று போட்டுள்ளார். மேலும், அவர் ஒரு வழக்கில் குற்றவாளி. அவர் மீது எந்தவொரு நடவடிக்கையுமே இல்லை. அதைவிடுத்து என் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இது ஏந்த விதத்தில் நியாயம்? இது தான் இன்றைய நிலவரம். எனக்கே இந்த கதி என்றால், என்ன சொல்வது?

தயாரிப்பாளர்கள் என்பவர்கள் முதலாளிகள். அவர்களுடைய குழந்தைகளுக்கு படிப்பு உதவி, மருத்துவ உதவி ஆகியவை கொடுக்கிறோம் என்று எப்படி வெளியே சொல்ல முடியும். இவை அனைத்துக்குமே கணக்கு இருக்கிறது. எத்தனை தயாரிப்பாளர்கள் வீடில்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வாழ்வாதாரம் இல்லாத தயாரிப்பாளர்கள் நாங்கள் கொடுக்கும் 12,500 ரூபாய் பென்ஷன் வைத்துக்கொண்டு குடும்பம் நடத்துகிறார்கள். இதை மிகவும் வேதனையுடன் சொல்கிறேன். மாதந்தோறும் ரூ. 20 லட்சம் வீதம் 20 மாதம் கொடுத்துள்ளோம். இதுவே 4 கோடி ரூபாய் ஆகிறது. தீபாவளி, பொங்கலுக்குப் பணம் கொடுத்துள்ளோம்.

இப்படி நிறைய நல்லது செய்தேன். நல்லது பண்ணுவது முறைகேடு என்றால், ஆம் நான் முறைகேடு தான் செய்தேன். இளையராஜா சார் விழாவை பிரம்மாண்டமாக நடத்தி, நலிந்த தயாரிப்பாளர்கள் எதிர்நோக்கும் அரை கிரவுண்டு நிலம் கொடுக்கப்படும்.

எங்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்துவிடும் என்கிறார்கள். அப்படியென்றால் நாங்கள் ரவுடிகளா?. நாங்கள் எல்லாம் தயாரிப்பாளர்கள். தயாரிப்பாளர்களுக்கு நல்லது நடந்துவிடக் கூடாது என்று நினைக்கும் அனைவருமே இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் இருப்பதாக நினைக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் நான் தேர்தலில் நிற்கக்கூடாது என நினைக்கிறேன். நான் ஒரு கேள்வி கேட்டால் கூட பதில் வருவதில்லை. உடனே தேர்தலில் நிற்கிறேன், ஜெயிக்க வைத்துவிடுகிறார்கள். என் கேள்விக்கு பதில் கிடைத்தால், நான் பேசாமல் நடித்துக் கொண்டிருப்பேன். தடையைத் தாண்டித் தான் நல்லது செய்ய முடியும் என்றால், நல்லது செய்து கொண்டே இருப்பேன்''.

இவ்வாறு விஷால் பேசினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x