Published : 18 Dec 2018 04:46 PM
Last Updated : 18 Dec 2018 04:46 PM

சமூகத்துல நடப்பதை திரையில் மறைப்பது நியாயமல்ல: CIFF-ல் வெற்றிமாறன் ஆவேசம்

தமிழின் கவனிக்கத்தக்க இயக்குநர் வெற்றிமாறனிடம் சென்னை சர்வதேச திரைப்பட விழா பார்வையாளர்கள் கலந்துரையாடினர். அதில் முன்வைக்கப்பட்ட கேள்விகளும் அவரின் பதில்களும்:

"உலக சினிமா பார்ப்பது என்பது பற்றி உங்கள் அனுபவம் என்ன?"

"உலக சினிமா பார்ப்பது நாம் சிந்திக்கும் விதத்தை மாற்றும். திரை மொழியில், தனி மனித வாழ்க்கையில் அதன் தாக்கம் வெளிப்படும்.   நாங்கள் படிக்கும் காலத்தில் உலக சினிமா பார்க்க பெரிய வாய்ப்புகள் இல்லை. பாலுமகேந்திரா சாரிடம் உதவி இயக்குநராக இருக்கும் போது, ‘நீங்க இங்க நடக்குற திரைப்பட விழாவுக்குதான் போறீங்க, கோவா போங்க எல்லா இடங்களில் நடக்குற விழாக்களுக்கும் போங்க’ என்பார்.

பொதுவாக வேலை அதிகமாக இருக்கும். எப்பயாவது நேரம் இருக்கும்போது அவரே வேலை கொடுத்துடுவார். மூணு மாதத்துக்கு ஒரு முறை அவரே ஓய்வா இருக்கும்போது எல்லாரையும் படத்துக்கு கூட்டிட்டு போவார். அந்தப் படம் நல்லா இருக்கா இல்லையானு முடிவுக்கு வர்றதே கஷ்டமா இருக்கும்.

அதுமட்டுமல்லாமல், இந்த உலக சினிமாவுக்கான வாயில் சென்னைல இருந்துதான் இந்தியாவுக்கே கிடைச்சுதுன்னு சொல்லுவேன். பாலுமகேந்திரா சாரோட உதவியாளர் ராஜாதான் கஷ்டப்பட்டு உலகத் திரைப்படங்களை சென்னைக்கு எடுத்துட்டு வந்தார். அதுக்கப்புறம் கேரளா, சுத்தி இருக்கும் மத்த மாநிலங்கள் என்று இந்தியா பூரா பரவிடுச்சு.

"திரைப்படத்துறையில் படிக்கும் மாணவர்கள் ஏன் உலகத் திரைப்படங்கள் பார்க்கவேண்டும்?"

"நிதானத்தையும், பக்குவத்தையும் திரைத்துறையில படிக்குற மாணவர்களுக்கு இந்த மாதிரி திரைப்படங்கள் பார்க்கும்போது ஏற்படும். எல்லாவற்றையும் விட திறந்த மனதையும் புதியத ஏத்துக்கிற பழக்கத்தையும் உருவாக்கும். நம்முடைய தனிமனித உறவுகளைக் கையாள்வது தொடங்கி வரலாற்றை புதிய பார்வையில சொல்வது வரை ஒரு நல்ல திரைப்படத்தால உருவாக்க முடியும்."0

"நீங்கள் உலகம் முழுக்க பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு இந்திய, தமிழ்ப் படங்களை கொண்டு செல்லும் நபராக இருக்கிறீர்கள், உங்கள் பார்வையில் சர்வதேசத் திரைப்பட விழாவின் இயல்பு, நோக்கம் என்ன?"

"ஒரு மாற்றுத்தளத்தை மாற்று சினிமாவுக்கு கொடுக்கும் இடமாக சர்வதேச திரைப்பட விழாக்களை பார்கிறேன். குறிப்பாக சொல்லனும்னா மூன்று விஷயங்கள் கலாச்சாரப் பகிர்வு, பார்வையாளர்கள், பணம். இது மூன்றும் அங்கே கிடைக்கிறது. ஒரு கலைஞன் தன்னை எந்த சமரசங்களும் இல்லாம தனக்கான முழு இடத்தை எடுத்துக்கொள்வது இந்த மாதிரி விழாக்களில் தான்.

"அந்தத் திரைப்பட விழாக்களில் உங்கள் படங்களை கொண்டுபோன அனுபவம் பற்றி சொல்லுங்களேன்?"

"வெனிஸ் திரைப்பட விழா, கேன்ஸ் திரைப்பட விழா, டொராண்ட்டோ திரைப்பட விழா என்று பல்வேறு விழாக்களுக்கு சென்றிருக்கிறேன். டொராண்டோ திரைப்பட விழாவைப் பொறுத்தவரை அந்த ஊரில் திருவிழாவைப் போல நடக்கும். குடும்பம் குடும்பமாக உலகத் திரைப்படங்கள் பார்க்க வருகிறார்கள்.

காக்கா முட்டை மாதிரியான படங்களுக்கு அங்கே வரவேற்பிருக்கும். ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவைப் பொறுத்தவரை அங்கே அரசியல் படங்களுக்கே முக்கியத்துவம் இருக்கும். ‘விசாரணை’ மாதிரியான படங்களுக்கு அங்கே வரவேற்பிருக்கும். ‘கேன்ஸ்’ திரைப்பட விழா எல்லாரும் ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும். அங்கிருக்கும் திரைப்பட ரசிகர்களின் தரமே வேறு லெவல்."

"தமிழ் சினிமாவின் தற்போதைய சூழல் பற்றி உங்கள் கருத்து?"

"நம்மிடம் வேவ்வேறு விதமான திரைப்பட முயற்சிகள் இல்லை. அதனால் எங்களைப்போன்றவர்கள் எல்லாவற்றையும் கமர்சியல் - மையநீரோட்ட பாணி படங்களில் வேலை செய்யவேண்டிய நிர்பந்தம் உள்ளது. நான், ராம் இன்னும் சிலர் இதற்கும் அதற்கும் இடையில் முயற்சிகள் மேற்கொள்கிறோம். அதே நேரம் கமர்சியல் - மையநீரோட்ட படங்களைப் பார்க்கும் பார்வையாளர்களின் பார்வையும் விரிவடைகிறது. அதன் விளைவாக சில நல்ல படங்கள் வருவதும் ஒரு பக்கம் நடந்துகொண்டு தான் இருக்கிறது.                                          

‘கதாநாயக பிம்பம்’ , ‘வன்முறை’ போன்ற பல விஷயங்கள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து காட்டப்படுவது சமூகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இம்மாதிரி விஷயங்களை நீங்கள் எப்படி கையாள்கிறீர்கள்?   

"பார்வையாளர்களை எல்கேஜி பசங்க மாதிரி அணுகுற விதம் பாதி நேரம் படம் எடுக்கிறவர்களிடமும் மீதி நேரம் சினிமா பற்றிய புரிதல் தங்களுக்கு இருக்கு என்று நினைத்துக் கொண்டிருக்கிறவர்களிடமும் இருக்கிறது. தமிழ் சினிமா மூலமாகத் தான் திராவிட இயக்கங்கள் தங்கள் கொள்கைகளை எடுத்துச் சென்றது. பாமரனுக்கும் பெரிய சமூக மாற்றங்கள் பற்றி தெரிவிப்பது சினிமா தான்.

சமூகத்துல நடப்பதைத்தான் திரையில காண்பிக்கிறோம். இன்னிக்கு பதினைஞ்சு வயசு பொண்ணுங்க ஹேண்ட் பேகை திறந்து பாருங்க சிகிரெட் இருக்கும். ஆனா இதை படத்துல மட்டும் வைக்கக் கூடாது என்பது, எப்படி நியாயம்? ஒழுக்கத்தை புகுத்துவது, வலியுறுத்துவது எப்போதுமே ஆபத்தானதுதான். எல்லா படங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்களை நோக்கிக்தான் இருக்கும். எல்லா படங்களும் எல்லருக்குமானதல்ல என் மகளை ‘விசாரணைக்கோ’ ‘வட சென்னைக்கோ’ கூட்டிட்டுப்போக மாட்டேன். 

"நீங்கள் மதிக்கிற, உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர்கள் பற்றி?"

தமிழில் பாலுமகேந்திரா, மணிரத்னம்தான் அவங்க கிட்ட தான் சிந்தனை ரீதியாகவும், அதை வெளிப்படுத்தும் விதத்திலும் ஒரு கட்டுக்கோப்பு இருக்கும். உலக அளவில் குரசோவா பிடிக்கும். அவரிடம் நல்ல எழுத்து இருக்கிறது அவர் தன்னுடைய படங்களில் சமூகத்தில் புறந்தள்ளப்பட்ட மனிதர்களையே முன்வைக்கிறார்.

"நம்ம ஊர் படங்களுக்கு வெளிநாட்டிலிருந்து தயாரிக்க உதவி கிடைக்க வாய்ப்புள்ளதா?"

"வெளிநாட்டிலிருந்து நிதியுதவியைப் பொறுத்தவரை அதற்குத் தேவையான வேலைக்கான ஒழுங்கு இருந்தால் கிடைக்கும். என்னுடைய ‘வட சென்னை’ எழுதாமல் எடுத்த படம். நான் ஒரு உள்ளுணர்வு அடிப்படையில்  செயல்படும் ஒரு எழுத்தாளன். இந்தப் படம் எப்படி எழுதினீங்கன்னு கேட்டா தெரியாது.

- இனியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x