Published : 30 Nov 2018 12:35 PM
Last Updated : 30 Nov 2018 12:35 PM

‘2.0’ படம் குறித்து எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் விமர்சனம்

ரஜினி நடிப்பில் நேற்று (நவம்பர் 29) ரிலீஸான படம் ‘2.0’. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படம், ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாகும். ஹீரோயினாக எமி ஜாக்சன் நடிக்க, வில்லனாக அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தைப் பார்த்த பெரும்பாலானவர்கள் பாராட்டி வருகிறார்கள். தொழில்நுட்பத்தில் மிகச்சிறந்த தமிழ்ப்படமாக இது இருக்கிறது என ஆச்சரியப்படுகின்றனர்.

இந்நிலையில், பிரபல எழுத்தாளரான பட்டுக்கோட்டை பிரபாகர், ‘2.0’ படத்தைப் பார்த்துவிட்டு தன்னுடைய முகநூலில் பாராட்டி எழுதியுள்ளார்.

“தமிழ்த் திரையுலகம் பெருமைப்பட வேண்டிய, அர்த்தமுள்ள எங்கேஜிங் என்டெர்டெயினர் ‘2.0’. ஷங்கர் இந்தமுறை சொல்லியிருக்கும் கருத்து தமிழர்களுக்கானதல்ல, இந்தியர்களுக்கானதல்ல, உலகம் முழுதுமிருக்கும் மொத்த மக்களுக்குமானது.

கோடிகளைக் கொட்டத் தயாராக இருக்கும் லைகா சுபாஸ்கரன் போன்ற ஒரு தயாரிப்பாளர் அமைந்தால், இன்றைய தொழில்நுட்பத்தில் ஒரு இயக்குநரின் எந்தக் கற்பனையையும் சாத்தியப்படுத்த இயலும்.

ஆனால், எதைக் கற்பனை செய்கிறோம் என்பதில்தான் திறமை இருக்கிறது. ஷங்கரின் கற்பனை மிகவும் வளமாக, புதுமையாக, சுவாரசியமாக, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கே சவால் விடுமளவில் இருப்பதுதான் படத்தின் பிரமாண்டத்திற்கும் தரத்திற்கும் ஆதாரமான காரணம்.

very creative colorful dreamy imagination shankar. இந்த அழகான ஃபேன்டசி கற்பனைக்கு ஒரு பூச்செண்டு தருவது அநியாயம், பூந்தோட்டத்தையேத் தரலாம்.

ஒளிப்பதிவு செய்துள்ள நீரவ் ஷா, ஒலிப்பதிவு செய்துள்ள ரசூல் பூக்குட்டி, இசையமைத்துள்ள ஏ.ஆர் ரஹ்மான் எல்லோருக்குமே பெருமை சேர்க்கும் படம். ரஜினியை வசீகரனாக, சிட்டியாக ஆட்டின் குரல் கொடுத்து, தலையை ஆட்டிச் சிரிக்கும் வில்லனாக என்றெல்லாம் காட்டியும், அதற்கும் மேல் இன்னொரு குட்டி அவதாரத்தையும் எடுக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

அக்‌ஷய் குமாருக்கு அவார்டுகளை வாங்கித் தரப்போகிற பாத்திரம். அதை உணர்ந்து மிகவும் நிறைவாகவும் நேர்த்தியாகவும் செய்திருக்கிறார். பல காட்சிகளில் மிரட்டுகிறார். அந்த உருவம் குழந்தைகளைப் பல நாட்களுக்கு உறங்கவிடாது. (அவர் க்ளோஸப்பில் வரும் காட்சிகளில் என் 4 வயது பேத்தி ‘பயமா இருக்கு’ என்று சொல்லி முகத்தை மூடிக்கொண்டாள்.)

ஆடை வடிவமைப்பு, கலை வடிவமைப்பு, மேக்கப் என்று எல்லாமே உலகத்தரம். உங்களுக்குப் பிடித்த ஸ்வீட் என்ன? குலோப் ஜாமூன் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களால் ஒரு நேரத்தில் எத்தனை சாப்பிட இயலும்? 2? 3? 4? 5?

இந்தப் படத்தில் 20, 30 என்று சாப்பிடச் சொல்கிறார்கள். தனித்தனியாக மிரட்டும் ரசிக்கும்படியான பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகளை அடிக்கடி காட்டுவதால் ஏற்படும் திகட்டல் ஒன்றுதான் எனக்குக் குறையாகத் தெரிகிறது.

அதிகப்படியான செல்போன் உபயோகத்தால் ஏற்படும் கதிர் வீச்சு அபாயத்தின் விளைவாக அழிந்துவரும் பறவைகளுக்காக அழுத்தமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் அதிகாரமாகவும் கெஞ்சியும் மிரட்டியும் புள்ளிவிவரங்களுடன் புத்தியில் உறைக்கும்படியாக குரல் கொடுத்திருக்கும் ஷங்கருக்கு, இந்தக் கதையின் அடிநாதக் கருத்துக்காகவே தனியான மனப்பூர்வமான பாராட்டுகள்.

‘பறவைகள் புழுக்களை திங்கிறதாலதான் மனுஷங்களுக்கு உணவு கிடைக்குது. பறவைகள் வாழலைன்னா மனுஷங்களும் வாழ முடியாது, பசிக்கு நம்ம கையையே வெட்டிச் சாப்பிடுவோமா? என்னதான் சொன்னாலும், உச்சு கொட்டிட்டு வாட்ஸ் அப்ல மெசேஜ் போட்டுட்டு கடமை முடிஞ்சிடுச்சின்னு போய்க்கிட்டே இருக்கப் போறோம். அவ்வளவு பெரிய அமெரிக்காவிலேயே ரெண்டே நெட்வொர்க்தான், சீனாவில் மூணே நெட்வொர்க்தான். நம்ம நாட்லதான் 10 நெட்வொர்க்.’ இப்படி பொட்டில் அறையும் பல வசனங்கள் (ஜெயமோகன் மற்றும் ஷங்கர்).

ஒப்புக்கொள்ள வேண்டிய மற்றும் அடிமனதில் ஆழமாகப் பதிய வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம், இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானதல்ல. படத்தின் கருத்தை மனதார ஏற்கும் விதமாக இனி வீட்டில் இருக்கும்போது லேண்ட்லைனை மிக அதிகமாக உபயோகிப்பது என்று தீர்மானித்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் பட்டுக்கோட்டை பிரபாகர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x