Published : 20 Nov 2018 01:01 PM
Last Updated : 20 Nov 2018 01:01 PM

விஜய்யைத் தொடர்ந்து விஷாலைத் தாக்கும் ராமதாஸ்

மது பாட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருப்பதால், விஜய்யைத் தொடர்ந்து விஷாலைத் தாக்கியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

பாமக நிறுவனர் ராமதாஸும், பாமக இளைஞரணித் தலைவரான அன்புமணி ராமதாஸும், மது குடித்தல் மற்றும் புகை பிடித்தலுக்கு எதிராகக் கடந்த பல வருடங்களாகக் குரல் கொடுத்து வருகின்றனர். அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, போதைப் பொருட்களுக்கு எதிராக நிறைய விஷயங்களைச் செய்தார்.

சினிமாவைப் பார்த்துதான் இளைஞர்கள் புகை பிடித்தலுக்கும், மது குடித்தலுக்கும் அடிமையாகிறார்கள் என்பதால், முன்னணி நடிகர்கள் படங்களில் அவ்வாறு நடிக்கக் கூடாது என இருவருமே குரல் கொடுத்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட நடிகர்களிடமும் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமீபத்தில் கூட ‘சர்கார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோது, அதில் விஜய் புகை பிடிப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அதற்கு ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அந்த போஸ்டர் திரும்பப் பெறப்பட்டது. ஆனாலும், படத்தில் அதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றன.

இந்நிலையில், விஷால் நடித்துவரும் ‘அயோக்யா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், நேற்று (நவம்பர் 20) மாலை வெளியானது. அதில், போலீஸ் ஜீப்பின் மீது அமர்ந்தபடி, கையில் பீர் பாட்டிலுடன் போஸ் கொடுத்துள்ளார் விஷால். இதற்கு ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

“பீர் பாட்டிலுடன் நடிகர் விஷால் தோன்றும் விளம்பரமும், முதல் சுவரொட்டியும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும். இந்த விளம்பரம் மூலம் அவரது ரசிகர்களுக்கு விஷால் சொல்ல வரும் செய்தி என்ன? நடிகர் சங்க பொதுச் செயலாளரிடம் இருந்து சமூக அக்கறையை எதிர்பார்க்கிறேன்.

‘அயோக்யா’ திரைப்பட விளம்பரத்தில் கதாநாயகர் விஷால் பீர் புட்டியுடன் தோன்றுகிறார். நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் என்ற முறையில், புகைக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிப்பதைத் தடை செய்ய வேண்டும் என கடிதம் எழுதினேன். இப்போது புகையைத் தாண்டி பீர் பாட்டிலுடன் நடிக்கிறார்.  என்னவொரு சமூகப் பொறுப்பு!” என கிண்டலாக ட்வீட் செய்துள்ளார் ராமதாஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x