Published : 30 Nov 2018 14:15 pm

Updated : 30 Nov 2018 14:37 pm

 

Published : 30 Nov 2018 02:15 PM
Last Updated : 30 Nov 2018 02:37 PM

பக்‌ஷிராஜன் பெயர் ஏன்? - 2.0 படத்தின் வசனகர்த்தா ஜெயமோகன் விளக்கம்

2-0

2.0 படத்தில், அக்‌ஷய் குமார் கதாபாத்திரத்துக்கான பெயர்க் காரணத்தை, படத்தின் இணை வசனகர்த்தாவும் எழுத்தாளருமான ஜெயமோகன் விளக்கியுள்ளார்.

2.0 படத்தில் அக்‌ஷய் குமார் பறவையியல் ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியாவின் பேர்ட்மேன் என்று அறியப்படும் சலீம் அலியை ஒட்டியே இந்த கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்‌ஷய் குமார் கதாபாத்திரத்தின் பெயர் படத்தில் பக்‌ஷிராஜன். பறவைகளின் அரசன் என்று பொருள்படும்படியான இந்தக் கதாபாத்திரத்துக்கு ஏன் இந்தப் பெயர் வைக்கப்பட்டது என படத்தில் இயக்குநர் ஷங்கருடன் இணைந்து வசனம் எழுதிய எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைப்பக்கத்தில் விளக்கியுள்ளார்.

" படத்தில் பக்‌ஷிராஜன் என்று பெயர் வைத்தது நான்தான். பக்‌ஷிராஜன் என்பது (எழுத்தாளர்) பி.ஏ.கிருஷ்ணன் அப்பாவின் பெயர். நாங்குநேரி பக்‌ஷிராஜ அய்யங்கார் ஒரு கம்பராமாயண-நாலாயிரத் திவ்ய பிரபந்த அறிஞர், வழக்கறிஞர். கம்பராமாயணம் மர்ரே ராஜம் பதிப்பின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். ராஜாஜியின் நண்பர்

பக்‌ஷிராஜபுரம் என்பது எங்களூரில் இருக்கும் பறக்கையின் சமஸ்கிருதப்பெயர். தமிழில் பறவைக்கரசனூர். சுருக்கம் பறக்கை. அங்கே ஜடாயு பெருமாளுக்கு நிகராக வழிபடப்படுகிறார். அந்தப் பெயர் ’வில்லனு’க்கு வைக்கப்படவில்லை. படத்தில் அவர் வில்லன் அல்ல. அவர்தான் படத்தின் உணர்ச்சிகரமான மையம். படத்தின் ஆன்மா என்னும் கருத்து அவர் வழியாகவே சொல்லப்படுகிறது.

அது பறவையியல் நிபுணர் சலீம் அலியின் சாயல் கொண்ட கதாபாத்திரம். சலீம் அலி இன்றிருந்தால், மனிதர்களின் இந்த தொழில்நுட்ப, நுகர்வு வெறியைப் பார்த்தால் சங்கைக் கடித்திருக்கமாட்டாரா என்ற எண்ணத்திலிருந்து உருவானது. அந்தக் கதாபாத்திரம் முதலில் கமல்ஹாசனுக்காக உத்தேசிக்கப்பட்டது, அவருக்காகவே எழுதப்பட்டது. ஆகவேதான் மரபு சார்ந்த பலவிஷயங்கள் அவருக்காகச் சேர்க்கப்பட்டன.

அது ஏன் பக்‌ஷிராஜன்? நம் மரபில் பறவையின் இடமென்ன என்று அந்தப்பெயரே சுட்டுகிறது. ‘பொன்னுலகாளீரோ புவனமுழுதாளீரோ நன்னயப்புள்ளினங்காள்!” என்ற நம்மாழ்வாரின் வரியே அந்தக் கதாபாத்திரத்தை, பக்‌ஷிராஜன் என்ற பெயரை உருவாக்கியது. அவருடைய வரியை அடிக்கோடிட்டுத்தான் படம் முடிகிறது. ஆகவே என் பெருமதிப்பிற்குரிய நாங்குனேரியின் அறிஞரையும், பறக்கையின் தெய்வத்தையும், நம்மாழ்வாரையும் கவுரவப்படுத்தியதாகவே நினைத்துக்கொள்கிறேன்.

ஏன் ஜடாயு என்ற பொருளில் பக்‌ஷிராஜன்என்ற பெயர் அளிக்கப்பட்டிருக்கிறது என படம் பார்த்தால், அல்லது அக்‌ஷய் குமாரின் தோற்றங்களைப் பார்த்தாலே புரியும். பி.ஏ.கிருஷ்ணனே கூப்பிட்டு அவரிடம் சிலர் மெயில் அனுப்பி அவர் தந்தைபெயரை பயன்படுத்தியிருப்பதைச் சுட்டிக்காட்டியதாகச் சொன்னார். விரிவாகவே விளக்கிவிட்டேன்" என்று ஜெயமோகன் பதிவிட்டுள்ளார். 

தீபாவளிக்கு வெளியாகி வெற்றிபெற்ற 'சர்கார்' படத்துக்கும் ஜெயமோகனே வசனம் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

2.0 படம்அக்‌ஷய்குமார் கதாபாத்திரம்பக்‌ஷிராஜன்இயக்குநர் ஷங்கர்எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author