Published : 28 Nov 2018 11:56 AM
Last Updated : 28 Nov 2018 11:56 AM

தமிழகத்தைவிட அமெரிக்காவில் 3டியில் அதிகமாக வெளியாகும் ரஜினியின் 2.0: டிக்கெட் விலை எவ்வளவு?

உலகம் முழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் ரஜினியின் 2.0 திரைப்படத்தை திரையிட தமிழகத்தை போலவே அமெரிக்காவிலும் அதிகஅளவில் திரையிட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தைவிட அதிகஅளவில் 3டியில் திரையிடப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. இந்தியளவில் பெரிய முதலீட்டில் உருவாகியுள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை நவம்பர் 29) தேதி படம் வெளியாகிறது.  இப்படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர் தணிக்கை அதிகாரிகள். படத்தை திரையிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் இந்த திரைப்படம் திரையிடப்படுகிறது. 2.0 மொத்தம் 7 ஆயிரத்து 500 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ஒரே நேரத்தில் 2.0 வெளியாகிறது.

இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 2 ஆயிரத்து 500 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. மற்றவை கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் திரையிடப்படுகிறது. அமெரிக்காவை போலவே, கனடாவிலும் 2.0 திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் வெளியாகிறது.  ஜி2ஜி1 என்ற நிறுவனம் அமெரிக்காவில் 2.0 விநியோக உரிமையை வாங்கியுள்ளது.

வட அமெரிக்கா முழுவதும் மொத்தம் 800 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. லைகா வட்டார தகவல்படி இதில் 550 திரையரங்குளில் 3டியில் திரையிடப்படுகிறது. தமிழகத்தை விட இது அதிக எண்ணிக்கையாகும். 2.0 சினிமாவுக்கான டிக்கெட்டை பொறுத்தவரை சராசரியாக 30 டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.2125) என்ற அளவில் நிர்ணியக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜி2ஜி1 நிறுவனத்தைச் சேர்ந்த மோகன் கூறுகையில் ‘‘2.0 திரைப்படம் பாகுபலியை விட கூடுதல் வெற்றியை பெறும் என எண்ணுகிறோம். எனினும்  போதிய அளவுக்கு 3டி திரையரங்குகள் கிடைக்காமல் இருக்கிறது. இதற்கு முன்பு வெளியான பல ரஜினி படங்களை விடவும் கூடுதலாக திரையங்குகளில் திரையிட ஏற்பாடுகள் செய்து வருகிறோம்’’ எனக் கூறினார்.

அமெரிக்காவில் இதுமட்டுமின்றி ஒரே திரையரங்குகளில் அதிகமான இருக்கைகள் இடம் பெறும் வகையில் இருக்கைகள் அமைப்பும் மாற்றப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஒரே ஷோவில் அதிகமானோர் 2.0 சினிமாவை கண்டுகளிக்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x