Published : 05 Nov 2018 03:52 PM
Last Updated : 05 Nov 2018 03:52 PM

இயக்குநர் முருகதாஸ் கவனமாக இருக்க வேண்டும்: நடிகை கஸ்தூரி வலியுறுத்தல்

திரைப்பட இயக்குநர் முருகதாஸ், இனியாவது கதைத் திருட்டு குற்றச்சாட்டுக்கு உள்ளாகாமல் கவனமாக இருக்க வேண்டும் என்று நடிகை கஸ்தூரி கூறினார்.

இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் கஸ்தூரி கூறியதாவது:

''ஆணோடு சம்பந்தப்பட்டு பேசப்படுவதால், தங்களது மதிப்பு உயரும் என்று எந்தப் பெண்ணும் நினைப்பது கிடையாது. பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கூட அதை வெளியில் கூறுவதில்லை. தங்களுக்கு நடக்கும் பாலியல் அவமானங்களை, கசப்பான மருந்தை சாப்பிடுவதுபோல விழுங்கும் பெண்கள், ஆண்டுக்கணக்கில் அதை மறக்கவும் முடியாமல், வெளியே சொல்லவும் முடியாமல் தவிக்கின்றனர்.

சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் மீது குற்றச்சாட்டு கூறுவதால், அந்தப் பெண்ணின் தரம் உயருவதில்லை. சுய விளம்பரத்துக்காக இதுபோன்ற தவறான குற்றச்சாட்டைப் பெண்கள் கூறுவதாக சிலர் கூறுகிறார்கள். நடிகைகள் உட்பட யாரும் சுய விளம்பரத்துக்காக குற்றம் சுமத்துவதில்லை. ‘மீ டூ’ வந்ததால் தான் பாதிக்கப்பட்ட பல பெண் களுக்கு தைரியம் ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில் பணமோ, பதவியோ இல்லாமல் பெரிய மனிதர்கள் மீது குற்றம் சுமத்த முடியுமா? பாலியல் குற்றச்சாட்டு மட்டுமல்ல, லஞ்சப் புகார் கூட கூற முடியாது.

பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டால், அதிலிருந்து விடுபடத்தான் அனைவரும் கருதுவர். புகார் கொடுக்க வேண்டுமென நினைக்க மாட்டார்கள். ஒரு சினிமாவின் கதையைக் காப்பியடித்து, மற்றொரு சினிமா எடுப்பது இப்போது மட்டும் நடப்பதல்ல. பெரிய நடிகர்கள் நடித்த சினிமாக்கள்கூட, வேறு படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே இயக்குநர் முருகதாஸ், ஒரு ஹாலிவுட் படத்தின் கருவை எடுத்து ‘கஜினி’ படத்தை இயக்கியுள்ளார். எனினும், பெரிய இயக்குநர்கள் மீது எழுதா கதைத் திருட்டு புகார், முருகதாஸ் மீது மட்டும் தொடர்ச்சியாக எழக் காரணம் என்ன? எனவே, அவர் இனியாவது கவனமாக இருந்து, மீண்டும் குற்றச்சாட்டு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு எல்ல இடத்திலும் சமத்துவம் கிடைப்பதில்லை. திரைத்துறையில் மேக்கப், லைட் மேன் போன்றவற்றில் பெண்களுக்கு அனுமதியில்லை''.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x