Published : 14 Nov 2018 05:31 PM
Last Updated : 14 Nov 2018 05:31 PM

1980-களின் நடிகர்கள் சந்திப்பு: நடிப்பு, நடனம் என அசத்திய நடிகர்கள்

1980-களில் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நடிகர்கள் கூட்டணி, ஆண்டுதோறும் சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கூட்டணியில் உள்ள நடிகர்களில் ஒருவர் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்வார். நடிகர்கள் ஒன்றுகூடி தங்களுடைய நட்பு, பழங்கால நினைவுகள் ஆகியவற்றைப் பேசி மகிழ்வர்.

2018-ம் ஆண்டுக்கான 80-களின் நடிகர்கள் சந்திப்பு நவம்பர் 10-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் 22 நடிகர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வோர் ஆண்டும் இந்தச் சந்திப்புக்கான வடிவமொன்று உருவாக்கப்படும். அதற்கேற்ப நடிகர்கள் ஆடை அணிகலன் அணிந்து வருவர். இந்த ஆண்டு டெனிம் மற்றும் டைமண்ட்ஸ் (வைரங்கள்) எனத் திட்டமிடப்பட்டிருந்தது.

சவேரா ஹோட்டலின் நீனா ரெட்டி, சுஜாதா முந்த்ரா, நிவேதிதா ஆகியோர் நிகழ்ச்சி நடந்த இடத்தை அலங்கரித்திருந்தனர். சோஃபா, பூக்கள், விரிப்புகள், ஜன்னல் திரைச்சீலைகள் எல்லாமே டெனிம் துணியால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. டெனிம் ஆடையில் அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளும் வைக்கப்பட்டிருந்தன.

முதலில், நடிகர்கள் 12 பேரும் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். வெள்ளை சட்டை, ப்ளூ ஜீன்ஸ் சகிதமாகவும், சிலர் டெனிம் ஜாக்கட்டுகளுடனும் வந்து சேர்ந்தனர். ஜாக்கி ஷெராஃப், ட்ரெண்டியான டெனிம் ஜாக்கெட்டில் வந்து கவனம் ஈர்த்தார். பின்னர் மோகன்லால் வந்தார். இந்த நிகழ்ச்சிக்காகவே போர்ச்சுகலில் இருந்து சென்னை வந்திருக்கிறார். அவரது பிரத்யேக சட்டையின் பின்னால் 80 என எழுதப்பட்டிருந்தது.

ஜீன்ஸ், குர்தி, டிசைனர் சேலைகள் என டெனிம் ரக ஆடைகளில் அணிவகுத்தனர் பெண்கள். பூனம் திலான், மும்பையில் இருந்து அனைவருக்கும் பரிசுப்பொருள் கொண்டு வந்திருந்தார். ஒவ்வொரு நடிகரின் புகைப்படத்துடன் கூடிய பிரத்யேக செல்போன் கூடு ஒன்றை அனைவருக்கும் கொடுத்தார்.

பின்னர் நடிகர்கள் அனைவரும் டம்ப் சராட்ஸ் விளையாடினர். வெற்றி பெற்றவர்களுக்கு அன்பளிப்பும் வழங்கப்பட்டது. நரேஷ், சத்யராஜ், ஜெயராம் ஆகியோர் சிவாஜி கணேசனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முக்கியமான தருணங்களை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தினர். எம்.ஜி.ஆர்., கமல்ஹாசனுக்கு மரியாதை செய்யும் வகையில் சில காட்சிகள் நடித்தனர்.

‘விஸ்வரூபம்’ படத்திலிருந்து ஒரு காட்சியை ஜெயராம் நடித்துக்காட்டி கைதட்டு வாங்கினார். பெண்கள் ‘கீதா கோவிந்தம்’ படத்திலிருந்து ‘இன்கம் இன்கம்’ பாடலுக்கு ஆடினர். மோகன்லால், கேரள படகுப்போட்டி போல் பாரம்பரிய பாடலுக்கு ஏற்ப படகுப்போட்டி மாதிரியை நடத்தினார்.

ராஜ்குமார் சேதுபதி, சுஹாசினி மணிரத்னம், குஷ்பூ சுந்தர், பூர்ணிமா, லிஸி லக்‌ஷ்மி ஆகியோர் நிகழ்ச்சிக்கு மெருகு சேர்த்தனர். பின்னிரவில் கேக் வெட்டிக் கொண்டாடினர்.  2019-ல் 10-வது ரீயூனியன் நடைபெறவிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x