Published : 20 Nov 2018 07:01 PM
Last Updated : 20 Nov 2018 07:01 PM

‘கஜா’ நிவாரண நிதியாக ரூ.1 கோடியே 1 லட்சம் வழங்குகிறது லைகா நிறுவனம்

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களின் புனரமைப்புக்காக ஒரு கோடியே ஒரு லட்ச ரூபாயை வழங்குவதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழகத்தைத் தாக்கிய ‘கஜா’ புயலால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளன. பல ஆண்டுகளாக செலவிட்டு வளர்த்த தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன. அதிலிருந்து விவசாயிகள் மீள பல ஆண்டுகள் ஆகும். ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன.

‘கஜா’ புயலில் இருந்து மீண்டுவர தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களால் ஆன உதவிகளைச் செய்து வருகின்றனர். சூர்யா, கார்த்தி, ஜோதிகா உள்ளிட்ட நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த உதவி செய்யப்பட இருக்கிறது. மேலும், நடிகர் விஜய் சேதுபதி 25 லட்ச ரூபாயும், சிவகார்த்திகேயன் 20 லட்ச ரூபாயும் அளித்துள்ளனர்.

தற்போது விஜய்யும் நிவாரண உதவிகள் செய்யத் தொடங்கியுள்ளார். முதலாவதாக, புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கிக் கணக்குக்கு 4.50 லட்ச ரூபாய் அனுப்பப்பட்டு வருகிறது. இப்பணத்தை வைத்து தேவையான நிவாரண உதவிகளை உடனடியாகத் தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரஜினியும் 50 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களைத் தன்னுடைய ரசிகர் மன்றம் மூலம் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்க இருக்கிறார். நாளை (நவம்பர் 21) இரவு சென்னையில் இருந்து பொருட்கள் லாரிகளில் புறப்படுகின்றன.

இந்நிலையில், லைகா புரொடக்‌ஷன்ஸ் ஒரு கோடியே ஒரு லட்ச ரூபாயை நிவாரணமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு இந்தத் தொகை வழங்கப்பட இருப்பதாக லைகா புரொடக்‌ஷன்ஸ் தெரிவித்துள்ளது.

விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் மூலம் படத் தயாரிப்பில் இறங்கிய லைகா புரொடக்‌ஷன்ஸ், தற்போது ரஜினியின் ‘2.0’, கமலின் ‘இந்தியன் 2’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x