Published : 21 Nov 2018 09:54 PM
Last Updated : 21 Nov 2018 09:54 PM

கஜா புயல் நிவாரணம்; உதவிக்கரம் நீட்ட சிம்பு புது ஐடியா

கஜா புயலால் உருக்குலைந்து போன டெல்டா மாவட்டங்களுக்காகவும் தங்கள் வாழ்வாதாரத்தையே தொலைத்துவிட்டு, இழந்துவிட்டு நிற்கிற அந்த மக்களுக்காகவும் எல்லோரும் உதவி செய்யும் வகையிலான வழியொன்றைச் சொல்லுகிறார் நடிகர் சிம்பு (எஸ்.டி.ஆர்).

இதுகுறித்து வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:

காவிரி டெல்டா மக்களுக்கு உண்டான பிரச்சினை நம் எல்லோருக்குமே தெரியும். இதுதொடர்பா நானும் சரி, என்னுடைய ரசிகர்களும் சரி. முடிந்த உதவிகளை அங்கே செய்துகொண்டிருக்கிறோம்.

எல்லோருக்குமே உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது. அந்தக் காசு அவர்களுக்கு போய் சேர்ந்ததா இல்லையா, கொடுத்தார்களா கொடுக்கவில்லையா என்கிற கேள்வியும் நமக்குள் இருக்கிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் நானோ என்னைப் போல் உள்ளவர்களோ கொடுக்கவேண்டும் என்று நினைத்தால், அதற்கு அரசாங்கமோ மற்ற தொண்டு நிறுவனங்களோ இருக்கின்றன.

ஆனால் ஒரு பாமரன், சாமானியன் நம்மால் முடிந்த ஒரு பத்துரூபாயைக் கொடுக்கவேண்டும் என்று நினைத்தால், என்ன செய்வார்? என்ன செய்வார்கள்? நம் தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு உதவி செய்ய, நம் எல்லோரும் சேர்ந்து உதவி செய்ய, ஒரு வழி இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

நாம் எல்லோருமே செல்போன் உபயோகிக்கிறோம். ஒரு காலர் டியூன்ஸ் பயன்படுத்துவதற்கு ஒரு பத்து ரூபாயோ எதுவோ செலவு செய்கிறோம். நமக்கு ஏதாவது செய்தி வேண்டுமென்றால் தகவல் வேண்டுமென்றால் அதற்கு பணம் கட்டுகிறோம். ஒரு ஷூவிற்கு ஓட்டுப் போடுகிறோம். இந்த செல்போன் நெட் ஒர்க் மூலமாக நாம் எல்லோரும் பணம் செலுத்துவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. இதற்கு எல்லா நெட்வொர்க்கும் இணைந்து பணியாற்றவேண்டும். யார் யார் எவ்வளவு பணமெல்லாம் கொடுத்திருக்கிறார்கள் என்கிற மொத்தப் பட்டியலையும் அரசாங்கம் வெளியிட்டு அதைப் பயன்படுத்துவதாக இருந்தால், இந்தந்த உதவிகளை செய்திருக்கிறோம் என்று அறிவிப்பதாக இருந்தால், நாம் எல்லோருமே சேர்ந்து இந்த விஷயத்துக்கு கரம் கோர்க்கமுடியும். இதைத்தான் சொல்லவிரும்புகிறேன்.

அப்படி நீங்களும் இது சாத்தியம் என்று நினைத்து செயல்பட விரும்பினால், #uniteforhumanity #unitefordelta என்ற ஹேஷ்டேக்கில் இதைக் கொண்டு சேருங்கள். இறைவன் இருக்கிறான். நல்லதுதான் நடக்கும்.

இவ்வாறு எஸ்.டி.ஆர். தன் வீடியோப் பதிவில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x