Published : 08 Nov 2018 09:03 PM
Last Updated : 08 Nov 2018 09:03 PM

இறங்கி வந்தது சர்கார் படக்குழு: சர்ச்சைக் காட்சிகளை நீக்க மறு தணிக்கைக்கு விண்ணப்பம்

அதிமுகவினர் போராட்டத்திற்குப் பணிந்தது 'சர்கார்' படக்குழு. சர்காரில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்க மறுதணிக்கைக்கு அனுப்ப விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

'சர்கார்' திரைப்படம் வெளியானதை அடுத்து அதில் உள்ள காட்சிகள் மிகப்பெரிய எதிர்ப்பைச் சந்தித்தது. படத்தில் தமிழக அரசின் விலையில்லாப் பொருட்களைத் தூக்கி எரிப்பது போன்றும் அதில் ஜெயலலிதாவின் படம் இருக்கும் காட்சியும் படத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதாவின் இயற்பெயரை படத்தில் வில்லி பாத்திரத்துக்கு சூட்டப்பட்டிருந்தது.

மேலும், தமிழக அரசின் இலவச திட்டங்களுக்கு எதிராக போராடத் தூண்டும் விதமாக படக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன, இது அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டும் செயல என அமைச்சர்கள் கண்டித்தனர். சட்ட அமைச்சர் சிவி சண்முகம் சட்ட நடவடிக்கைகளை படக்குழுவினர் எதிர்கொள்ள வேண்டும் என எச்சரித்திருந்தார்.

இன்று வழக்கு தொடர ஆலோசனையும் நடத்தினார். இந்நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை திரையிடக் கோரி மதுரையில் அதிமுகவினர் நடத்திய போராட்டம் கோவை, சென்னை என விரிவடைந்தது. அனைத்து இடங்களிலும் விஜய்யின் பேனர்கள் கிழிக்கப்பட்டன.

இதனால் இறங்கி வந்த படக்குழு, 'சர்கார்'  திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

''இன்று இரவு, எந்தெந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என முடிவு செய்து, நாளை மதியம் முதல் நீக்கப்பட்ட காட்சிகள் தவிர்த்து படத்தைத் திரையிடுவோம்.  தணிக்கை குழு அனுமதி பெற்று இதைச் செய்வோம்.

இதுதொடர்பாக, முருகதாஸ், விஜய்யிடம் நான் பேசவில்லை. தயாரிப்பு தரப்பு இந்த தகவலை அவர்களுக்குச் சொல்லியிருப்பார்கள். படத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இயற்பெயரை குறிப்பிடும் காட்சிகள், சத்தமின்றி பேசப்படும். அதிமுகவினர் போராட்டத்தைக் கைவிட வேண்டும்'' என்று திருப்பூர் சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில்  'சர்கார்'  படக்குழு தரப்பிலிருந்து மீண்டும் தணிக்கைக்காக அனுமதி கேட்டுள்ளதாகவும், தணிக்கை செய்து விரைவில் மறு தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டு படம் வெளியிட விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x