Published : 15 Nov 2018 05:28 PM
Last Updated : 15 Nov 2018 05:28 PM

என்ன பிரச்சினை வந்தாலும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் வெளியாகும்: சிம்பு உறுதி

என்ன பிரச்சினை வந்தாலும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் வெளியாகும் என்று சிம்பு உறுதியாகத் தெரிவித்தார்.

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. பொங்கல் வெளியீடு என்று படக்குழு அறிவித்துள்ளது. இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து சிம்பு முதலில் விநியோகஸ்தர்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று படக்குழுவினருக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

இதனால் இப்படத்தின் வெளியீட்டு நேரத்தில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவின. இதனால், தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், அதன் தலைவர் விஷாலுக்கும் எதிராக சிம்பு ரசிகர்கள் பலரும் வீடியோக்கள் வெளியிட்டு வந்தார்கள்.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் நிலவி வரும் பிரச்சினை குறித்து சிம்பு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

'' 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தின் பிரச்சினை ரொம்ப நாளாகப் போய்க் கொண்டிருக்கிறது. ’வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்துக்கு வந்திருக்கும் பிரச்சினையைப் போலவே மணிரத்னம் சார் படத்துக்கும் பிரச்சினை வந்தது. அப்போது தயாரிப்பாளர்கள் சங்கம் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்குமே பதிலளித்துவிட்டேன். இப்பிரச்சினை தொடர்பாக கடிதம் கேட்டார்கள். அதையும் கொடுத்துவிட்டேன். படமும் வெளியாகிவிட்டது.

’வந்தா ராஜாவாதான் வருவேன்’ படப்பிடிப்பு தொடங்கப்பட்ட போது, தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து கடிதம் கொடுத்தால் மட்டும் போதாது. உங்கள் தரப்பில் யாராவது வர வேண்டும் என்று கேட்டார்கள். உடனே என் அம்மா கவுன்சிலுக்குச் சென்று பேசினார்கள். அப்போது பிரச்சினை முடிவு வருவது போல் இருந்தது. நானும் நேரில் வரவேண்டும் என்ற சூழல் வந்த போது, போகாமல் இருந்தால் கவுன்சிலை அவமதிப்பது போல் ஆகிவிடும் என்பதால் நானே சென்று பேசினேன். பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து கதிரேசன் ஆகியோரிடம் பேசிவிட்டு தான் வந்தேன்.

இப்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கும் போது, கவுன்சிலுக்கு வர வேண்டும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதற்கு தான் என் ரசிகர்கள் கோபமாகியுள்ளனர். விஷாலுக்கு எனக்கும் என்னமோ பிரச்சினை என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படி எந்தவொரு பிரச்சினையுமே கிடையாது. இப்பிரச்சினை தயாரிப்பாளர் சங்கத்தில் நீண்ட நாட்களாக போய்க்கொண்டிருக்கிறது. இப்பிரச்சினையை முன்பே பேசி முடித்திருக்கலாம்.

ஒரு படத்தின் படப்பிடிப்புக்கு வரவில்லை உள்ளிட்ட விஷயங்களுக்குத் தான் பிரச்சினையாகும். ஆனால், இந்த விவகாரத்தில் ஒரு படம் வெளியாகி ஒரு வருடம் கழித்து பிரச்சினையாகிறது. தாமதமாக வந்து புகார் சொல்வதெல்லாம் புதிதாக இருக்கிறது. இதை எப்படி கவுன்சிலில் எடுத்துக் கொண்டார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், கவுன்சிலுக்கு மரியாதை கொடுத்துதான் ஆக வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக யார் மீதும் நான் பழிபோட விரும்பவில்லை. என்ன பிரச்சினை என்றாலும் அதை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்.

தனிப்பட்ட தாக்குதலில் என் ரசிகர்கள் ஈடுபட்டது தவறு தான். அதை தான் என் அறிக்கையிலும் கூறியிருந்தேன். யாருடனும் தனிப்பட்ட மோதலில் ஈடுபட என் ரசிகர்களை அனுமதிக்க மாட்டேன். அன்பு மட்டுமே அனைத்துக்குமே வழி. ரசிகர்கள் என் மீதான அன்பை வெளிப்படுத்துகிறார்கள். அதை நான் மதிக்கிறேன். தனிப்பட்ட தாக்குதலுக்கு மன்னிப்பு கோருகிறேன்.

என்னை நம்பி வந்த ஒருவர் கஷ்டத்தில் இருக்கிறார் என்று நியாயமாகத் தெரிந்தால் உதவி செய்வேன். அப்படி நான் செய்யாமல் இருக்கிறேன் என்றால் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்று தானே அர்த்தம். என்ன பிரச்சினை வந்தாலும், அதை மீறி ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’  படம் வெளியாகும்''.

இவ்வாறு சிம்பு தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x