Published : 26 Aug 2014 10:00 AM
Last Updated : 26 Aug 2014 10:00 AM

வங்கிகளில் உயர் பதவி பிரிப்பு: நிதி அமைச்சகம் பரிசீலனை

பொதுத்துறை வங்கிகளின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிகளை இரண்டாகப் பிரிப்பது குறித்து நிதி அமைச்சகம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. சமீப காலமாக வங்கிகளில் அதிகரித்து வரும் ஊழல் குற்றச்சாட்டுகளால் இத்தகைய முடிவை அரசு எடுத்திருப்பதாக மத்திய நிதி சேவைத்துறைச் செயலர் ஜி.எஸ். சாந்து தெரிவித்தார்.

கடந்த வாரம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பேசுகையில், பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகளை சிறப்பாக்க தொழில்முறை நிபுணர்களை நியமிப்பது குறித்து அரசு பரிசீலிப்பதாகத் தெரிவித்திருந்தார். கடன் வழங்குவது, சிறப்பான நிர்வாகம் உள்ளிட்டவற்றுக்கு இது உதவும் என எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.

வங்கிகளில் தொழில் முறையிலான நிர்வாகம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதால் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிகளை இரண்டாகப் பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகளை நிதி சேவைப் பிரிவு மேற் கொண்டுள்ளது என்று சாந்து கூறினார். இம்மாத தொடக்கத்தில் சிண்டிகேட் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எஸ்.கே. ஜெயின், பூஷண் ஸ்டீல் நிறுவனத்துக்கு கடன் வழங்குவதற்கான அளவை அதிகரிப்பதற்கு ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தவிர, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், தேனா வங்கி ஆகியவற்றில் நிதிமுறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. ரூ. 436 கோடிக்கு நிதி முறைகேடு நடந்திருப்பதாக தெரிய

வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் போட்டு வைத்திருந்த நிரந்தர வைப்புத் தொகையில் கையாடல் செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இவ்விரு வங்கி களிலும் தணிக்கை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. வங்கிகளில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிகளைப் பிரிக்குமாறு ஏற்கெனவே அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது.

தனியார் வங்கிகளில் இப்போது தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x