Published : 29 Oct 2018 09:27 AM
Last Updated : 29 Oct 2018 09:27 AM

சர்கார் திரைப்படத்தின் கதை பொதுவான கருவைக் கொண்டது: எழுத்தாளர் ஜெயமோகன் பேட்டி 

சர்கார் திரைப்படத்தின் கதை பொதுவான கருவைக் கொண்டது. பொதுவான கருவை அடிப்படையாகக் கொண்டு எழுதும் கதை திருடப்பட்டதாக ஆகாது என எழுத்தாளரும், சர்கார் திரைப்படத்தின் வசன கர்த்தாவுமான ஜெயமோகன் தெரிவித்துள்ளார்.

சேலம் தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற இலக்கிய விழாவில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மீ...டூ ஒரு சமூக பிரச்சினை. பணிபுரியும் இடத்தில் பெண் களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு குறித்தது. இது ஒரு கவன ஈர்ப்பு மட்டுமே. வரை யறுக்கப்படாத துறைகளில் இருந்த பிரச்சினை. மீ…டூ வராவிடில் இதுபோன்ற பிரச்சினை இருப்பது வெளியே தெரிந்திருக்காது.

இப்பிரச்சினையால் பெண் களின் வெற்றி தடுக்கப்படும். எனவே, மீ…டூ மூலமாக ஏற்பட்டுள்ள கவன ஈர்ப்பினை பயன்படுத்தி பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் காட்சி ஊடகங்கள் அதிகமாகிவிட்டதால், குழந்தைகளுக்கு நூல்களை வாசிக்க கற்றுத் தராவிடில், பின்னாளில் வாசிப்பு பழக்கம் அவர்களுக்கு வராமல் போய்விடும். காட்சி வழியாக பார்த்து அறிவை வளர்த்துக் கொள்ள முடியாது. மொழி வழியாக வாசித்து தான் அறிவை வளர்த்துக் கொள்ள முடியும்.

உலக அளவில் ஆங்கிலம் அறிவியல் மொழியாக வளர்ச்சி யடைந்து, பல நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்மொழி அறிவியல் மொழியாக வளர்ச்சியடையாமல் உள்ளது. எனவே, தமிழை பண்பாட்டு மொழியாகவும், நிர்வாக மொழியாகவும் வைத்துக் கொண்டு அறிவியல் மொழியாக ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனியான வழிபாட்டு முறை உள்ளது. சபரிமலை விவகாரம் ஒரு மதம் சார்ந்தது. அந்த மதத்தை சார்ந்தவர்கள் வேண்டுமென்றால் மாற்றத்தை கொண்டு வரலாம். அதில் மற்றவர்கள் கருத்து சொல்வது, மாற்றத்தைக் கொண்டு வருவது சரியாக இருக்காது.

மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் கருத்து சுதந்திரம் உள்ளது. நம்மிடம் உணர்ச்சி அதிகம். அந்த உணர்ச்சியால் கட்டுப்பாட்டினை இழந்து விடாமல், நாமே கட்டுப்பாடாக பேச வேண்டும். எனவே, கருத்து சுதந்திரத்தை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் அது கைவிட்டு போய்விடும்.

சர்கார் திரைப்படத்தின் கதை ஒரு பொதுவான கருவை கொண்டது. தேர்தலின்போது நடிகர் சிவாஜியின் ஓட்டை ஒருவர் போட்டு விடுகிறார். நாடு முழுவதும் அறியப்பட்ட ஒரு பிரபலத்தின் ஓட்டை வேறொருவர் போட்டு விடுகிறார். இது எல்லோரும் அறிந்தது. இதுபொதுவான கரு. இந்த கருவை வைத்து எல்லோருமே கதை எழுதலாம். அதற்காக எல்லா கதைகளும் ஒன்றாகிவிடாது. சர்கார் திரைப்படத்தின் கதை பொதுவான கருவைக்கொண்டது. அது திருடப்பட்டது என்பது சரியல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x