Published : 31 Oct 2018 03:09 PM
Last Updated : 31 Oct 2018 03:09 PM

பாடல்கள் காப்புரிமை வழக்கு குறித்து இளையராஜா விளக்கம்

தனது பாடல்களின் காப்புரிமை வழக்கு குறித்து இசையமைப்பாளர் இளையராஜா விளக்கம் அளித்த்துள்ளார்.

காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களைப் பயன்படுத்தியதாக எக்கோ என்ற நிறுவனம் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் இளையராஜா புகார் அளித்தார். இந்தப் புகாரின் மீது காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதை எதிர்த்து, எக்கோ நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வி.முரளீதரன், இந்தப் பிரச்சினை ஒரு சிவில் பிரச்சினை என்பதால், கிரிமினல் புகார் அளிக்க முடியாது என்று கூறி, இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து இளையராஜா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “எனது பாடல்களைப் பயன்படுத்தத் தடை கோரி, நான் 2014-ம் ஆண்டு தொடர்ந்த வழக்கின்படி இன்றளவும் எனது பாடல்களைப் பயன்படுத்த நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட தடை செல்லும். அந்தத் தீர்ப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. அதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு கூடிய விரைவில் வெளிவரும்.

நான் 2010-ம் ஆண்டு எக்கோ நிறுவனத்தின் மீதும், அதன் உரிமையாளர் மீதும் போலீஸில் புகார் அளித்தேன். சட்டத்துக்குப் புறம்பாக என் பாடல்களை விற்பனை செய்வதாக அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் சிடிக்களைப் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்தனர். அந்தக் குற்றவியல் நடவடிக்கை வழக்கை ரத்து செய்யக்கோரி அவர்கள் தொடுத்த வழக்கின் தீர்ப்பே நேற்று வெளிவந்தது.

அதில் நீதியரசர், எக்கோ நிறுவனத்தின் மீதான குற்றவியல் நடவடிக்கையை மட்டுமே ரத்து செய்துள்ளார். அதில் எனது காப்புரிமை செல்லாது என அறிவிக்கவில்லை. இந்த வழக்குக்கும், எனது பாடல்களின் உரிமை மீதான வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ஒரு சில செய்தி நிறுவனங்கள், ‘இளையராஜா பாடல்கள் வழக்கு ரத்து’ என்றும், ‘இளையராஜா காப்புரிமை வழக்கு தள்ளுபடி’ என்றும் முன்னுக்குப் பின் முரணான செய்திகளை வெளியிடுகின்றன. 4 ஆண்டுகள் வழக்கு நடத்தி, இறுதித் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் நிலையில், இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரப்படும்.

ஏற்கெனவே தவறான செய்தி வெளியிட்டவர்கள், இந்த மறுப்பையும் வெளியிடக் கோருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார் இளையராஜா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x