Published : 02 Oct 2018 05:31 PM
Last Updated : 02 Oct 2018 05:31 PM

மிஷ்கின் ஏற்படுத்திய வலி ஆறாது; எனக்காக உருவாக்கப்பட்ட படம்தான் சைக்கோ - நடிகர் மைத்ரேயா உருக்கம்

மூன்று ஆண்டுகளாக ஒரு விஷயத்துக்காக காத்திருந்து அது நடக்காது என்று தெரியவரும்போது ஏற்படும் வலி எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஆறாது என்று நடிகர் மைத்ரேயா உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

'சவரக்கத்தி' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தனது படத்தின் நாயகன் இவர் தான் என்று மைத்ரேயாவை அறிமுகப்படுத்தி வைத்தார் இயக்குநர் மிஷ்கின். அப்படம் வெளியான பிறகு, தனது அடுத்த படத்துக்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

ஆனால், திடீரென்று மிஷ்கின் - பி.சி.ஸ்ரீராம் - சாந்தனு இணைந்து படம் பண்ணவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இது தொடர்பாக சாந்தனு பேட்டிகள் அளித்து வந்தார். அதுவும் சில நாட்கள் தான், அதே கதையை உதயநிதி ஸ்டாலினை வைத்து தொடங்கி தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

கோயம்புத்தூரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் நித்யா மேனன், ராம், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், நாயகன் மைத்ரேயா வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

''என் பெயர் மைத்ரேயா. இயக்குநர் மிஷ்கின் கொடுத்த பெயர். ஜூலை 10, 2015 அன்று மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்துக்கான ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் நான் ஹீரோ. என் தந்தையின் நிறுவனம்தான் தயாரிப்பதாக இருந்தது.

இதற்காக ஒரு மிகப்பெரிய தொகையை மிஷ்கினுக்கு என் தந்தை அட்வான்ஸாகக் கொடுத்தார். எந்தவொரு தயாரிப்பாளரும் ஒரு இயக்குநருக்கு இவ்வளவு பெரிய தொகையை அட்வான்ஸாகக் கொடுத்திருக்க மாட்டார்கள். இந்தப் படம் ஒப்பந்தமான பிறகு “இனி நான் தான் உனக்கு அப்பா, அம்மா, குரு, பிதாமகன் எல்லாம்” என்று மிஷ்கின் என்னிடம் சொன்னார்.

இந்நிலையில் என் தந்தையிடம் மிஷ்கின் ஒரு கோரிக்கை வைத்தார். அதாவது ‘சவரக்கத்தி’ என்ற ஒரு படத்தை தான் தயாரிப்பதாகவும் அந்தப் படம் முடிந்த பிறகு நவம்பர் 2015-ல் இந்தப் படத்துகான வேலைகளைத் தொடங்குகிறேன் என்பதே அந்தக் கோரிக்கை. ஆனால் அந்த கெடுவுக்குள் அவரால் அந்தப் படத்தை முடிக்க முடியவில்லை.

அதன் பிறகு மார்ச் 2016-ல் மிஷ்கினுடன் பேசிக் கொண்டிருக்கும்போது விஷாலுடன் ஒரு படம் பண்ண வேண்டியுள்ளது. எனக்கு ஒரு 6 மாதம் வேண்டும் என்று கூறினார். ஒப்பந்தப்படி எங்களுக்குத்தான் முதலில் படம் பண்ண வேண்டும் என்று உள்ளது என்று நான் கூறியதற்கு “ஒரு தந்தை மகனிடம் கேட்கும் உதவியாக நினைத்து இந்த உதவியை எனக்கு செய்” என்றார்.

மேலும், ''சினிமா மீது சத்தியமாக துப்பறிவாளனுக்குப் பிறகு உன்னோடுதான் படம் பண்ணுவேன். அதில் நீ தான் ஹீரோ'' என்று வாக்குறுதி கொடுத்தார். இதை என் தந்தையிடம் கூறினேன். தந்தையும் ஆறு மாதம் தானே என்று சம்மதித்தார். ஆனால் 'துப்பறிவாளன்' எடுத்து முடிக்க 2017 ஆகிவிட்டது. அதன்பிறகு மிஷ்கினின் மேனஜர் ஜோயலிடம் “எப்போ சார் நம்ம படம் தொடங்கலாம்” என்று கேட்டேன். அதற்கு அவர், “இப்போது மிஷ்கின் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். உங்கள் படத்துக்கான கதை விவாதங்களிலும் ஈடுபட்டிருக்கிறார். விரைவில் பட வேலைகள் தொடங்கும்” என்று பதிலளித்தார்.

அதன் பிறகு மிஷ்கின் 'சைக்கோ' என்ற படத்துக்கு ஒப்பந்தமாகியிருப்பதாக கேள்விப்பட்டேன். இது பற்றி மிஷ்கினிடம் கேட்டபோது “ஆம். புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். உங்களுக்குப் படம் பண்ண முடியாது. இப்போதைக்கு அட்வான்ஸ் பணமும் திருப்பித் தர முடியாது” என்று கூறினார்.

'சைக்கோ' படத்தின் கதை எனக்காக உருவாக்கப்பட்டது. இது மிஷ்கினுக்கே தெரியும். இந்தப் படத்தின் கதாபாத்திரத்துக்காக பயிற்சி எல்லாம் எடுக்கச் சொன்னார். இவ்வளவு நாள் காக்க வைத்து விட்டு இப்போது அந்தக் கதையை வேறு ஒருத்தருக்காக செய்கிறார். இந்த 3 ஆண்டுகளில் என்னை அணுகிய 4,5 இயக்குநர்களிடம் “மிஷ்கினுக்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டோம்” என்று கூறி அனுப்பி விட்டேன். என்னை அணுகிய இயக்குநர்கள் படம் எடுத்து முடித்து தற்போது ரிலீஸ் செய்தே விட்டார்கள். மிஷ்கின் கூறியதைத்தான் நான் இதுவரை செய்தேன். என் தந்தை மிஷ்கினுக்கு கொடுத்த பணத்தை விட அவரிடம் காட்டிய மரியாதையும் அன்பும் அதிகம். மூன்று ஆண்டுகளாக ஒரு விஷயத்துக்காக காத்திருந்து அது நடக்காது என்று தெரியவரும்போது ஏற்படும் வலி எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஆறாது.

நீதிமன்றத்தை நாடலாம் என்று சிலர் கூறினார்கள். ஆனால் உச்சபட்ச நீதிமன்றம் என்பது மிஷ்கினின் மனசாட்சிதான். அந்த மனசாட்சியிடமே இந்த விஷயத்தை ஒப்படைக்கிறேன். நன்றி''.

இவ்வாறு அந்த வீடியோ பதிவில் மைத்ரேயா தெரிவித்திருக்கிறார்.

மைத்ரேயா பேசும் வீடியோ:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x