Published : 05 Aug 2014 09:33 AM
Last Updated : 05 Aug 2014 09:33 AM

‘கத்தி’ படத்தை விடாத சர்ச்சை: இலங்கை தொடர்பு இல்லை என விளக்கம்

விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ், சதீஷ் உட்பட பலர் நடிக்கும் ‘கத்தி’ படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கிறது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் தொடங்கியுள்ளது.

இப்படத்தை தயாரித்து வரும் லைக்கா நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்சவின் ஆதரவு பெற்ற நிறுவனம் என்று படம் தொடங்கிய நேரத்தில் செய்திகள் வெளியாயின. இதை தயாரிப்பு நிறுவனம் மற்றும் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்தனர். இதன் பிறகு அடங்கியிருந்த இந்த பிரச்சினை இப்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

செப்டம்பரில் இசை வெளியீடு, தீபா வளிக்கு ரிலீஸ் என்று படம் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நேரத்தில், இப்பிரச்சினையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர தயாரிப்பாளர் கருணா மூர்த்தி, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முடிவு செய்து தமிழர் அமைப்புகளைச் சந்தித்துப் பேசினர்.

‘‘தயாரிப்பாளர் கருணாவுடன் சேர்ந்து பழ.நெடுமாறன், தொல்.திருமாவளவன், சீமான் ஆகியோரைச் சந்தித்தோம். அவர்களுக்கு உரிய விளக்கங்களை அளித்தோம். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்திக்க இருக்கிறோம்’’ என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இந்நிலையில், தமிழர் அமைப்புகளைச் சந்தித்து என்ன பேசினார்கள், தமிழர் அமைப்புகள் என்ன முடிவு எடுத்திருக்கின்றன என்பதை அறிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசுவைத் தொடர்பு கொண்டோம்.

‘‘பட இயக்குநரும், தயாரிப்பாளரும் எங்களை சந்தித்தனர். தயாரிப்பு நிறுவனம் குறித்து விளக்கம் அளித்தனர். எங்களது முடிவை நாங்கள் இன்னும் கூறவில்லை. இலங்கை இனப் படுகொலைக்கு உடந்தையாக இருந்தவர்களின் பணத்தில் ‘கத்தி’ திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தால் அதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அப்படத்தை தமிழகத்தில் திரையிடக் கூடாது. இனப் படுகொலைக்கு உடந்தையாக இருந்தவர்களின் பணத்தில் தயாரிக்கப்பட்ட படம் என்றால் இயக்குநரும் தயாரிப்பாளரும் பதில் சொல்லியே ஆகவேண்டும்’’ என்றார் வன்னியரசு.

‘நாம் தமிழர்’ கட்சித் தலைவர் சீமானிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘தயாரிப்பாளர் கருணாமூர்த்தியும் இயக்குநர் முருகதாஸும் என்னை சந்தித்தனர். படம் குறித்து சில சர்ச்சைகள் கிளம்பியிருப்பதாகவும், அது உண்மையில்லை என்றும் என்னிடம் விளக்கினார்கள். ‘கத்தி’ படத்தில் ஈழ எதிர்ப்பாளர்களின் பங்களிப்பு இருக்குமேயானால் எனக்கு தகவல் வந்திருக்கும். ‘கத்தி’ படம் குறித்து இதுவரை யாரிடம் இருந்தும் இதுவரை எந்தவொரு தவறான தகவலும் வரவில்லை. அப்படியிருக்க அப்படத்தை எதிர்க்கும் அவசியம் எங்களுக்கு இல்லை. ஒருவேளை ‘கத்தி’ படத்தில் ஈழ எதிர்ப்பாளர்களின் பங்கு இருப்பதாக ஆதாரப்பூர்வமாக தெரியவந்தால் எதிர்ப்பை தெரிவிப்போம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x