Published : 05 Oct 2018 06:04 PM
Last Updated : 05 Oct 2018 06:04 PM

புத்தகம் மூலம்தான் உலகத்தை அறிந்துகொள்ள முடியும்: பா.இரஞ்சித்

‘புத்தகம் மூலம்தான் உலகத்தை அறிந்துகொள்ள முடியும்’ என இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.

திரைத்துறையில் உள்ளவர்களுக்கு உதவும் வகையில், ‘கூகை திரைப்பட இயக்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித். சென்னை, வளசரவாக்கத்தில் இதன் அலுவலகத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. ‘சாய்ரட்’ இயக்குநர் நாக்ராஜ் மஞ்சுளே, இயக்குநர்கள் ராம், லெனின் பாரதி, மாரி செல்வராஜ், நடிகை குஷ்பூ ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

திரைத்துறையில் உள்ளவர்கள் புத்தகம் வாசிக்க வேண்டும் என்பதற்காக, நண்பர்கள் உதவியுடன் நூலகம் ஒன்றையும் அமைத்துள்ளார் பா.இரஞ்சித். “புத்தகம் மூலம்தான் உலகத்தை அறிந்துகொள்ள முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

புத்தகம் மூலம்தான் பலவற்றை நானும் தெரிந்து கொண்டேன். உதவி இயக்குநராக இருந்தபோது, புத்தகங்களைத் தேடித்தேடி வாசித்தேன். அப்போதுதான், உதவி இயக்குநர்களுக்கு என ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்று தோன்றியது. வாசிப்பின் வழியாகவும், வாசித்ததை உரையாடுவதின் வாயிலாகவும் ஒரு படைப்பாளி நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

ஒரு படத்தைப் பார்த்தால், அதில் காட்சி வழியாக நமக்கு எல்லாம் காட்டப்பட்டு விடும். ஆனால், புத்தகம் படித்தால்தான் அந்த எழுத்துக்கு நாம் கற்பனை செய்ய முடியும்” என்று இந்த விழாவில் பேசினார் பா.இரஞ்சித்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x