Published : 04 Oct 2018 01:26 PM
Last Updated : 04 Oct 2018 01:26 PM

முட்டுக்கட்டை போட்ட விஷால்: கைகொடுத்த விஜய் சேதுபதி

விஷால் முட்டுக்கட்டை போட, தக்க சமயத்தில் கைகொடுத்துக் காப்பாற்றியிருக்கிறார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி நடிப்பில் இன்று ரிலீஸாகியிருக்கும் படம் ‘96’. த்ரிஷா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தை, ஒளிப்பதிவாளரான சி.பிரேம் குமார் இயக்கியுள்ளார். தேவதர்ஷினி, ஜனகராஜ், ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை, மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் நந்தகோபால் தயாரித்துள்ளார். ஆர்யா நடிப்பில் வெளியான ‘கலாபக் காதலன்’ படத்தின் மூலம் தயாரிப்பைத் தொடங்கிய இந்த நிறுவனம், ‘ரோமியோ ஜூலியட்’, ‘வீர சிவாஜி’, ‘கத்தி சண்டை’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளது. விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ படத்தை வாங்கி வெளியிட்டது.

ரிலீஸ் சமயத்தில் சில படங்களுக்கு பைனான்ஸ் பிரச்சினை வருவது போல, ‘96’ படத்துக்கும் பிரச்சினை வந்தது. ‘கத்தி சண்ட’, ‘96’ ஆகிய படங்களுக்கு வாங்கிய தொகையை செட்டில் செய்யுமாறும் பைனான்ஸியர்கள் நெருக்கினார்கள். அவை அனைத்தும் பேசி, காலை 6 மணிக்கு அனைத்து சிக்கல்களும் தீர்ந்து ரிலீஸ் உறுதியானது.

முட்டுக்கட்டை போட்ட விஷால்

காலை 6 மணிக்கு, ‘கத்தி சண்டை’ படத்துக்காகத் தன்னுடைய சம்பளத்தை செட்டில் செய்தால்தான் படத்தை ரிலீஸ் செய்ய விடுவேன் என்று முட்டுக்கட்டை போட்டார் விஷால். எவ்வளவு சமாதானங்கள் செய்தாலும் எடுபடாமல் போக, பட வெளியீட்டில் மீண்டும் சிக்கல் தொடங்கியது.

இந்த தருணத்தில் ‘96’ படத்துக்காக வாங்கிய 3 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டுக் கொடுத்தார் விஜய் சேதுபதி. அதுவும் தயாரிப்பாளர் நந்தகோபாலுக்குப் போதவில்லை. ஏனென்றால், விஷால் மற்றும் பைனான்ஸியர்களுக்காகப் பெரும் தொகை தேவைப்பட்டது. இறுதியில் சம்பளம் போக மேலும் 1 கோடி ரூபாய் கொடுத்தார் விஜய் சேதுபதி. இதன்மூலம் பிரச்சினை முடிவுக்கு வந்தது. ‘96’ படமும் சிக்கலின்றி வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளர்கள் அதிருப்தி

தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்கத்தான் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இருக்கிறது. ஆனால், அதன் தலைவராக இருக்கும் விஷாலே இப்படி ஒரு படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுப்பது சினிமா உலகினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ‘வேலியே பயிரை மேய்ந்தது’ போல இருக்கிறது என்கிறார்கள் சினிமாக்காரர்கள்.

விஷால் விளக்கம் அளிக்க வேண்டுகோள்

இப்பிரச்சினை குறித்து தயாரிப்பாளர் சதீஷ் குமார், “விஜய் சேதுபதி நடித்த ‘96’ படம், சில பிரச்சினைகளால் ரிலீஸுக்குத் தாமதமானது. இதன் காரணம் என்ன என்பதை நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது, நந்தகோபாலுக்கும், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கும் கடந்த காலங்களில் வரவு - செலவுகளில் ஏற்பட்ட பிரச்சினையே காரணம் என்பது தெரியவந்தது. அதை மனதில் வைத்துக்கொண்டு, விஷால் பெருந்தன்மையோடு(?) இந்தப் படத்தை ரிலீஸாகாமல் தடுத்து வைத்திருக்கிறார். அதைப் பற்றிக் கேட்பதற்காக அவருக்குப் போன் செய்தேன். ஆனால், அவர் எடுக்கவில்லை.

விஷாலுக்கு அப்படி ஏதாவது பிரச்சினை இருந்தால், அதற்கு மாற்று வழி ஏதாவது இருந்தால் யோசிக்கலாம். இத்தனைக்கும் விஜய் சேதுபதி தன் சம்பளத்தில் இருந்து 1 கோடி ரூபாய் தருவதாகச் சொல்லியிருக்கிறார். ஒரு தலைவர் என்பவர் கலந்து ஆலோசித்து படத்தை ரிலீஸ் செய்யப் பார்க்க வேண்டுமே தவிர, இப்படி செய்வது அழகல்ல. அதேபோல நந்தகோபாலிடம் வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கி வைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டுமே தவிர, இப்படி போனை எடுக்காமல் இருக்கக் கூடாது. முதலில் இந்த விவகாரத்தில் விஷாலில் நிலை என்ன என்பதை அவர் பகிரங்கமாக தெரியப்படுத்த வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தயவுசெய்து அந்த ஒற்றுமை கெட்டுப் போகும்படி செய்து விடாதீர்கள். விஷாலின் இந்தச் செயல் மிகவும் கண்டனத்துகுரியது” என்று தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x