Published : 16 Oct 2018 01:09 PM
Last Updated : 16 Oct 2018 01:09 PM

“வாய்ப்பு கேட்கும் தேவையில் நான் இல்லை” - லீனா மணிமேகலை பதில்

‘வாய்ப்பு கேட்கும் தேவையில் நான் இல்லை’ என இயக்குநர் சுசி கணேசன் மறுப்புப் பதில் அளித்துள்ளார் லீனா மணிமேகலை.

#MeToo ஹேஷ்டேக் இந்தியா முழுக்கப் பிரபலமாகி வருகிறது. உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் பலரின் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை, இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள சுசி கணேசன், ‘அவர் தன்னிடம் வாய்ப்பு கேட்டதாகவும், வாய்ப்பு தரவில்லை என்பதால் பழிவாங்குகிறார்’ என்றும் தெரிவித்துள்ளார். அவருடைய மறுப்புக்குப் பதில் அளித்துள்ள லீனா மணிமேகலை, ‘மனசாட்சியை விற்பவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?' என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முகநூலில் பதிவிட்டுள்ள அவர், “சுசி கணேசனின் மறுப்பே அவரைக் காட்டிக் கொடுக்கிறது. என் சொந்த வாழ்க்கை, என் மனதிற்கு உகந்த மிக மகிழ்ச்சியான வாழ்க்கை. அதன் வெற்றி - தோல்வியை அவர் எப்படித் தீர்மானிக்க முடியும்? கவிஞராக என் இடமென்ன என்று என் படைப்புகளும், இலக்கிய வாசக உலகமும் சொல்லும்.

அவர் எடுத்த படங்களைவிட, மிக நல்ல படங்களையே நான் எடுத்திருக்கிறேன். என் படங்களில் பொறுக்கிகள் ஹீரோக்கள் அல்ல. மனசாட்சியை விற்பவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

சுசி கணேசனைச் சந்திக்கும்போதே நான் கவிஞர், ஆவணப்பட இயக்குநர். வாய்ப்பு கேட்கும் தேவையில் நான் இல்லை. அவரைப் பற்றிப் பதிவு போட்டபிறகு நிறைய பத்திரிகையாளர்களும் பெண்களும், அவரைக் குறித்து அதி பயங்கரத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களுக்குத் தங்கள் அனுபவங்களைப் பகிரங்கப்படுத்தும் தைரியம் வாய்க்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x