Published : 10 Oct 2018 12:06 PM
Last Updated : 10 Oct 2018 12:06 PM

‘இவன் கையை வெட்டும் காட்சியில் கலங்கிப் போனேன்’; கமலிடம் சிவாஜி கூறியதை கேட்டு நெகிழ்ந்து போனேன்: வடிவேலு

இவன் என்னைய விட மதுரை பாஷை நல்லா பேசறான்டா என்று சிவாஜி கமலிடம் கூறியதைக் கேட்டு நெகிழ்ந்து போனதாக நடிகர் வடிவேலு பேட்டி அளித்துள்ளார்.

என்.எஸ்.கேவுக்குப் பின்னால் எளிய தமிழால் சாதாரண கிராமத்து மக்களிடமும் நகைச்சுவையைக் கொண்டு சேர்த்தவர் வடிவேலு. நகைச்சுவையில் தனக்கென தனி இடத்தை வைத்திருந்த வடிவேலுதான் மீம்ஸ்களின் நாயகன் என நெட்டிசன்களால் புகழப்படுகிறார்.

பிறர் மனம் நோகாவண்ணம் அனைவரும் ரசிக்கும்வண்ணம் நெருடல் இல்லாத நகைச்சுவைக்குச் சொந்தக்காரரான வடிவேலு சிறந்த குணச்சித்ர நடிகரும்கூட. அதை தேவர்மகனிலேயே நிரூபித்திருப்பார். எம் மகனில் படம் முழுவதும் வரும் கேரக்டரால் படத்துக்கு வலு சேர்த்திருப்பார்.

'பாபா' தோல்விக்குப் பின்னர் 'சந்திரமுகி' படத்தை ஆரம்பித்தபோது முதலில் வடிவேலுவை புக் பண்ணுங்க என்று தான் குறிப்பிட்டதாக ரஜினியே கூறியிருப்பார். அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களையும் வாழ வைத்தவர் வடிவேலு. அவரது பிறந்த நாள் இன்று. அவர் தனது பழைய நினைவுகளை தனியார் தொலைக்காட்சியில் பேட்டியாக அளித்துள்ளார்.

அதில் தனக்கு வாழ்வளித்த கடவுள் என கமல்ஹாசனைக் குறிப்பிட்டுள்ளார். ’தேவர் மகன்’ மட்டுமல்ல விஜயகாந்தின் ’சின்ன கவுண்டர்’ படமும் வடிவேலுவுக்கு திரையுலகில் கால் பதிக்க உதவியது. அரசியல் புயலில் சிக்கிய வைகைப் புயல் தனது வாய்ப்புகளை இழந்ததால் ரசிகர்களுக்குத்தான் நஷ்டம்.

வடிவேலு அளித்த பேட்டியில் சிவாஜி கணேசன் தன்னை வாழ்த்தியதைப் பெருமையுடன் குறிப்பிடுகிறார்.

“கமல் எனக்கு கடவுள் மாதிரி, என் வாழ்க்கையில் யூ டர்ன் செய்துவிட்டது கமல்ஹாசன்தான். ’என் ராசாவின் மனசிலே’ படத்தில் நடித்ததற்குப் பின்னால் என்னைக் கூப்பிட்டு சினிமா உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தது தேவர் மகன் படம்தான்.

கமல் சார் தேவர் மகனில் இசக்கி கேரக்டர் எனக்கு கொடுத்தார். என்னை நடிக்க வைத்து அவர் பக்கத்தில் அமர்த்தி வைத்து என்னை என்கரேஜ் செய்தார். சிவாஜி ஐயாவிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.

சிவாஜி ஐயா என்னை சுட்டிக்காட்டி கமலிடம் டேய் இந்தப் பய நல்லா நடிச்சிருக்கான்டா, மதுரை பாஷைய என்னைய விட இவன் தான்டா சுத்தமா பேசியிருக்கான் என்று தட்டிக்கொடுத்தார்.

அதுமட்டுமல்ல கையை வெட்டும் காட்சியில் நானே கலங்கிப் போனேன் நன்றாக நடிக்கிறாய்.  உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு என்று சிவாஜி வாழ்த்தினார். நான் அப்படியே இரண்டு இமயங்கள் இடையே கூனிக்குறுகி நின்று நெகிழ்ந்துபோனேன்'' என்று வடிவேலு பேட்டியில் தெரிவித்துள்ளார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x