Published : 26 Aug 2018 09:11 AM
Last Updated : 26 Aug 2018 09:11 AM

திரை விமர்சனம்: மேற்குத் தொடர்ச்சி மலை

தமிழகத்தின் தேனி மாவட்டமும், கேரளாவின் இடுக்கி மாவட்டமும் சந்தித்துக்கொள்ளும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வாழும் விளிம்புநிலை தோட்டத் தொழிலாளர்கள்தான் கதை மாந்தர்கள். ஏலக்காய் மூட்டைகளைத் தலைச்சுமையாக தூக்கிக்கொண்டு இடுக்கியின் மலை அடிவாரத்தில் கொண்டுபோய் சேர்க்கிற கூலித் தொழிலாளி ரங்கசாமி (ஆன்டனி). கை அகலமாவது சொந்த நிலம் வாங்கி, அதில் பாடுபட்டு முன்னேற வேண்டும் என்பது அவனது கனவு. பல போராட்டங்களுக்குப் பிறகு அவனை வந்தடையும் ஒரு துண்டு நிலமும் கைநழுவிப் போய், இழந்த நிலத்திலேயே அகதிபோல அவன் வேலை செய்யவேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்தப் பின்னணியையும் விரித்துச் செல்கிறது கதை.

கதையின் நாயகன் ரங்கசாமியின் வாழ்க்கைக் கதையை முதன்மைப்படுத்துவதோடு, சின்னச் சின்ன துணைக் கதாபாத்திரங்களின் கதைகளையும் கச்சிதமாகக் கோர்த்துக் கூறுவதன் வழியாக மேற்குத் தொடர்ச்சி மலையின் இன்றைய சித்திரத்தை ஒரு தொகுப்பாக காட்டுகிறார் அறிமுக இயக்குநர் லெனின் பாரதி.

ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஓர் அழகான, அழுத்தமான, சோகமான, நகைச்சுவையான கதை இருப்பது படத்தின் சுவாரசியம். ரத்தவாந்தி எடுத்தாலும் தனது மூட்டையை தான் மட்டுமே சுமக்க வேண்டும் என வைராக்கியம் காட்டும் வனகாளி, சேர்த்துவைத்த பணத்தோடு மகள் திருமணத்துக்காக மலையிறங்கி வரும்போது ஒற்றை யானைக்கு கணவன் பலியாகிவிட மனநிலை பாதிக்கப்படும் கிறுக்கு கிழவி, வெறுங்கையோடு மலைப் பகுதிக்கு வந்து ரியல் எஸ்டேட் அதிபராகும் லோகு, தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைக்காக திருமணம்கூட செய்துகொள்ளாமல் உழைக்கும் தோழர் சாக்கோ, கிண்டல் செய்பவர்களை கையில் கிடைப்பதைக் கொண்டு அடிக்கும் கங்காணி, தனக்காக பொதி சுமக்கும் கழுதைகளை அடித்துவிட்டு பின்னர் அவற்றைக் கொஞ்சும் மூக்கையா, பேத்தியை கரைசேர்க்க ஆட்டுரலில் மாவாட்டி தனியாளாக சாப்பாட்டுக் கடை நடத்தும் அடிவாரம் பாக்கியம்.. என ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு கதை.

பெரும்பாலான கதாபாத்திரங்கள் புதுமுகங்கள் என்றாலும், மண்ணின் மைந்தர்கள் என்பது பலம். நாயகன் ரங்கசாமியாக வருகிற ஆன்டனி உடல்வாகு, முகத்தோற்றத்தில் அச்சு அசலாக மலையடிவார மூட்டை தூக்கும் தொழிலாளி போலவே இருக்கிறார். அவர் மற்றும் அவரது மனைவியாக வருகிற புதுமுகம் காயத்ரி கிருஷ்ணாவின் நடிப்பு, வசன உச்சரிப்பு அற்புதம்.

மலையாள நடிகர் அபு வளையங்குளம், ஆறுபாலா, அந்தோணி வாத்தியார், பாண்டி உள்ளிட்டோரின் நடிப்பும் படத்துடன் நம்மை ஒன்றச் செய்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையடிவார மக்கள், ஏலக்காய் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மிக நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். ஒவ்வொரு காட்சியும் நிறைய செய்திகள் சொல்கின்றன. ரங்கசாமி, தான் வாங்கப் போகிற இடத்தை மனைவிக்கும், மகனுக்கும் அடையாளம் காட்டுவதற்காக அங்குள்ள ஒரு மரத்தில் தனது வேட்டியை அவிழ்த்து கட்டிவைக்கும் காட்சியில், உற்சாகத்தில் நம்மைக் கத்த வைக்கிறார் இயக்குநர். அவனது கனவு, மலையில் இருந்து உருண்டு கிழிந்து கொட்டுகிற ஏலக்காய் மூட்டைபோல சிதறும்போது, தேம்பித் தேம்பி நம்மையும் அழவைக்கிறார். தேனி மக்களின் மொழியை அட்சரம் பிசகாமல் அப்படியே கொண்டுவந்திருக்கிறார் வசனகர்த்தா ராசி தங்கதுரையின் உதவியோடு.

இரண்டே பாடல்கள் என்றாலும் கதையையும், களத்தையும் மனதுக்குள் கடத்துகிறது இளையராஜாவின் இசை. பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்துக்கு உயிர் என்றால், படத்தின் உடல் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு. அத்தனை பெரிய மலையின் அழகை 70எம்எம் திரைக்குள் அடக்கியிருக்கிறார். மக்கள் உழைப்பால் வரைந்த ஒத்தையடிப் பாதைகள், வளர்ச்சியின் பெயரால் உருவான கொண்டை வளைவுச் சாலைகள் தொடங்கி மேற்குத் தொடர்ச்சி மலையின் முகடுகள், தோட்டங்கள், எளிய மக்களின் வீடுகளையும் தனது ஒளிப்பதிவால் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.

உழைக்கும் மக்களுக்கு துரோகம் செய்த இருவர் கொல்லப்படும் காட்சி நாடகத்தனமாக இருப்பது, கதை நிகழும் காலத்தில் தெளிவு இல்லாதது என படத்தில் ஓரிரு குறைகளும் இருக்கின்றன.

வளர்ச்சி என்ற பெயரில், உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் தற்காலத்தின் கதையை எளியவர்களின் காவியமாகத் தந்திருக்கும் இயக்குநர் லெனின் பாரதியை பாராட்டி வரவேற்போம். படத்தைத் தயாரித்த விஜய் சேதுபதியின் கைகளுக்கு ஆயிரம் முத்தங்கள்!

சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த சமூகமும் தவறவிடக்கூடாத காவியம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’.இந்து டாக்கீஸ் கருத்து

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x