Published : 23 Aug 2018 12:06 PM
Last Updated : 23 Aug 2018 12:06 PM

8 வருடங்களுக்குப் பிறகு இரட்டை வேடங்களில் அஜித்

8 வருடங்கள் கழித்து ‘விஸ்வாசம்’ படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் அஜித்.

அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் தயாராகி வரும் படம் ‘விஸ்வாசம்’. அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு, கோவை சரளா, கலைராணி, ரமேஷ் திலக், போஸ் வெங்கட், நமோ நாராயணன் எனப் பலர் நடிக்கின்றனர்.

அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது முறையாகத் தயாராகும் படம் இது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. வெற்றி ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தின் பாடல்களுக்கான மிக்ஸிங், அமெரிக்காவில் நடைபெறுகிறது.

மதுரை மற்றும் தேனி மாவட்டங்களின் பின்னணியில் ‘விஸ்வாசம்’ படம் உருவாகிறது. இந்த இடங்களில் நேரடியாகப் படப்பிடிப்பு நடத்தினால் கூட்டம் சேர்ந்துவிடும் என்பதால், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் செட் போட்டு படமாக்கி வருகின்றனர்.

இந்த வருடம் தீபாவளிக்குப் படம் ரிலீஸாவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தத்தால் படப்பிடிப்பு தொடங்கத் தாமதமானதால், அடுத்த வருடம் பொங்கலுக்குப் படம் ரிலீஸாக இருக்கிறது.

இந்நிலையில், ‘விஸ்வாசம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று அதிகாலை 3.40 மணிக்கு வெளியாகியுள்ளது. சாய்பாபாவின் தீவிர பக்தர் அஜித் என்பதால், அவர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாமே வியாழக்கிழமைகளில் தான் நடைபெறும். அந்த வகையில், நல்ல நேரம் பார்த்து அதிகாலை 3.40 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், நரைத்த தலைமுடி, மீசை, தாடியுடன் ஒரு அஜித், இளமைத் தோற்றத்தில் ஒரு அஜித் என இரண்டு புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிப்பது உறுதியாகி விட்டது.

அஜித் இரண்டு வேடங்களில் நடித்து வெளியான கடைசிப்படம் ‘அசல்’. 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தப் படம் வெளியானது. 8 வருடங்கள் கழித்து மறுபடியும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் அஜித்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x