Last Updated : 07 Aug, 2018 09:38 AM

 

Published : 07 Aug 2018 09:38 AM
Last Updated : 07 Aug 2018 09:38 AM

இசைப் பணியே என் சுயசரிதை: கல்லூரி மாணவிகளிடம் மனம் திறந்த இளையராஜா

‘இசை வழியாக நான் செய்துகொண்டிருக்கும் பணியே என் சுயசரிதைதான். சுயம் ஒருபோதும் சரித்திரம் ஆகிவிடாது’ என்று கல்லூரி மாணவிகள் மத்தியில் இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.

இசையமைப்பாளர் இளையராஜா கடந்த ஜூன் 2-ம் தேதி தனது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது 75-வது பிறந்தநாள் ஆண்டைக் கொண்டாடும் விதமாக, சென்னை எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் நேற்று விழா நடத்தப்பட்டது. இதில் இசையமைப்பாளர் இளையராஜா, கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன், பேராசிரியைகள், மாணவிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் இளையராஜா பேசியதாவது:

மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத் தில் எனது ஊர். எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அங்கு கிடையாது. இசை கற்றுக்கொள்ளலாம் என்றால் அதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. அண்ணன் வரதராஜன், கீர்த்தனைகள் மீது ஆர்வம் மிக்கவர். அந்தப் பகுதியில் கம்யூனிஸ்ட் பிரச்சார கூட்டம் என் றால் அவரது நிகழ்ச்சி கட்டாயம் இருக்கும். ஆனால், அவரிடமும் நான் இசை கற்றுக்கொள்ள முடியாது. அவரது ஆர்மோனியப் பெட்டியைத் தொட்டாலே, பிரம்பை எடுத்துக்கொண்டு அடிக்க வருவார். இருக்கிற ஒரு ஆர்மோனியப் பெட்டியையும் நான் பழுதாக்கிவிடுவேனோ என்ற பயம்.

எப்படியாவது இசையை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அவருக்கு தெரியாமல் கற்க வேண்டும். அதனால், நானே ஆர்மோனியம் வாசிக்க கற்றுக் கொண்டேன்.

யாருக்கும் தெரியாத சம்பவம்

அப்புறம், இதையெல்லாம் அம்மா விடம் சொல்லி, ‘‘நான் மெட்ராஸுக்கு போய்டறேம்மா’’ என்றேன். வீட்டில் இருந்த ரூ.800 மதிக்கத்தக்க ரேடியோ பெட்டியை ரூ.400-க்கு விற்றுவிட்டு, பணத்தை என் கையில் திணித்த அம்மா, ‘‘இது போதுமா ராசா’’ என்றார்.

அதுமாதிரி அம்மா கிடைப்பாரா! யாராலும் அம்மாவை ஈடுசெய்யவே முடியாது.

இதுவரை நான் எங்கும் சொல்லாத இன்னொரு விஷயத்தை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.. அம்மாவிடம் அந்த 400 ரூபாயை வாங்கிக்கொண்டு வீட்டில் இருந்து புறப்படும்போது கேட்டார்.. ‘‘மெட்ராஸ் போய் என்ன செய்யப்போற?’’ என்றார். ‘‘இங்கு அண்ணன் கச்சேரி செய்வதுபோல நாங்கள் அங்கு சென்று லைட் மியூசிக், கச்சேரி நடத்துவோம். அப்படி வாய்ப்பு இல்லாவிட்டால், பிளாட்பாரத்தில் அமர்ந்து வாசிப்பேன்’’ என்றேன். ‘‘என்னப்பா இதெல்லாம்?’ என்று அம்மா பதறிப்போய்விட்டார்.

‘‘இல்லம்மா.. இங்கு அண்ணன் கச்சேரி நடத்தும்போது உண்டியல் ஏந்தி பணம் சேர்த்து, அதில் இருந்து ஒரு தொகையை வாங்கினோம். அங்கு போய் மக்கள் முன்பு பாடி நேரடியாக பணம் பெறுவோம். விரும்பு கிறவர்கள் தருவார்கள். இல்லாவிட்டால் விட்டுவிடுவோம்’’ என்று மென்மை யாக சொல்லி சமாளித்து, சமாதானப் படுத்தினேன்.

இறைவனுக்கு அடுத்தபடியாக, இந்த உலகில் எனக்கு இருக்கக்கூடிய ஒரே நண்பன் இந்த ஆர்மோனியம்தான்!

இவ்வாறு இளையராஜா கூறினார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாணவி கள் ஆர்வத்துடன் கேட்ட கேள்விகளுக்கு இளையராஜா சுவாரசியமாகவும், நெகிழ்ச்சியாகவும் பதில் அளித்தார்.

பெரும் உயரத்துக்கு போன பிறகும் பணிவாக இருக்கிறீர்களே, எப்படி?

அரசியல்வாதிகள்தான் தங்களை பொது இடங்களில் இப்படி காட்டிக் கொள்ளவேண்டும்.. அப்படி பிரதிபலிக்க வேண்டும் என நினைத்து, உள்ளுக்குள் ஒன்றை வைத்து, வெளியே எளிமை யாக, பணிவாக இருப்பதுபோல காட்டிக்கொள்வார்கள். நான் அதுபோன்ற நடிகன் அல்ல. என் இயல்பு என்னவோ அப்படித்தான் இருக்கிறேன்.

பலருக்கு ஊக்கம் தரும் பாடலைக் கொடுத்த உங்களுக்கு, ஊக்கம் தந்த பாடல் எது?

இந்த இளையராஜா உருவாக காரணமாக தூண்டுதலாக இருந்த பாடல் ’மாலைப் பொழுதின் மயக்கத்திலே’. இது எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த பாடல் என்பது தெரியும். ஆனால், கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் என்பது பிறகுதான் தெரியும். இந்த பாடலின் சரணத்தில் கண்ணதாசன் இப்படி எழுதியிருப்பார்..

‘இளமை எல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அடையாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்.’

பள்ளியில் படிக்கிற காலம் அது. நல்லா படிக்கணும் அவ்வளவுதான். பிற்காலத்தில் என்னவாக வேண்டும் என்பதெல்லாம் தெரியாது. பதினாலு, பதினைந்து வயதில் இளமை அப்படித்தானே போகிறது. கல்யாண வீடுகளில் கட்டப்பட்டிருந்த ஸ்பீக்கர் வழியே எனக்கு அறிமுகமான அந்த பாடல்தான் என் வாழ்க்கைக்கு தூண்டுதலாக அமைந்தது. என்னை வியக்கவைத்த பாடலும் அதுவே.

ஒரு குறிப்பிட்ட பாடலை குறிப்பிட்ட பாடகர்தான் பாட வேண்டும் என எப்படி முடிவெடுக்கிறீர்கள்?

எப்போதும் நான் பாடகரை முன்கூட்டியே முடிவு செய்வதில்லை. பாடலுக்கான இசைக் குறிப்புகளை உருவாக்கிய பிறகுதான், இந்த பாடலை யார் பாடினால் நன்றாக இருக்கும் என்பது புலப்படும். உடனே ‘எஸ்பிபி இருக்கிறாரா?’ என உதவியாளரை விட்டு தொடர்புகொள்வேன். அவர் இல்லையா, அடுத்து ஜேசுதாஸ். அவரும் வெளியூர் பயணம் என்றால் அடுத்து ஜெயச்சந்திரன், மலேசியா வாசுதேவனை தேடுவோம். யாருமே இல்லையா, கடைசியில் வேறுவழியின்றி நானே பாடிவிடுவேன்.

இந்த தலைமுறையைச் சேர்ந்த எங்களது ரசனையையும் ஈர்த்து, இரவுகளை நிறைக்கும் டியூன்கள் உங்களிடம் இருந்து அருவிபோல கொட்டுகிறதே, அதற்கு என்ன மந்திரம் வைத்திருக்கிறீர்கள்?

என் அம்மா எனக்குள்ளே இருக்கிறார் என்பதை உணர்வதால் அதெல்லாம் சாத்தியமாகிறது.

ரமண மகரிஷியைத் தொடர்ந்து, தற்போது ஷீர்டி சாய்பாபாவுக் காக பாடல் உருவாக்கிய அனுபவம் பற்றி?

அம்மா மூகாம்பிகாவை வழிபடும் போது அவர் எனக்கு ஒரு புத்தகத்தை அடையாளம் காட்டினார். அந்த புத்தக வாசிப்பு வடிவில் ரமண மகரிஷியை அடைந்தேன். என் உடம்பில் ஒரு அனுபவம் உண்டானது. அது வழியே அவரிடம் சரணடைந்தேன். ரமணர் என்னை எடுத்துக்கொண்டார். அதுபற்றி இன்னும் எவ்வளவோ பேசலாம். சிறு உரையில் அடக்கிவிடக்கூடிய அனுபவம் அல்ல அது.

எப்போது சுயசரிதை எழுதப் போகிறீர்கள்?

தனியாக சுயசரிதை என எழுத வேண்டுமா என்ன! நான் இப்போது இசை வழியாக செய்துகொண்டிருக்கும் பணியே என் சுயசரிதைதானே. சுயம் ஒருபோதும் சரித்திரம் ஆகாது. சுயம் சுயம்தான். உங்கள் ஒவ்வொருவரது வாழ்க்கையையும் செவ்வனே வாழ உங்களுக்குத் தெரியும். இதில் நான் என்ன சொல்லிவிடப் போகிறேன்.

ஒருவேளை எழுதுவதானால், உங்கள் குடும்ப உறவுகளை தவிர்த்து நீங்கள் குறிப்பிட நினைக்கும் 3 பேர் யார்?

நான் கஷ்டப்பட்ட காலத்தில் எனக்கு சாப்பாடு போட்டவர், குடிக்க தண்ணீர் கொடுத்தவர் வரை எல்லோருமே முக் கியமானவர்கள்தான். அவர்கள் எல்லோ ரையும்தானே நான் நினைத்துப்பார்க்க வேண்டும். இதே சென்னையில் நான், பாரதிராஜா, பாஸ்கர் அண்ணன் மூவரும் 3 நாட்கள் சாப்பாடு இல்லாமல் இருந்திருக்கிறோம். 3 பேர் என்று குறிப்பிட வேண்டுமானால், ஒருவர் மூகாம்பிகா, அடுத்து தன்ராஜ் மாஸ்டர், ஜி.கே.வெங்கடேஷ். இவர்கள் மூவரும் என் குடும்பம் இல்லை என்று எப்படி சொல்ல முடியும்?

இசையமைக்கும்போது உங்களுக்கு சவாலாக இருந்த சூழல் பற்றி?

இசையமைப்பதை கஷ்டப்பட்டு செய்யவே கூடாது. அப்படி கஷ்டப்பட்டு செய்தால் அது இசையே அல்ல. இசையைப் பொறுத்தவரை எனக்கு சவாலே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x