Published : 16 Aug 2018 07:31 PM
Last Updated : 16 Aug 2018 07:31 PM

“நயன்தாராவுக்காக ஸ்பெஷலா எதுவும் பண்ணலை” - ‘கோலமாவு கோகிலா’ இயக்குநர் நெல்சன் பேட்டி

‘நயன்தாராவுக்காக ஸ்பெஷலா எதுவும் பண்ணலை’ என ‘கோலமாவு கோகிலா’ படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்துள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நாளை (ஆகஸ்ட் 17) ரிலீஸாக இருக்கும் படம் ‘கோலமாவு கோகிலா’. ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தில், பிரதான வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

‘இந்து தமிழ்’  இணையதளத்துக்கு நெல்சன் அளித்த பேட்டி இது...

பாடல்கள், புரமோஷனல் வீடியோக்களைப் பார்க்கும்போது இந்தப் படத்தில் காமெடி அதிகமாக இருப்பது போலத் தெரிகிறதே?

காமெடியும் இருக்கும், அதைத்தாண்டி எமோஷன்ஸும் இருக்கும். சினிமாவில் இருக்க வேண்டிய எல்லா எமோஷன்ஸும் இந்தப் படத்திலும் இருக்கிறது.

படத்தின் கதையை எழுதியதுமே நயன்தாரா தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தீர்களா?

ஆமாம்... மிகப்பெரிய ஸ்டார், பெர்ஃபாமர், கமர்ஷியல் என எல்லாம் சேர்ந்து பார்க்கும்போது நயன்தாரா தான் என் கண்ணுக்குத் தெரிஞ்சாங்க. ஆரம்பத்தில் இருந்து முடிவு வரைக்கும் முழுவதுமாகக் கதை கேட்டாங்க. கேட்டு முடிச்சதும் ‘இந்தப் படம் பண்றேன்’னு சொல்லிட்டாங்க. அவங்களுக்காக என்று இந்தப் படத்தில் எதுவும் வலிந்து திணிக்கவில்லை. கதையோட்டத்துக்குள்ளேயே எல்லாம் அடங்கி இருக்கிறது.

‘கோலமாவு கோகிலா’வை ஆங்கிலத்தில் எழுதும்போது ‘KK’ என்றுதானே வரவேண்டும், எது எப்படி ‘COCO’ என்று மாறியது?

வேண்டும் என்றே அப்படித்தான் வைத்தோம். ‘கோலமாவு கோகிலா’ என்பதற்கு துணைப்பெயராக ‘COCO’ என்று இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. கொஞ்சம் வித்தியாசமாகவும் இருக்கட்டுமே என்று அப்படி வைத்துவிட்டோம்.

நிறைய பிரபலங்கள் நண்பர்களாக இருப்பதால் தான் நயன்தாராவை எளிதில் ரீச் செய்ய முடிந்ததா?

அவரை எனக்கு 10 வருடங்களுக்கு முன்பே தெரியும். அப்போது இருந்தே நட்பில் இருக்கிறேன். எப்போதாவது பேசிக் கொள்வோம். பெண்ணை மையப்படுத்திய கதையைத்தான் எடுப்போம் என்று எனக்கு ஐடியாவே இருந்ததில்லை. திடீர்னு ஒருநாள் இரவு சின்ன ஐடியா ஒன்று கிடைத்தது. அதை டெவலப் பண்ணப் பண்ண, கதையாக வந்து நின்றது. எனவே, நயன்தாராவிடம் பேசிப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தேன். அவரை ஏற்கெனவே தெரியும் என்பதால், ரீச் செய்வது ஈஸியாக இருந்தது.

ஜாக்குலின் இந்தப் படத்துக்குள் வந்தது எப்படி?

யுனிக்கான ஒரு குரல் அந்த கேரக்டருக்குத் தேவைப்பட்டது. நயனுக்கு முற்றிலும் வித்தியாசமாக இருக்க வேண்டும். நயன்தாராவுக்கு அமைதியான கேரக்டர். ஆனால், ஜாக்குலின் கேரக்டர் போல்டாக இருக்கும். இந்த கேரக்டருக்காக நிறைய பேரை ஆடிஷன் பண்ணோம். யாருமே செட்டாகவில்லை. ஷூட்டிங் தேதி நெருங்கியவுடன் தான், எங்களுடைய எதிர்பார்ப்புக்கு ஜாக்குலின் மினிமமாக இருந்தார். இந்த கேரக்டரில் புதுமுகம் ஒருவரைத்தான் நடிக்கவைக்க நினைத்திருந்தோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்த மாதிரி யாரும் கிடைக்காததால், ஜாக்குலினை ஃபிக்ஸ் பண்ணிட்டோம்.

‘கல்யாண வயசு’ பாடலுக்கான மொத்த ஐடியா என்பது ஏற்கெனவே கதையில் இருந்ததா அல்லது பின்னர் சேர்க்கப்பட்டதா?

கதையிலேயே அந்த ஐடியா இருந்தது; படத்தை ஆரம்பிக்கும்போதும் இருந்தது. ‘இரண்டு பாடல்கள் இருந்தாலே போதும்’ என்று தான் அனிருத்திடம் சொன்னேன். ஆனால், போகப்போக அது 5 பாடல்களாகி விட்டது. எனவே, ‘கல்யாண வயசு’ பாடல் வேண்டாம் என்று முடிவு செய்தோம்.

ஆனால், நாம் ஆரம்பத்திலேயே முடிவு செய்த பாடல்தானே... பரவாயில்லை, இருக்கட்டும் என்று விட்டுவிட்டோம். விஷுவலாகவும் அது நன்றாக இருந்ததால், எல்லோரும் ஒருமனதாக முடிவுசெய்து முதல் வீடியோ சிங்கிளாக அதை வெளியிட்டோம்.

சிவகார்த்திகேயன் பாடலாசிரியரானது எப்படி?

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனை ஏதாவது ஒரு விஷயத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று நினைத்திருந்தேன். நான் கேட்கும்போது, ‘கெஸ்ட் ரோலில் நடிக்கக் கூட ரெடி’ என்றார். ‘உங்க பாசம் புரியுது... அவ்வளவெல்லாம் வேணாம்’ என்று மறுத்துவிட்டேன். மொத்தப் படமும் ஷூட் செய்த முடித்த பிறகுதான் ‘கல்யாண வயசு’ பாடலை எழுதி, படமாக்கினோம். அதுவரைக்கும் சிவகார்த்திகேயன் படக்குழுவில் இடம்பெறவில்லை. ‘இந்த மாதிரி விஷயமெல்லாம் சிவாவுக்குத்தான் நல்லா வரும். அவரிடம் கேட்டுப் பார்க்கலாம்’ என்று அனிருத் தான் முதலில் சொன்னார். அப்படித்தான் ‘கல்யாண வயசு’ பாடலை சிவகார்த்திகேயன் எழுதினார். கடைசியில் இந்தப் பாடல் மட்டும்தான் படத்தில் இடம்பெற்றுள்ளது. மற்ற எல்லாமே புரமோஷன் பாடல்கள் தான்.

நிறைய பிரபலங்கள் உங்கள் நண்பர்களாக இருப்பதில் உள்ள ப்ளஸ், மைனஸ் என்னென்ன?

ப்ளஸ், ஈஸியா அவர்களை ரீச் பண்ணிடலாம். மைனஸ், கதை பிடித்து அவர்கள் என்னுடன் பணியாற்றினாலும், நட்புக்காகத்தான் பண்ணார்கள் என்று வெளியில் தெரியும்.

‘கபிஸ்கபா’ பாடலில் பிஜிலி ரமேஷ் டான்ஸ் ஆடியிருந்தாரே...

அவருடைய நடவடிக்கைகள் ரொம்ப க்யூட்டா இருந்த மாதிரி எங்களுக்குத் தோன்றியது. ஷூட்டிங்குக்கு முன்னாடியே அவரைப் பத்தி தெரிஞ்சிருந்தா, படத்திலேயே அவரை நடிக்க வைத்திருப்பேன். விக்னேஷ் சிவன் தான் எனக்கு பிஜிலி ரமேஷைப் பரிந்துரைத்தார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இயக்கிய அனுபவம், சினிமா இயக்குநராக எந்தளவுக்கு உதவியது?

ஒரு குழுவை எப்படி ஒருங்கிணைப்பது என்ற அனுபவம் அதில் இருந்து கிடைத்தது. அந்த அனுபவம், சினிமாவில் வேறு மாதிரி பயன்படும். விருது வழங்கும் நிகழ்ச்சிகளோ, லைவ் கான்செர்ட்டோ... ஒரு டெட்லைனுக்குள் பணியாற்ற வேண்டும். மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குகிறதா என்றால், இரவு 12 மணிக்குள் என்ன நடந்தாலும் நிகழ்ச்சியை முடித்துவிட வேண்டும். ப்ளோர்ல கூட்டத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது, மற்றவர்களை எப்படி கன்வின்ஸ் செய்வது போன்ற விஷயங்களை அதிலிருந்து கற்றுக்கொள்ளலாம். கலையாகப் பார்த்தால் இரண்டுமே வேறு வேறு. இரண்டுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நீங்கள் திருப்தி அடைகிற வரைக்கும் ஒரு புராஜெக்ட்டை வைத்து சினிமாவில் தேய்த்துக் கொண்டிருக்கலாம். டிவியில் அதெல்லாம் பண்ண முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x