

கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘மிடில் கிளாஸ்’. மேலும் ராதா ரவி, காளி வெங்கட், வேல ராமமூர்த்தி, குரேஷி உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ தயாரித்துள்ள இப்படம் நவ. 21-ம் தேதி வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர்கள் சுப்பிரமணிய சிவா, சுசீந்திரன், சக்திவேல், ஒப்பிலி கிருஷ்ணா, ஏ.வெங்கடேஷ், ரவிக்குமார், விஷால் வெங்கட், ராஜு முருகன், ஏ.ஆர்.கே.சரவணன் என பலர் கலந்து கொண்டனர்.
நடிகர் முனீஷ்காந்த் பேசும்போது, “இயக்குநர் கிஷோர் என்னிடம் நீங்கள் தான் ஹீரோ என்றார். நான் முடியாது என்றேன். கதை கேட்டபிறகு தான் தெரிந்தது, கதைதான் ஹீரோ என்று. உடனே ஒப்புக்கொண்டேன். இந்தப் படத்துக்கு நான் எதிர்பாராத பெரிய சம்பளத்தை மறைந்த தயாரிப்பாளர் டில்லி பாபு சார் கொடுத்தார். திறமைகளை மதித்து வளர்த்து விட்ட அவர் போன்ற பல தயாரிப்பாளர்கள் திரைத்துறைக்குத் தேவை” என்றார்.
நடிகை விஜயலட்சுமி பேசும்போது, “இப்படத்தில் ரசித்து நடித்தேன். இந்தக் கதைக்கு முனீஷ்காந்த் சார் தவிர வேறு யாரால் நடிக்க முடியும் எனத் தெரியவில்லை. அவருடன் நடித்தது மகிழ்ச்சி. நாங்கள் நினைத்ததை விட படம் சிறப்பாக வந்திருக்கிறது” என்றார்.