

சென்னை: கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகர் அபினய் (வயது 44) இன்று காலை காலமானார்.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான 'துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தில் தனுஷின் நண்பராக நடித்திருந்தவர் அபினய். அப்படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஜங்ஷன், சிங்காரச் சென்னை, பொன்மேகலை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தார். பின்பு பட வாய்ப்புகள் இல்லாமல் முடங்கினார். அவருடைய உடல்நிலையும் அவருக்கு ஒத்துழைக்கவில்லை.
இவர் டப்பிங் கலைஞராகவும் அறியப்படுகிறார். விஜய் நடித்த 'துப்பாக்கி' திரைப்படத்தின் வில்லன் வித்யூத் ஜம்வாலுக்கு பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் அபினய்க்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சைக்கு பணமில்லாமல் தவித்து வந்தார். இதை அறிந்த நடிகர் பாலா அவரை நேரில் சந்தித்து 1 லட்ச ரூபாய் வழங்கியிருந்தது நினைவுகூரத்தக்கது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நடிகர் அபினய் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.