

துல்கர் சல்மான், பாக்ய போர்சே, சமுத்திரக்கனி, ராணா உள்பட பலர் நடித்துள்ள படம் ‘காந்தா’. செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ளார். நவ. 14-ல் வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நடிகர் துல்கர் சல்மான் பேசும்போது, “இந்தப் படத்தின் கதையை 2019-ல் தான் கேட்டேன். தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இருப்பார். இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக காத்திருந்தேன்.
எங்கள் எல்லோருக்கும் தமிழில் மிக முக்கியமான படமாக ‘காந்தா’ இருக்கும். ‘அய்யா’ கதாபாத்திரத்துக்கு மிகப்பொருத்தமான நபராக சமுத்திரக்கனி இருந்தார். எங்களை விட இன்னும் அதிக ஆர்வமாக சமுத்திரக்கனி இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்தார். அவருடன் இணைந்து இன்னும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும். டைம் டிராவல் செய்வது போன்ற மகிழ்ச்சியை பீரியட் படங்கள் கொடுக்கும். இப்படமும் அப்படியொரு அனுபவத்தைக் கொடுத்தது” என்றார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் பேசும்போது, “1950-களில் இருந்த ஆளுமைகள், அவர்களுக்குள் இருந்த மனப்போராட்டம் இவற்றை வடிவமைத்து படமாக்கி இருக்கிறேன். சினிமாவை நேசித்த ஓர் அணி இருந்ததால் இந்தப் படத்தை சாத்தியமாக்க முடிந்தது” என்றார். படக்குழுவினர் கலந்துகொண்டனர்.