

அலியா பட் நடித்து வந்த ‘ஆல்ஃபா’ படத்தின் வெளியீடு அடுத்த ஆண்டுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
முன்னணி தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் பல்வேறு யுனிவர்ஸ் படங்களை உருவாக்கி வருகிறது. இதுவரை ஆண்களை வைத்தே உருவாக்கி வந்த இந்த நிறுவனம், முதன்முறையாக பெண் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி புதிய கதாபாத்திரம் ஒன்றை யுனிவர்ஸ் படங்களில் அறிமுகம் செய்கிறது.
‘ஆல்ஃபா’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அலியா பட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முதலில் டிசம்பர் 25-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், யுனிவர்ஸ் படங்களில் கடைசியாக வெளியான ‘வார் 2’ திரைப்படம் பெரும் தோல்வியை தழுவியது. இதனால் ‘ஆல்ஃபா’ படத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.
தற்போது டிசம்பர் வெளியீடு அல்லாமல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள். இன்னும் கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதிகட்டப் பணிகள் முடிவடையவில்லை என்று படக்குழு தெரிவித்திருக்கிறது. இதில் அலியா பட் உடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட எந்தவொரு அறிவிப்பையும் படக்குழு இதுவரை வெளியிடவில்லை. இப்படத்தினை ஷிவ் ராவில் இயக்கி வருகிறார்.