

’ஹனுமான்’ இயக்குநர் பிரசாந்த் வர்மா பெரும் சிக்கலில் மாட்டியிருக்கிறார். அதன் தயாரிப்பாளர் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து புகார் அளித்திருக்கிறார்.
பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா நடிப்பில் வெளியான படம் ‘ஹனுமான்’. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், உலகளவில் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது. இப்படத்தினை நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருந்தார். தற்போது அவருக்கும், இயக்குநர் பிரசாந்த் வர்மாவுக்கும் மோதல் வெடித்துள்ளது.
பிரசாந்த் சினிமாட்டிக் யுனிவர்சில் ‘ஜெய் ஹனுமான்’, ‘மஹாகாளி’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்குவதாக கூறி அட்வான்ஸ் தொகை வாங்கியிருப்பதாகவும், ஆனால் தனக்கு படம் இயக்கவில்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார். இந்த புகாரினை தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கங்களுக்கும் அனுப்பி வைத்தார். இந்த விவகாரம் இணையத்தில் பேச்சு பொருளாக ஆனது.
இது தொடர்பாக பலரும் பிரசாந்த் வர்மாவை குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார்கள். இது தொடர்பாக பிரசாந்த் வர்மா எச்சரிக்கையுடன் கூடிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உண்மை என்னவென்று தெரியாமல் சமூக ஊடகத்தினர், ஊடகங்கள் அனைத்தும் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. தன் மீதான குற்றச்சாட்டில் எந்தவொரு உண்மையும் இல்லை. தன் சார்பிலான அனைத்து விளக்கங்களையும் அளித்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், உண்மை என்னவென்று தெரியவரும் வரை காத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் பிரசாந்த் வர்மா.