

நடிகர் ஷாருக்கான் தனது 60-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் மும்பையிலுள்ள அவருடைய பங்களாவான மன்னத் முன்பு ரசிகர்கள் கூடுவது வழக்கம். அவர்களின் வாழ்த்துகளை ஏற்றுக்கொள்ளும் ஷாருக் கான் தனது பங்களாவின் மாடியில் நின்று அவர்களுக்கு நன்றி தெரிவிப்பார்.
நேற்றும் ஏராளமான ரசிகர்கள் அவர் வீட்டின் முன்பு கூடினர். இதனால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. ஆனால் அலிபாக் கடற்கரையில் இருக்கும் அவருக்கான பண்ணை வீட்டில் நெருங்கிய நண்பர்களுடன் அவர் பிறந்த நாளை கொண்டாடினார்.
இந்நிலையில் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘கிங்’ படத்தின் டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடி ஆக் ஷன் காட்சிகளுடன் இருக்கும் இந்த டீஸரில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஷாருக்கான் தோன்றுகிறார். இந்த டீஸர் இணையத்தில் வைரலானது.
இப்படத்தை ஷாருக் நடிப்பில் ‘பதான்’ படத்தை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். இதில் தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன், அனில் கபூர், ஜாக்கி ஷெராஃப், ராணி முகர்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் தயாரிக்கும் இதில் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் நடிகையாக அறிமுகமாகிறார். ரூ.200 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்தப் படம் அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது.